Friday, March 25, 2011

இலவசங்களைக் கேலி செய்வோர் ஜெயலலிதாவின் இலவசங்கள்பற்றி எழுதுவார்களா?
வறுமை அதிகரிப்பின் அடையாளமே இலவசங்கள் அதிகரிப்பு என்று அதிமுகவோடு கூட்டு வைத்திருக்கும் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கூறுகிறது. அக்கட்சியின் அதிகாரப்பூர்மான ஏடான தீக்கதிரில் (21.3.2011 பக்கம் 3) கூறப்பட்டுள்ளது.

அதேபோல அதிமுகவின் ஆலோசகராக இருக்கக்கூடிய திருவாளர் சோ ராமசாமி இலவசங்கள்பற்றி என்ன சொல்லு கிறார்? இன்று வெளிவந்துள்ள துக்ளக் அட்டைப் படம் என்ன சொல்லுகிறது?

கிரைண்டரையோ, மிக்சியையோ, லேப் டாப்பையோ கலைஞர் கொடுத்தால் அதற்குப் பெயர் வசந்த் அண்ட் கோ விளம்பரமாம் - சோ எழுதுகிறார்.

இப்பொழுது அவர் விழுந்து விழுந்து ஆதரிக்கும் இவர் ஆலோசகராக இருக்கும் ஜெயலலிதா இலவசங்களை அள்ளி விட்டிருக்கிறாரே -

கலைஞராவது மிக்சி அல்லது கிரைண்டர் இலவசம் என்கிறார்; ஜெயலலிதாவோ மின்விசிறி, மிக்ஸி, டி.வி. மூன்றையும் இலவசமாகத் தருவேன் என்கிறாரே, 20 கிலோ அரிசி இலவசம் என்கிறாரே - இது மட்டும் வசந்த் அண்ட் கோ விளம்பரம் இல்லையோ!

ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் கண்டுள்ள இலவசங்கள்பற்றி அடுத்த துக்ளக்கில் இதே பாணியில் கிண்டல் செய்வாரா? பதில் சொல்லுவாரா?

இது அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வமான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். என்ற பத்திரிகை.

இதில் ஒரு கார்ட்டூன் வெளிவந்துள்ளது.


என்ன தெரியுமா?

35 கிலோ அரிசி இலவசமாகக் கலைஞர் சொல்லியிருக் கிறாராம் - அதற்காக அரிசி கடத்தல்காரர்கள் சங்கத்திலே இருந்து பெரிய மாலையைத் தூக்கிக் கொண்டு வாழ்த்த வந்திருக்கிறார்கள் என்று கார்ட்டூன் போட்டுள்ளது. இன்று காலை வந்த நமது எம்.ஜி.ஆரில் இந்தக் கார்ட்டூன் வெளி வந்துள்ளது. பாவம் - அதிமுக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அவர்களுக்கு என்ன தெரியும்? ஜெயலலிதா என்ன சொல்லப் போகிறார் என்று நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் உள்ளவர்களுக்கு என்ன தெரியும்?

இலவசமாக அரிசி கொடுத்தால் கள்ள மார்க்கெட்காரர் களுக்கு மகிழ்ச்சி என்று கார்ட்டூன் போட்டுவிட்டது.

கலைஞராவது வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசம் என்றார். ஜெயலலிதாவோ குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறி இருக்கிறாரே - நமது எம்.ஜி.ஆர். ஏட்டின் கார்ட்டூன்படி - இது அரிசி கடத்தல்காரர்களுக்குக் கொள்ளை லாபமோ!

(பலத்த கைதட்டல்; வெடிச் சிரிப்பு!)
- சென்னைப் பெரியார் திடல் சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் 24.3.2011


அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை காமெடி சூரியன் தேவை ஜெயலலிதா தோல்வியுடன் ஒப்புதல்

தமிழர் தலைவர் தெளிவான விளக்கம்

சென்னை, மார்ச் 25- அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை காமெடி அறிக்கை. சூரிய வெளிச்சம் தேவை என்று ஜெயலலிதா ஒப்புக்கொண்டது. அவரது தோல் வியையே காட்டுகிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையை ஈ அடிச்சான் காப்பியாக அவசரமாக அச்சடிக்கப் பட்ட ஒன்று என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை பெரியார் திடலில் தி.மு.க அணியை ஆதரிக்க வேண்டும்-ஏன்? என்னும் தலைப்பில் நேற்று (24.3.2011) சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

நம்பகத்தன்மை இருக்கிறதா?

வருகிற ஏப்.13ஆம் தேதி 14ஆவது சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. மக்களிடையே யாருக்கு வாக்களிக்க வேண்டும்; யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்கிற கடமை தேர்தலிலே நிற்காத, சமுதாயப் புரட்சி இயக்கமான தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகத்திற்கு வழிகாட்டவேண்டிய தன்மை-நம்பகத் தன்மை யாரிடம் இருக்கிறது? எந்த ஆட்சி வந்தால் சமுதாய நலன், இன நலன் காப்பாற்றப்படும் என்பதை இன்று நேற்று அல்ல; தந்தை பெரியார் அவர்களுடைய காலத்திலிருந்தே வழக்க மாக நடைமுறையிலே பின்பற்றி வருகின்ற ஓர் இயக்கமாகும்.

யாரை ஆதரிக்க வேண்டும்?

திறந்த மனதோடு இருக்கக்கூடிய பொதுமக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய அளவுகோல் என்ன? பெரியார் இந்தத் தேர்தலைப் பற்றி என்ன சொல்லுகிறார்? யாரை ஆதரிக்கச் சொல்லுகிறார்? எப்பொழுதும் தமிழ்மக்கள் எதிர்பார்ப்பது வழமையான ஒன்றாகும். தந்தை பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்திற்கு எந்தவித சுயநலமோ, பதவிக் கண் ணோட்டமோ, விருப்பு-வெறுப்பு என்பதோ என்றைக்கும் இருந்தது கிடையாது.

நம்முடைய மக்களின் நலன் முக்கியம். மக்களின் இழிநிலையைப் போக்க எந்தக் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்பதை தந்தை பெரியார் சொல்லியதற்குப்பிறகு அதற்குப் பிறகு அவரைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்ற பெரியார் தொண்டர்களாகிய எங்களுக்கும் அந்தக் கடமை உண்டு.

அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலை

அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படுவார்கள். நாங்களோ அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலைப்படக் கூடிய வர்கள். எனவே அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையைப் பற்றிய கவலை திராவிடர் கழகத்திற்கு உண்டு. எவ்வளவு சோதனைகள் எங்களுக்கு ஏற்பட்டாலும் அறிவார்ந்த முறையிலே சமுதாயத் திற்குத் தேவையான, சமுதாயத்தை முன்னேற்றக் கூடிய கருத்துகளைச் சொல்லுகிறவர்கள் நாங்கள்.

தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் பற்றிய நூல் பாமர மக்கள் ஏமாந்து விடக்கூடாது. எச்சரிக்கையாக இருந்து ஓட்டுப் போட வேண்டும் என்பதற்காக தி.மு.க ஆட்சியின் சாதனைகளும் அ.தி.மு.க அணியின் வேதனைகளும் என்னும் தலைப்பில் நாங்கள் தயாரித்த நூலை நீங்கள் வாங்க வேண்டும். மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் ஏராளமான தகவல்கள் இந்த நூலிலே உள்ளன.

துளி அளவும் மாறாமல் கலைஞரின் பணி

நமது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஈரோடு குருகுலத்திலே பயின்றவர். அவர் அன்றைக்கு எந்த முடிவோடு பயின்றாரோ அந்த எண்ணம் இன்றளவும், துளி அளவும் மாறாமல் அன்றைக்கு தான் ஏற்றுக்கொண்ட லட்சியம் என்னவோ அதே லட்சியத்தோடு, மாறாமல், ஆட்சி என்பது மக்களுக்குத் தொண்டாற்றக்கூடிய ஒரு வாய்ப்பு என்று கருதி, நாள்தோறும் மக்கள் நலனே முக்கியம் என்று கண்ணும் கருத்துமாகப் பணியாற்றிக் கொண்டு வருகின்ற முதல்வர் கலைஞர் அவர்களின் தகத்தகாய பொற்கால ஆட்சியில் பயன் பெறாதவர்களே கிடையாது.

திருவாரூரில் கலைஞர் பேச்சு

திருவாரூரில் நேற்று கலைஞர் அவர்கள் பேசும்பொழுதுகூட, நான் யாரையும் எதிர்த்துப் பேசி இங்கே போட்டியிட வரவில்லை. எல்லோரும் எனக்கு உறவினர்கள் என்ற பந்தத்தோடு, பாசத்தோடுதான் வந்திருக்கிறேன். என் மண்ணை நேசிக்கிறேன்; திருவாரூர் மக்களை நேசிக்கிறேன் என்று பண்போடு, அரசியல் நனி நாகரித்தோடு பேசினார்.

யார் வரக்கூடாது என்பதற்கு பதினாயிரம் காரணங்கள்

தேர்தலில் யார் வர வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. ஆனால் யார் வரக்கூடாது என்பதற்குப் பதினாயிரம் காரணங்கள் உண்டு. ஏப்.13 அன்று நீங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று பொத்தானை அழுத்தும்பொழுது ஒளிவிடுகின்ற வெளிச்சம்தான் அடுத்து 5ஆண்டுகாலம் தமிழ கத்தை ஒளிரச் செய்ய நிர்ணயம் செய்யப் போகிறது.

எங்கள் பணி-எக்ஸ்ரே பணி

எங்களுடைய பணி என்பது எக்ஸ்ரே போன்ற பணி. உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகக் காட்டுகின்ற பணி. ஃபோட்டோகிராபி பணி அல்ல - டச் செய்து அழகாகக் காட்டுவதற்கு. எக்ஸ்ரேயில் உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகக் காட்டினால்தான் நோயாளிக்கு அடுத்த கிசிச்சையைச் செய்ய முடியும்.

இந்த நாட்டிலே இப்பொழுது நடைபெறுகின்ற போராட்டம் வெறும் அரசியல் போராட்டமல்ல. இனப் போராட்டம்; ஆரியர்-திராவிடர் போராட்டம். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால், கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வது போன்ற நிலைக்குத்தான் நாம் ஆளாக நேரிடும்.

கதாநாயகன், கதாநாயகி

2006இல் தி.மு.க. தேர்தல் அறிக்கையை கலைஞர் வெளியிட்டார். அதை கதாநாயகன் என்று அன்றைக்குச் சொன்னார்கள். 2011இல் தி.மு.க வெளியிட்டிருக்கின்ற தேர்தல் அறிக்கையோ கதாநாயகி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. நல்ல கதாநாயகனும், நல்ல கதாநாயகியும் சேர்ந்தால் நல்ல குழந்தை பிறக்கும். அது சமதர்மக் குழந்தையாக வரும். சமதர்ம ஆட்சி தமிழகத்திலே மலரும். கலைஞர் அவர்கள் 7000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தார்.

கல்விக்கடன் ரத்து

இப்பொழுது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் முழுவதும் ரத்து என்று அறிவித்தார் (கைதட்டல்).

இந்தப் பிள்ளைகளுக்கு கலைஞர் தாயுமானார், தந்தையுமானார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு கலைஞர் ஆட்சி இருக்கிறது. தலைசிறந்த மனிதாபிமானத்தின் உச்சமாக ஆட்சி திகழ்கிறது.

முதலில் மனிதனுக்கு மூளை சரியாக இயங்க வேண்டும். அப்புறம் வயிறு இயங்க பார்க்கப்படும். கலைஞர் ஆட்சியில் மூளை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார்கள். நமது இன எதிரிகளும் மூளைக்குத்தான் விலங்கு போட் டார்கள். எனவேதான் மூளை சரியாக இருக்கவேண்டும் என்றும், எங்கும் கல்வியைப் பரவச் செய்தார் கலைஞர்.

பசியாத நல்வயிறு
பார்த்த துண்டோ!
என்று புரட்சிக் கவிஞர் எழுதினார்.

பசியாத வயிறு கிடையாது. பணம் நிறைய சேர்ந்தாலும் பசியாத வயிறு இருக்கும். நோய் வந்தாலும் பசி எடுக்காது.

புரட்சிக்கவிஞர் அப்படிச் சொல்லவில்லை. பசியா நல்வயிறு பார்த்ததுண்டோ என்று கேட்டார். பசியாத வயிறு இருக்கக்கூடாது என்று கருணையோடு நினைத்தார் அண்ணா. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொன்னார் அல்லவா?
அண்ணா சொன்னார்- ஒரு படி நிச்சயம்

வறுமையாலே-பசியாலோ, பஞ்சத்தாலோ மக்கள் இருக்கக்கூடாது என்று கருதித்தான் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வரும்பொழுது 1967லே சொன்னார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு படி நிச்சயம் என்று சொன்னார் அன்றைக்கு.

அதை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு கலைஞர் செயல்பட்டார். அண்ணாவை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்டார். அண்ணா ஆட்சியின் தொடர்ச்சிதானே இப்பொழுது நடைபெறுவது? முன்பாகத்தை அண்ணா எழுதினார். அடுத்த பாகத்தை கலைஞர் எழுதிக்கொண்டிருக்கிறார்.

ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்

ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குப் போடுவோம் என்று 2006ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவர், இந்த அம்மையார் சீறிப் பாய்ந்தார்.

உங்களால் கொடுக்க முடியுமா? இதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டார். பொறுத்திருந்து பாருங்கள். கொடுக்கிறோமா இல்லையா? என்று கலைஞர் சொன்னார். அடுத்து இந்த அம்மையார் நான்கு நாள்கள் கழித்து நாங்களும் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக பத்து கிலோ அரிசி கொடுப்போம் என்று சொன்னார்.

காப்பியடித்துச் சொன்னார்

அவர் சொன்ன பிற்பாடு இந்த அம்மையார் காப்பியடித்துச் சொன்னார். அதனால் இந்த அம்மையார் மீது மக்களிடம் நம்பகத்தன்மை இல்லை என்ற நிலைதான் இன்றைக்கும் இருக்கிறது. முதலில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு போட்டார் கலைஞர். அதற்குப் பிறகு அண்ணா நூற்றாண்டு விழா வந்தது. யாரும் கேட்கவில்லை. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்றார். கலைஞர் அரசின் மக்கள் நலத்திட்டங்களைப் பார்த்து மத்திய அரசே வியப்படைந்தது.

இடதுசாரி மாநிலங்களில் இல்லை

ஏழைகளுக்காகவே வாழ்கிறோம் என்று இடது சாரிகள் சொல்லுகிறார்கள். கேரளாவிலோ, மேற்கு வங்காளத்திலோ ஒரு கிலோ அரிசியை 15 ரூபாய்க்கு, 18 ரூபாய்க்கு விற்றார்கள். அந்தக் காலத்திலேயே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்று போட்ட ஒரே ஆட்சி கலைஞருடைய ஆட்சிதான் என்று அவர் கையொப்பமிட்டு நிலைநாட்டினார்.

1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி

அண்ணா நூற்றாண்டில் வெறும் வெளிச்சம் மட்டும் போட்டால் போதாது அண்ணா வினுடைய எண்ணத்திற்கு செயல் உரு கொடுக்க வேண்டும் என்று கருதி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

என்ன இப்படி அறிவித்துவிட்டாரே என்று மேடையில் இருந்தவர்களுக்கு ஒரு தேக்கநிலை இருந்தது. எங்களுக்கெல்லாம் ஓர் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் கலைஞர் அவர்கள் பெரியாரிடத்திலே பயின்றவர்-ஈரோட்டுக் குருகுலத்திலே கணக் கெல்லாம் சரியாகப் போட்டு வைத்துவிட்டு ஏற்பாடெல்லாம் பார்த்துவிட்டு-குதிர் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு-

நினைவுக் குதிர்

தன்னுடைய நினைவுக் குதிர் அது எப்பொழுதும் குறையாத நினைவுக் குதிர்; அதையும் தெளிவாக வைத்துக்கொண்டு ரொம்ப அழகாக இந்தத் திட்டத்தை வெளியில் சொன்னார். ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ என்று அறிவித்தார். இது ஏதோ ஒரு வாரம் போடுவார்கள், பத்துநாள் போடுவார்கள் என்று நினைத்தார்கள். எதிர்க்கட்சித் தலைவராலே குறை சொல்ல முடிந்ததா? வரவேற்கவும் முடியவில்லை; குறை சொல்லவும் முடியவில்லை.

ரசம் வைக்க வேண்டாமா?

அதற்காக என்ன சொன்னார், அரிசி மட்டும் போதுமா? ரசம் வைத்து சாப்பிட வேண்டாமா? குழம்பு வைத்து வைத்து சாப்பிட வேண்டாமா என்று கேட்டார்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

அது கலைஞருக்குத் தெளிவாகத் தெரியும். எதையும் அலட்சியப்படுத்தக் கூடியவர் அல்லர். அவ்வளவு முதிர்ச்சி அடைந்த தலைவராக இன்றைக்கு அவர் காட்சியளிக்கின்றார்.

அப்படியா? என்று நினைத்து, உடனே உணவு அமைச்சர் எ.வ.வேலுவை அழைத்தார். இதற்கு என்ன வழி? நாளைக்கே திட்டத்தோடு வாருங்கள் என்று சொல்லிவிட்டு, அவரே விளக்கமும் சொன்னார். அடுத்து தாய்மார்களுக்கு குழம்பு, ரசம் வைக்க 50 ரூபாய்க்கு பத்து மளிகைப் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இன்றைக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய்க்கு மளிகைப் பொருள் கிடைக்கிறதா-இல்லையா? சொன்னது போல் செயல்படக்கூடிய ஆட்சி- கலைஞர் ஆட்சி போல் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? (பலத்த கைதட்டல்). கலைஞர் மீது நம்பகத்தன்மை மக்களுக்கு வந்திருக்கிறது. சொன்னதையும் செய்து சொல்லாததையும் கூடுதலாக செய்யக்கூடியவர் கலைஞர் என்ற பெருமையை அவர் உருவாக்கி யிருக்கின்றார்.

அரசு ஊழியர்கள் அம்மா ஆட்சியில் பட்டபாடு

தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதைப் பாருங்கள். அரசு அலுவலர்களின் குறையை அவ்வப்பொழுது களைந்திடவும், அரசு ஊழியர் சங்கங்களின் குறைகளை கேட்டு உரிய காலத்தில் தீர்வுகாணவும் ஆணையம் ஒன்றினை அமைப்போம். -இது கலைஞருடைய அறிக்கை. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் பாருங்கள். அரசு ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களது சேவை நமக்கு முழுவதுமாக சென்றடையும் வகையில் இனிமையான (அ.தி.மு.க தேர்தல் அறிக்கை), சுமுகமான சூழல் உருவாக்கப்பட்டு, அவர்களது மனநலம் பேணப்பட்டு, தமிழக அரசு ஊழியர்கள் திறம்பட பணியாற்ற உதவிடுவோம் என்று கூறப்பட்டி ருக்கிறது.

அரசு ஊழியர்களின் மனநலனையும் இனி பார்க்கப் போகிறார்கள். ஏனென்றால் சென்ற ஆட்சியிலேயே அரசு ஊழியர்களின் மன நலனைப் பார்த்தவர்கள். இந்த அம்மாவை நினைத்தாலே அரசு ஊழியர்களுக்கு மனநலம் போய்விடுகிறதே. அரசு ஊழியர் தலைவர்கள் எல்லாம் இங்கே இருக்கி றார்கள். கோ.சூரியமூர்த்தி இங்கே இருக்கிறார். படாத பாடுபட்ட அரசு ஊழியர்கள் இருக்கி றார்கள். ஜெயலலிதா ஆட்சியிலே சாலைப் பணியாளர்கள் செத்தவர்கள் எத்தனைபேர்? நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இந்தத் தேர்தலே அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறது அல்லவா? புளுகுவதற்கு எல்லை வேண்டாமா? செத்துப் போன கோயபெல்ஸ் இன்றைக்கு உயிரோடு வந்தால்கூட, அ.தி.மு.க தேர்தல் அறிக்கையைப் பார்த்து தற்கொலை செய்துகொள்வான் (கைதட்டல்).

கெட்டிக்காரன் புளுகே எட்டுநாள்தான்

காமெடி தேர்தல் அறிக்கை இவர்களுடைய நிலைமை என்ன? நமக்கு சோர்வு ஏற்பட்டால், நமக்கு களைப்பு ஏற்பட்டால் காமெடி காட்சிகளை தொலைக்காட்சியில் பார்ப்போம். அதற்குப் பதிலாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் படித்தாலே போதும் (பலத்த கைதட்டல்). இதைவிட நல்ல நகைச்சுவை-கிச்சி கிச்சி மூட்டுவது வேறு எதுவும் கிடையாது. (கைதட்டல்).

ஆறாவது ஊதியக் குழுவால் களையப்படாமல் இருக்கும் எஞ்சிய முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை விரைவாக களைவதற்கு உரிய நடவடிக்கைகள் ஏற்படுத்துவோம் என்று சொல்கிறார். ஆறாவது ஊதியக் குழுவை மருத்துவமனையில் அறிவித்த தலைவர் கலைஞர், அவர் மருத்துவ மனையில் இருக்கிறார். உடனே அறிவித்தார். நான் அவரை மருத்துவமனையில் சந்தித்துக் கேட்டேன், என்னங்க வந்திருக்கிறது? உடல்நலம் இல்லாத நிலையில் என்ன அவசரம் - உடனே அறி விக்கிறீர்கள் என்று கேட்டேன். அய்யோ, உங்களுக்குத் தெரியாதய்யா.

உடனே கம்யூனிஸ்ட் நண்பர்கள் கொடிபிடிக்கப் பார்ப்பார்கள். அவர்களுடைய கையில் இருக்கின்ற கொடியை நாம பிடுங்கிவிட வேண்டாமா? எனக்குத் தெரியும் இது என்று சொன்னார். இன்றைக்கு இடதுசாரி களுடைய நிலை என்ன? அரசு ஊழியர்கள் அனு பவித்து வரும் சலுகைகள் தற்பொழுது தொடரும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப் பட்டிருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு ஞாபகம் வராதா? இரவு 12 மணிக்கு அவர்கள் பட்டபாடு தெரியாதா? இரவு 12 மணிக்கு அரசு ஊழியர்களை எழுப்பினால் போலீஸ் தான் வந்திருக்கிறது போலியிருக்கிறது என்று நினைக்கின்ற அளவுக்கு அரசு ஊழியர்கள் கொடுமை அனுபவித்தவர்கள் ஆயிற்றே!

டெஸ்மா, எஸ்மா, அம்மா இதை இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா (கைதட்டல்). அரசு ஊழியர்கள் அவ்வளவு பேருக்கும் மறுவாழ்வு கொடுத்த ஆட்சி கலைஞரின் பொற்கால ஆட்சி! (கைதட்டல்). இந்த அம்மையார் காலத்தில் நிறுத்தப்பட்ட சம்பளம் உள்பட சேர்த்துக் கொடுக்கக்கூடிய அளவுக்கு கலைஞர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி மேலும் பல கருத்துகளை எடுத்துக்கூறி விளக்கினார்.

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி

-தமிழர் தலைவர் வருணனை

காமராசர் அவர்கள் வந்ததற்குப் பிறகு, கலைஞர் அவர்கள் வந்ததற்குப் பிறகு, கல்வி நீரோடை இன்றைக்கு நாடெல்லாம் பாய்ந்திருக்கிறது. மன்னர்கள் ஆட்சி காலத்திற்கு முன்பு ஒரு விழுக்காடு இருந்த கல்வி அறிவு இன்றைக்கு 72 விழுக்காடு வளர்ந்திருக்கிறது. படித்தவர்கள் வந்திருக்கிறார்கள். தடுக்கி விழுந்தால் கலைஞர் ஆட்சியில் பொறியாளர்கள் மீதுதான் விழ வேண்டும். டாக்டர்கள் மீதுதான் விழ வேண்டும். அந்த அளவுக்கு படித்தவர்கள் வந்திருக்கிறார்கள். படிப்பு என்பதிலே முக்கியமானது தொழில் கல்வி படிப்புதான். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அவர் நுழைவுத் தேர்வை கொண்டு வந்தார். அதன் விளைவு நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே படித்து முன்னேறி வந்தார்கள். கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்புக் கிட்டவில்லை.

தி.க.வும், தி.மு.க.வும் 21 ஆண்டுகள் போராடின

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக்கழகமும் 21 ஆண்டுகளாகப் போராடி அந்த நுழைவுத் தேர்வை ஒழித்தோம். அதனால்தான் கல்விக்கண் திறக்கப்பட்டது. எங்கு பார்த்தாலும் பள்ளிக் கட்டடங்கள், பொறியியல், கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளைக் காணலாம்.

தேவடியாகுப்பம்

நம்முடைய நிலை என்ன தெரியுமா? திருவண்ணா மலைக்கு அருகில் உள்ள ஓர் ஊருக்குப் பெயரே தேவடியாகுப்பம் என்று இருந்தது. அவ்வளவு இழிவாக நம்மை வைத்திருந்தார்கள். தஞ்சையிலே தொம்பன்குடிசை என்று ஒரு பகுதி இருந்தது. நமக்குத் தெரிந்த ஒரு ஆட்சி வந்த பிறகு தான் அந்தப் பகுதிக்கு தொல்காப்பியர்சதுக்கம் என்றே பெயர் சூட்டப்பட்டது.

இன்றைக்கு சென்னை மாநகர மேயராக வந்திருக் கின்றவர் மா.சுப்பிரமணியன். அவர் ஒரு சீரிய பகுத்தறிவாளர். அவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி நடக்கக் கூடியவர். கார்ப்பரேசன் பள்ளிக் கூடங்களில் படிக்கும் பள்ளிப் பிள்ளைகளுக்கெல்லாம் இலவசமாக மடிக்கணினியை வழங்கினார்.

ஒரு காலத்தில் கார்ப்பரேசன் பள்ளிக் கூடம் என்றால் கீழ்த்தரமான பள்ளிக்கூடமாக நினைக்கப்பட்டது.

கார்ப்பரேசன் பள்ளிகளில் மடிக்கணினி

இன்றைக்கு அந்த நிலையை மாற்றி உயர்தர பள்ளிகளுக்கு ஈடாக கார்ப்பரேசன் பள்ளிகள் எந்த வகையிலும் குறைந்தவையல்ல என்று சாதனைப்படைத்து வருகிறார்.

திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது கூட முதல்வர் கலைஞர் சொன்னார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தோம். வேறுபாடு இல்லாமல் அதை அனைத்துப் பிள்ளைகளுக்கும் கொடுங்கள் என்று கூட்டணிக் கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர்.

அனைவர்க்கும் அனைத்தும் பாகுபாடு இன்றி அனைத்துப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று கலைஞர் அறிவித்தாரே!

அனைவர்க்கும் அனைத்தும் வழங்கக் கூடியவர்தான் கலைஞர் அவர்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் - இந்த அம்மையார் அப்படியே காப்பியடித்து வெளியிட்டிருக்கின்றார்.

காப்பி அடிப்பு

இந்த அம்மையாரை யாராவது நம்புவார்களா?

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்து - தானுந்தன்

பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி

என்ற பாடலுக்கு ஏற்ப தேர்தல் அறிக்கையை இந்த அம்மையார் வெளியிட்டிருக்கின்றார்.

(தமிழர் தலைவர் கி.வீரமணி உரையிலிருந்து - சென்னை பெரியார் திடல் 24.3.2011)

சூரியனை மூடச் சொல்லுமா தேர்தல் ஆணையம்? தமிழர் தலைவர் தர்க்கரீதியான கேள்வி

தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றம் கண்டித்த பிறகு தான் தனது போக்கை மாற்றிக் கொள்வேன் என்று இருக்கக் கூடாது. அதற்கு முன்னாலேயே அறிவுபூர்வமான சிந்தனை வரவேண்டும். பெரியார் சிலை, அண்ணா சிலை, காமராஜர் சிலை, எம்.ஜி.ஆர் சிலைகளை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சொல்வதா?

அதற்கும், ஓட்டுப் போடுவதற்கும் என்ன சம்பந்தம்? அப்படிப் பார்த்தால் தேர்தல் ஆணையம் இப்படி உத்தரவு போடுகிறது என்று வைத்துக் கொள்வோம். எல்லோரும் ஏப்ரல் 13ஆம் தேதி வரை கையை கட்டிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் கையை நீட்டினால் அது காங்கிரஸ் சின்னம் (கைதட்டல்).

சூரியன் நாளை முதல் உதயமாகக் கூடாது. தேர்தல் ஆணையத்தின் ஆணை இது. காரணம் என்ன வென்றால் சூரியன் தேர்தல் சின்னம்; ஆகவே அதை மூடி விட வேண்டும் என்று சொன்னால் அறிவுக்குப் பொருத்தமா? (கைதட்டல்).

இலை இருக்கக் கூடாது, எல்லா மரத்திலும் இருக்கின்ற இலைகளையும் கழிச்சிக் கட்ட வேண்டும்.

மாம்பழம் எங்கேயும் இருக்கக் கூடாது, கடைகளிலும் விற்கக் கூடாது என்ற உத்தரவு போடுவார்களா? என்னய்யா அர்த்தம், அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டாமா? பகுத்தறிவாளர்கள் நாங்கள். எங்களுக்கு அரசியல் கண்ணோட்டமில்லை. நாட்டு மக்கள் முன்னேற்றக் கண்ணோட்டம், விஞ்ஞானக் கண்ணோட்டம் தான் உண்டு. கேலிப்பொருளாக தேர்தல் ஆணையம் ஆகக் கூடாது. நியாயத்தை நிலை நாட்டக் கூடியவர்களாக ஆகுங்கள்.

மக்கள் உங்கள்மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை இழக்கும்படி நடந்து கொள்ளாதீர்கள்.

(தமிழர் தலைவர் கி.வீரமணி உரையிலிருந்து - சென்னை பெரியார் திடல் 24.3.2011)
இதுகூடத் தெரியவில்லை அம்மாவுக்கு?

இது அ.தி.மு.க. தேர்தல் அறிக் கையில் சொல்லப்பட்டிருக்கிறது - கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையில் இருப்பதாகும். இதில் கொஞ்சமாவது யோசனை செய்து எழுதியிருக்கின்றனரா? நான் கடுமையான வார்த்தைகள் சொல்பவன் அல்ல. அது நமக்குத் தேவையும் அல்ல. கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி அவரவர்கள் குடிவந்து விட்டார்கள். அதுவே இந்த அம்மாவுக்குத் தெரியவில்லை (பலத்த சிரிப்பு, கைதட்டல்).

வீட்டு வசதி சாத்தியம் இல்லை என்கிறார் ஜெயலலிதா. எங்கே பார்த் தாலும் வீடுகள் கட்டிக் கொடுத் திருக்கிறார் கலைஞர்.

ஒரு தெளிவு இருக்க வேண் டாமா? மக்கள் எதைச் சொன்னாலும் நம்புவார்கள் என்று நினைப்பதா? மக்களை எப்படி எடை போடு கிறார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

எனவே இது அந்த அம்மாவின் அறியாமையைக் காட்டுகிறது. வாக்காளர்களை எவ்வளவு குறைத்து மதிப்பிடுகிறார் என்பதைப் பற்றி பொது மக்கள் சிந்திக்க வேண்டும். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் எங்களின் நோக்கம். கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறையில் இருப்பதாலும், மக்களுக்கு நிதிச் சுமையை ஏற்றக் கூடிய ஏமாற்று வேலை என்பதாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நவீன பசுமைத் திட்டத்தை ஏற்படுத்தும் என்கிறது அதிமுக தேர்தல் அறிக்கை. நவீன பசுமை வீட்டுத் திட்டத்தில் எப்பொழுதும் காய்கறிகள் எல்லாம் மேலேயே தொங்கும் (பலத்த கைதட்டல்). முருங்கைக்கீரை, முளைக்கீரை எல்லாம் பக்கத்திலேயே குடி இருக்கும்.

நவீன பசுமை வசதித் திட்டம். அனைவருக்கும் குறைந்த விலை யில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள சூரியசக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப் படும் என்று தேர்தல் அறிக்கை யிலே அம்மையார் சொல்லி யிருக்கிறார்.

பாவம், ஒன்று தெரிந்து கொள் ளுங்கள் - இந்த அம்மாவுக்கு மேல் உதிப்பது சூரிய வெளிச்சம் தான். (கைதட்டல்). சூரிய வெளிச்சத்தை ஜெயலலிதா வால் கூடத் தடுக்க முடியாது (கை தட்டல்).

கலைஞர் கட்டிய வீட்டிற்குள் சூரிய வெளிச்சம் வருகிறதோ இல்லையோ, இந்த அம்மா கட்டுகிற வீட்டில் சூரிய வெளிச்சம் வரும் என்றால் இந்த அம்மையார் தன் னுடைய தோல்வியை பெருமன தோடு ஒப்புக் கொண்டுவிட்டார்; ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார் (பலத்த கைதட்டல்).

எழுதியவன் ஏட்டைக் கெடுத் தான்.
படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்.

எழுதிக் கொடுத்தவன் இஷ்டத் திற்கு எழுதிக் கொடுத்துவிட்டான். இந்த அம்மா அதைப் பார்க்கவில்லை. சூரியன் என்றாலே இந்த அம்மா வுக்கு அலர்ஜி ஆச்சே. என்னய்யா யாரோ தி.மு.க. காரன் நமது கட்சிக்குள்ளேயே புகுந்திருக்கிறான் என்று நினைக்கும்.

இந்த அம்மா சூரிய வெளிச்சம் - சூரிய மின்சார சக்தியைத்தானே நம்ப வேண்டியிருக்கிறது? எனவே வீடுகளைக் கட்டிக் கொடுத்தவர் களை நம்புவார்களா? கட்டப் போகிறோம் என்று சொல்கிறவர் களை நம்புவார்களா? நினைத்துப் பார்க்க வேண்டும்.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் உரையிலிருந்து சென்னை பெரியார் திடல் 24.3.2011


பேசு நா இரண்டுடையாய் போற்றி, போற்றி!

ஆரிய மாயைபற்றி அண்ணா சொன்னது
எவ்வளவு சரி என்பது புரிகிறதா?

இலவச டி.வி., இலவச கியாஸ் அடுப்பு என்று தி.மு.க., தந்தது கண்டும், மேலும் சில இலவசங் களை தி.மு.க. தந்தபோது அக்கிர கார சோ இராமசாமிகளின், அவரது சீடக் கோடி வைத்திய நாதன்களின் குடுமிகள் ஆடியது கொஞ்சமா, நஞ்சமா? இலவசங்கள் மூலம் பொருளாதாரமே பாழ்பட்டு விடுகிறதே என்று அங்கலாய்த் தார்கள்.

இப்போது சிறீரங்கம் அய்யங் கார் அம்மையார் தி.மு.க. தேர்தலை மிஞ்ச இலவச ஏலத்தைப் போடத் துவங்கி விட்டவுடன்,

அவாள் அப்படிச் செய்யும்போது இவாளால் சும்மாயிருக்க முடியுமோ என்று ராகத்தை தலைகீழாக மாற்றி வாசிக்கத் துவங்கி விட்டனரே!

இதுதான் ஆரியம்!

இரட்டை நாக்கு பேர்வழிகளைப் புரிந்து கொண்டு,

நல்லாட்சி மலர தி.மு.க. கூட்டணிக்கே வாக்களியுங்கள்.

----------------”விடுதலை” 24-3-2011


தி.மு.க.வையே ஆதரிக்க வேண்டும் - ஏன்?

தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும் - அ.தி.மு.க. அணியின் வேதனைகளும் எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள நூல் திராவிடர் கழக வெளியீடாக வந்துள்ளது. நேற்று சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் அந்நூல் வெளியிடப்பட்டது.

80 பக்கங்களைக் கொண்ட இந்நூலுக்கான நன்கொடை வெறும் பத்தே ரூபாய்தான். அடக்க விலைக்கும் குறைவாகவே வழங்கப்படுகிறது. வெளியீட்டு நிகழ்ச்சியிலேயே 960 புத்தகங்களை பொது மக்கள் பெற்றுக் கொண்டார்கள்.

தி.மு.க. ஆட்சி கடந்த அய்ந்து ஆண்டுகளில் எத்தகைய சாதனைகளைச் செய்துள்ளது. சொன்னதை எப்படியெல்லாம் நிறைவேற்றியுள்ளது என்பது புள்ளி விவரங்களுடனும் ஆதாரங்களுடனும் ஒரு பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.

வேறு எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் செய்ய நினைக்காத - செய்யத் துணியாத சமூகப் புரட்சித் திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றியிருக்கிறது.

குறிப்பாக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, தமிழ் செம்மொழி, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு, நாடெங்கும் 240 இடங்களில் ஜாதிஒழிப்பு - தீண்டாமை ஒழிப்புத் திட்டமான பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள், தீட்சிதர்ப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் கொள்ளை போன சிதம்பரம் நடராசன் கோயிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தமை, வடலூரில் வள்ளல் இராமலிங்க அடிகளார் அவர்களால் உண்டாக்கப்பட்ட சத்ய ஞான சபையில் அவர் கொள்கைக்கு விரோதமாக உருவ வழிபாடு நடத்தி, பகற் கொள்ளையடித்த பார்ப்பன அர்ச்சகரை சட்ட ரீதியாக வெளியேற்றியமை - இன்னோரன்ன திட்டங்களை கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியேயன்றி வேறு எந்த ஆட்சியாலும் செய்திருக்க முடியுமா என்பது காரண காரியங்களோடு இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

தீண்டாமை வெறியின் காரணமாகத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் மற்றும் கொட்டக்கச்சியேந்தல் ஆகிய ஊராட்சி களில் தேர்தலை நடத்திக் காட்டி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களை, துணைத் தலைவர்களை தலைநகரமான சென்னைக்கு அழைத்து வந்து பாராட்டு விழா நடத்திய சமூகப் புரட்சிக் கொள்கையையுடையது தான் தி.மு.க. ஆட்சியாகும்.

தொழிற் கல்லூரிகளில் சேர்ந்திட நுழைவுத் தேர்வு என்கிற பார்ப்பன வஞ்சகம் தி.மு.க. ஆட்சியால்தான் சட்ட ரீதியாகத் தடுக்கப்பட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாகக் கூறி, உரிய முறையைப் பின்பற்றாத தால்தான் நீதிமன்றத்தில் தோல்வி காணப்பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறிய யோசனையை அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளாததால்தான் அந்த நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் சமூக நீதியில் உண்மையான அக்கறை கொண்ட கலைஞர் அவர்கள், கழகத் தலைவர் கூறிய யோசனையின் அடிப்படையில் கல்வியாளர்கள் குழு ஒன்றை ஏற்படுத்தி, அவர்கள் தந்த கருத்தின் அடிப்படையில், நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தைச் செய்ததால் நீதிமன்றத்திலும் அச்சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பும் பெறப்பட்டது.

இந்த நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமாக மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கில் நுழைய முடிந்தது. முதல் தலைமுறையைச் சேர்ந்த இவர்கள் தொழிற் நுட்பப் பட்டதாரிகளாகக் கம்பீரமாக வெளிவந்து, சமூக நிலையிலும் பொருளாதார நிலையிலும் தலை தூக்கி நிற்கும் ஓர் உன்னத நிலை முகிழ்த்துக் கிளம்பியது.

சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்த்தெடுக்கப் பட்டாலன்றி சம அந்தஸ்துடன் சமூகத்தில் வீறுநடை போட முடியாது என்னும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட - அதனையே சுவாச மாகக் கொண்ட ஒருவர் முதல் அமைச்சராகத் தமிழ் நாட்டில் 5ஆம் முறையாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டதால் இத்தகு சாதனைகள் எட்டப்பட்டன.

சமூகத்தில் பெரும்பான்மையினரான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள்தான் பெரும்பாலானவர்கள் ஆவார்கள். ஆனால் அவர்கள் சமூக நிலையிலும், கல்வி ரீதியிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுக் கிடந்தார்கள். அவர்களைக் கைதூக்கி விடுவதுதான் சமூக ஜனநாயகம் என்று உணர்ந்த, அந்தத் திசையில் செயல்பட்டு வரும் தி.மு.க. ஆட்சியை மீண்டும் கொண்டு வர மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான இந்த வெகு மக்கள் முன் வருவார்களாக!

----------------”விடுதலை” தலையங்கம் 24-3-2011

No comments: