Friday, May 08, 2009

தொலைநோக்குப் பார்வை தேவை!

நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மற்ற மற்ற மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டாலும், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை வித்தியாசமான பிரச்சினைகள் தலை தூக்கி நிற்கின்றன.

நடைபெறவிருப்பது மக்களவைத் தேர்தல்; இந்தத் தேர்தலில் தேசிய கட்சிகள் பல்வேறு மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து மாநிலங்களிலும் தனித்து நிற்கக் கூடிய அளவுக்கு எந்தத் தேசிய கட்சிகளும் இந்தியாவில் இப்பொழுது இல்லை.

மாநில அளவில் மாறுபட்ட நிலையிலும்கூட மத்திய ஆட்சியில் கூட்டணி வைத்துக்கொண்டிருந்த நிலையும் இந்தியாவில் உண்டு; எடுத்துக்காட்டாக மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரசும் எதிர் துருவத்தில் இருந்தாலும் மத்தியில் காங்கிரசோடு இணைந்து செல்லும் நிலையெல்லாம் இருந்திருக்கிறது.

கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் காங்கிரசை எதிர்த்து நிற்பார்கள்; மற்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு ஆதரவு காட்டுவார்கள்.

குறிப்பிட்ட மாநிலங்களில் காங்கிரஸ்பற்றி குற்றமாகத் தெரிவது வேறு மாநிலங்களில் தெரியாமல் மறைந்து போய்விடும் - இப்படி ஒரு விசித்திரமான அரசியல் போக்கு இந்தியாவில் உண்டு.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தி.மு.க. கூட்டணியில் மூன்றாண்டு இருந்த இடதுசாரிகள் அகில இந்திய அளவில் அக்கட்சிகளின் தலைமையெடுத்த முடிவுக்கிணங்க தி.மு.க.வின் எதிர் அணியில் தஞ்சம் புகுந்துள்ளன.

இந்தப் புதிய சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல, மூன்றாண்டுகள் வரை தி.மு.க. ஆட்சியில் தெரிந்திராத அறிந்திராத குறைபாடுகள், இப்பொழுது திடீரென்று தெரிய ஆரம்பித்திருக்கின்றன போலும்! குற்றப் பத்திரிகையைப் படிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதுவரை கடுமையாக இவர்களால் விமர்சிக்கப்பட்ட அ.இ. அ.தி.மு.க. புதிய கூட்டணி உறவு என்ற நிலையில் பாராட்டப்படும் நிலையை அடைந்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிடலாம்.

தமிழக அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. மற்றும் பா.ம.க. கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டை வைத்து எதிர் காலத்தில் தமிழக அரசியல் கட்சிகளிடையே கூட்டணி சம்பந்தமாக பல்வேறு கருத்துகளை பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன. அப்படிப்பட்ட செய்திகளில் ஒன்றுதான் அ.தி.மு.க.வுடன் இடதுசாரிக் கட்சிகள் எதிர்காலத்தில் தேர்தல் உறவு வைத்துக் கொள்ளும் என்ற செய்தி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இந்தக் கருத்தை நான் மறுக்கிறேன்.

ஏனெனில், தமிழகத்தில் மதவெறி அபாயம் கவ்வியிருந்த நேரத்தில், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்குப் பெரும் பின் னடைவை ஏற்படுத்திய கட்சிதான் அ.இ.அ.தி.மு.க. இன்றுவரை மக்கள் நலம் பயக்கக் கூடிய திட்டங்களைத் தீட்டவோ அல்லது மத நல்லிணக்கத்தை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லவோ அ.தி.மு.க. முன்வரவில்லை. அப்படிப்பட்ட அ.தி.மு.க. வோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இடதுசாரிக் கட்சிகளோ கூட்டணி வைத்துத் தேர்தலில் போட்டியிடுவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. (தீக்கதிர், 21.6.2008).

- இவ்வாறு கூறியிருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் என். வரதராசன் ஆவார்.

இந்தக் கருத்துக்குப் பதவுரையோ, பொறுப்புரையோ தேவைப்படாது. இந்தத் தெளிவான நிலையை எடுத்தவர்கள் இப்பொழுது அதற்கு நேர்மாறான ஒரு நிலையை எடுத்துள்ளார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.

அ.தி.மு.க.மீது வைத்துள்ள குற்றச்சாற்று என்பது சாதாரணமானது அல்ல; அடிப்படையான ஆழமான குற்றச்சாற்று ஆகும். இந்த 11 மாதங்களில் அ.தி.மு.க. தன் நிலைப்பாட்டில் மாற்றம் பெற்றதும் இல்லை. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்சினையான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ராமனைக் காட்டி முடக்கும் அ.தி.மு.க.வின் நிலை ஒன்று போதாதா?

உண்மை நிலைகள் இவ்வாறு இருக்க, தாங்கள் இருக்கும் அணி இலட்சிய அணி என்றும், இயற்கையான அணி என்றும் பேசுவதெல்லாம் யாரை ஏமாற்ற? பொதுமக்களின் பாமரத்தனம் கைகொடுக்கும் என்று நினைத்தால் அதைவிட மோசடி வேறு ஒன்று இருக்கத்தான் முடியுமா?

ஈழத் தமிழர் பிரச்சினையில் கூட தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் அடிப்படையில் மாறுபாடுகள் இருக்கின்றன.

அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குள்ளும் இப்பிரச்சினையில் மாறுபட்ட நிலைப்பாடுகள் உண்டே! அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகள் பிரச்சினையில் ஜெயலலிதா கொண்டுள்ள அழுத்தமான கருத்தினை அக்கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.வோ, பா.ம.க.வோ ஏற்றுக்கொள்கின்றனவா?

தொடக்கத்தில் இருந்ததைவிட இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் போக்கில் மாறுதல்கள் தெரியத் தொடங்கியுள்ளன. தி.மு.க.வை நம்பி மத்தியில் மீண்டும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைக் கொண்டு வந்தால் ஆக்க ரீதியான முறையில் மேலும் புதிய முடிவுகளை மேற்கொள்ளும் நிலையை தி.மு.க. கண்டிப்பாக உருவாக்கும்.

காரணம் தொடர்ச்சியாக இந்தப் பிரச்சினையில் தி.மு.க.வுக்கு சீரான அக்கறையிருந்து வந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாதே!

இந்த நிலையில் ஈழப் பிரச்சினையைக் காரணமாக்கி மத்தியில் பா.ஜ.க.வை அமர வைத்தால் ஈழப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக் காது; மேலும் மிகக் கடுமையான சீரழிவை நாடு சந்திக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுவிடும்; மதச்சண்டைகள் தெருக்களில் வழிந்து ஓடிக்கொண்டிருக்கும். வரும் தேர்தலில் ஒரு திசையில் மட்டும் பார்வை செலுத்தாமல் பல நோக்கிலும் தொலைநோக்கோடு அணுகவேண்டியது பகுத்தறிவுள்ள அனைவரின் கடமையாகும். வெறும் உணர்ச்சிகள் கைகொடுக்காது - எந்த இடத்திலும் அறிவை ஆளுமை உடையதாக வைத்திருக்கவேண்டும்.

---------------"விடுதலை" தலையங்கம் 8-5-2009

No comments: