Saturday, October 04, 2008

ஈழ நாட்டிலே பத்து பார்ப்பனக் குடும்பம் தாக்கப்பட்டு இருந்தால்!!

ஈழத்தமிழர் பிரச்சினையும் சுருதி பேதமும்!

ஈழத் தமிழர் பிரச்சினை என்பது நீண்ட காலமாக இருந்து வந்தாலும் 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு அது உக்கிரம் அடைந்திருக்கிறது. அந்த நாட்டுக்குரிய மக்களான தமிழர்களை - எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்தத் தீவு முழுக்க முழுக்க சிங்களவர்களுக்கே சொந்தம் என்கிற பாசிச வெறியில் தமிழர்களை முற்றாக ஒழித்துக் கட்டியே தீருவது என்கிற தீப்பந்தத்தைக் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டனர்.

இதன் காரணமாக அத்தீவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி பாழ்பட்டுப் போனாலும், அதுபற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல் அத்தீவில் சொந்த மண்ணில் வாழக்கூடிய இன்னொரு குறிப்பிடத்தக்க இனத்தைப் பூண்டோடு அழித்து முடிப்பதற்காக, இராணுவத்துக்குப் பெரும் நிதியைச் செலவு செய்து, ஆயுதங்களையும், தளவாடங்களையும் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது அந்த நாடு.

ஒரு பேரினவாத அரசின் முழுத் தாக்குதல்களுக்கும் ஈடு கொடுத்து அங்கு வாழும் தமிழர்களைப் பாதுகாக்கும் பெரும் பணியில் விடுதலைப்புலிகள் அமைப்பு உயிரைத் துச்சமாக மதித்து களத்தில் நின்று கொண்டிருக்கிறது. அதைக்கூட கொச்சைப்படுத்தும் மகானுபவர்கள் பத்திரிகைகள், எழுத்தாளர்களுக்குத் தமிழ் நாட்டில் பஞ்சமில்லை.

உலகத்தையே வளைத்து எழுதும் இந்தப் பார்ப்பன ஏடுகள், அய்.நா.வின் அலுவலகம் ஒன்றை கொழும்பில் தொடங்குவதற்குக் கூட தடை போடும் சிங்கள அரசின் போக்கினைப்பற்றி கண்டித்து எழுதிட அவர்களின் எழுதுகோல்கள் வேலை நிறுத்தம் செய் கின்றன.

ஈழ நாட்டிலே பத்து பார்ப்பனக் குடும்பம் தாக்கப்பட்டு இருந்தால், இந்நேரம் அய்.நா. மன்றமே அதிரும் அளவுக்கு எழுதுகோல் தேரை ஓட்டியிருப்பார்களே!

நரேந்திர மோடி என்ற நவீன நீரோ மன்னன் இனப்படு கொலைக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் சோ போன்ற பார்ப்பனர்கள், தம் இனத்தைப் பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்தும் இடத்திற்குத் தள்ளப்பட்ட விடுதலைப்புலிகளைப் பார்த்து பலாத்காரவாதிகள் என்று பட்டம் சூட்டுவது வாயால் சிரிக்கக் கூடிய தகுதியையும் பெற்றதன்று.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஈழத் தமிழர்கள் குறித்து அக்கறை கொண்ட கட்சிகள்தான் பெரும்பாலும். அவை தங்கள் தளத்தில் நின்று ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்படுவதற்கான ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றன.

இடதுசாரிகளைப் பொறுத்தவரை தொடக்கத்தில் இந்தப் பிரச்சினையில் பார்வையைச் செலுத்தத் தவறியிருந்தாலும், அண்மைக்காலமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதே!

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் (1.10.2008), இந்தப் பிரச்சினையில் தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் சுருதி பேதம் வேண்டாம் - ஒத்த கருத்துடன் குரலை உயர்த்துவோம் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.

இதுபோன்ற பொதுப் பிரச்சினைகளில் கருநாடகம், கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து கூட பாடம் கற்றுக்கொள்ள தமிழ் நாட்டுக் கட்சிகள் தவறுவது கெட்ட வாய்ப்பேயாகும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் - தேவையில்லாமல் தி.மு.க.வை யும், ஆட்சியையும் விமர்சனம் செய்துள்ளனர். அவரவர்களுக்கு இருக்கும் அரசியல் அரிப்பைத் தீர்த்துக்கொள்ள, ஒரு கட்சி அரும்பாடுபட்டு ஏற்பாடு செய்துள்ள மேடை தானா கிடைத்தது?

அப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி இருந்திருக்கவேண்டாமா? இந்தப் பிரச் சினையில் மாநில அரசுக்குக் கோரிக்கைகளை வைக்கலாம்; இந்தந்த வகையில் செயல்பட வேண்டும் என்று கூறலாம்; அதில் ஒன்றும் குற்றம் கிடையாது. ஆனால், குற்றப் பத்திரிகை படிப்பது - அக்கட்சியின் கற்பைப்பற்றி எல்லாம் ஆராய்வது தேவைதானா?

அதேநேரத்தில், ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் அவர்களின் நிலையில் எந்த அளவு செய்ய முடியும் என்று ஒன்று இருக்கிறது - அதனை மறந்துவிட முடியுமா?

ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் மனப்பாங்கு என்ன என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றுதானே. அதற்காக ஆட்சியையே கூட இழந்ததுண்டு. அரசியல் நோக்குக்காக எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று பேசுவது முதிர்ச்சிக்கு அடையாளமல்ல.


சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருப்பதுபோல தோன்றினாலும், அதெல்லாம் இங்கு ஒன்றும் கிடையாது; அரசியலில் பல நிலைகள் எடுத்திருந்தாலும், இந்தப் பிரச்சினையில் நாங்கள் ஒன்று திரண்டு நிற்கிறோம் என்று காட்ட முயலுவதுதான் எதிரிகளை நடுங்கச் செய்யும். இதுபற்றி ஆசாபாசமின்றி உரத்த முறையில் சிந்திப் பார்களாக!

--------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் - 4-10-2008

No comments: