Monday, March 31, 2008

ஹிந்து மஹாசபை

ஹிந்து மஹாசபையைப் பற்றி நாம் பல தடவைகளில் அது வர்ணாஸ்ரம சபை என்றும், இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு விரோத மான சபை என்றும், பிராமணாதிக்கத்திற்காக உழைக்கும் சபை என்றும் எழுதி வந்தது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். சில நண்பர்களுக்கு இவ்வாறு எழுதியதைப் பற்றி மனவருத்தம் ஏற்பட்டிருந்தாலும் இருக்கலாம். ஆனால் இப்பொழுது வரவர அதன் யோக்கியதை நாம் எழுதியபடியே முழுவதும் வெளியாகி விட்டது. அதாவது, விதவா விவாகத் தீர்மானம் ஹிந்து மஹாசபை மஹாநாட்டின் விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேறினதும், அதன் அக்கிராசனராகிய பண்டித மாளவியா மஹாநாட்டுப் பந்தல் பக்கம் கூட எட்டிப் பார்க்கமாட்டேன் என்று அத்தீர்மானத்திற்கு ஆதாரமாயிருந்தவர்களை விரட்டித் தீர்மானத்தையே மஹாநாட்டிற்குள் கொண்டு வரவிடாமல் நசுக்கி விட்டார். பின்னர் தீண்டாமையைப் பற்றின தீர்மானம் மஹாநாட்டில் நிறைவேறினவுடன் சபையில் உள்ளவர்களெல்லாம் எழுந்து ஓடிப்போய் விட்டார்களாம் . ஆதலால் தலைவர்கள் எழுந்து போனவர்களை அழைத்து வந்து இத்தீர்மானத் தின் ரகசியத்தை எடுத்துரைத்து, அதாவது இத்தீர்மானத்தை தீண்டாமை ஒழியத் தகுந்த மாதிரி விதமான ஏற்பாடும் நாங்கள் செய்துவிடவில்லை. பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக வேண்டி ஏதோ தீண்டாமையில் அக்கறையுள்ளவர்கள் போல் காட்டுவதற்காகச் செய்யப்பட்டதே ஒழிய வேறல்ல என்று பொருள்படும்படி பேசி அத்தீர்மானத்தில் யாதொரு சத்துமில்லை என்கிற ரகசியத்தை வெளிக்காட்டி, அதுவும் ஏற்பாடு செய்யுங்களென்று கேட்டுக் கொள்ளு கிறோமேயல்லாமல் வேறில்லை. உங்களுக்கு இஷ்டமிருந்தால் செய்யுங்கள், இல்லாவிட்டால் வேண்டாம். வெளிப் பிரசாரத்திற்கு இம்மாதிரி தீர்மானங்களையெல்லாம் நிறைவேற்ற வேண்டியிருக் கிறது. காரியத்தில் செய்யவில்லையானால் பரவாயில்லை. அது உங்கள் இஷ்டம் என்று சொன்ன பிறகுக் கூட வெளியே போனவர்கள் போயே தீர்ந்தார்களாம். இதோடு ஹிந்து மஹாசபையின் தீர்மானங் களையும், உரிமைகளையும் காப்பாற்றுவதாக வாக்களிப்பவர்களுக்கு மாத்திரமே வோட்டு கிடைக்கும்படி பிரசாரம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்களாம். இதிலிருந்து அறியக்கிடப்ப தென்னவென்றால் விதவா விவாகத்தையும், தீண்டாமை ஒழிப்ப தையும் ஒப்புக்கொள்ளுகிறவர்களுக்கு ஹிந்து மஹாசபை எதிர் பிரசாரம் செய்யும் என்பதும், மகாத்மா காந்தியடிகளே சட்டசபைக்கு நிற்பினும் அவருக்குக்கூட வோட்டுக் கொடுக்கக் கூடாதென்றேதான் சொல்லும். இதுவே அதன் கொள்கையாகும் என்பதை இப்பொழு தாவது வாசகர்கள் உணர்வார்கள் என்று நினைக்கிறோம்.

----------------- தந்தைபெரியார்- "குடிஅரசு" - 21.3.26

Sunday, March 30, 2008

தெய்வ வரி

நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை. அரசாங்க சம்பந்தத்தில் பூமிவரி, வருமானவரி, கள்ளுவரி. துணிவரி, சாமான் வரி முதலியவைகளோடு முனிசிபாலிடி வரி, போர்டுவரி, லஞ்ச வரி, மாமூல் வரி என்று இவ்வாறாக அநேக வரிகள் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதல்லாமல் தெய்வத்திற்காகவும், மதத்திற்காகவும் கொடுத்துவரும் வரி அளவுக்கு மீறினவைகளாய் இருப்பதோடு நமக்கு யாதொரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் மேற்சொல்லிய அரசாங்க சம்பந்த வரிகளின் அளவைவிட ஏறக்குறைய அதிகமாகவே கொடுக்கப்படுகிறது. அன்றியும், இவ்வரிகளால் தத்துவ விசாரணையும் நாம் கொஞ்சமும் செய்வதிற்கில்லாமல் செய்து, நமது மூடநம்பிக்கையால் பிழைக்க வேண்டிய சிலரின் நன்மைக்காக அவர்கள் எழுதிவைத்ததையும் சொல்வதையும் நம்பி நாம் கஷ்டப்பட்டு வரி செலுத்துவதல்லாமல், வேறு என்ன உண்மை லாபம் அடைகிறோம் ? தெய்வத்தை உத்தேசித்தோ, ஸ்தலத்தை உத்தேசித்தோ, தீர்த்தத்தை உத்தேசித்தோ, நமது பிராயணச் செலவு எவ்வளவு ? பூஜை, பூசாரி காணிக்கை, பிரார்த்தனை முதலியவற்றுக்காக ஆகும் செலவு எவ்வளவு? சாதாரணமாய் திருப்பதி வெங்கடாசலபதி என்கிற தெய்வத்துக்கு மாத்திரம் வருஷம் ஒன்றுக்குப் பதினெட்டு லட்சம் ரூபாய் வரும்படி வருகிறது. இதைத் தவிர மேற்படி யாத்திரைக்காரர்களுக்கும் அங்குள்ள பூசாரிகளுக்காகவும் மற்றும் சில தர்மத்திற்காகவும் அங்கு போகும் ரயில் சத்தம்,* வண்டிச் சத்தத்திற்காகவும் ஆகும் செலவு எவ்வளவு? இதுபோலவே இமயம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள தீர்த்தம், ஸ்தலம், கோவில் முதலியவைகளுக்கு மக்கள் போக்குவரவு செலவுகள் முதலியவைகளை நினைத்துப் பார்த்தால் உடல் நடுங்குகிறது. இஃதன்றி வீடுகளில் நடைபெறும் வைதீகச் சடங்குகளான கலியாணம், வாழ்வு, சாவு, திதி இவைகளுக்காகவும் அதை நடத்திவைக்கவும் புரோகிதர் பிராமணர்கள் செலவும் எவ்வளவாகிறது? இவைகளை எல்லாம் மக்களின் பேராசையும், மூடநம்பிக்கையும்தானே செய்விக்கின்றது. தாங்கள் எவ்வளவு கொடுமையும் பாவமும் செய்திருந்தாலும் மேற்கூறிய தெய்வயாத்திரையோ, வைதீகச் சடங்கோ செய்வதால் தப்பித்துக் கொள்ளலாமென்றும், தாங்கள் யோக்கியதைக்கு மேல் எதை விரும்பினாலும் பெற்றுவிடலாமென்றும் நினைக்கின்ற பேராசை நினைப்புகளும் இவைகளுக்குக் காரணமாய் இருப்பதன்றித் தங்கள் முன்னோர்கள் அவர்களின் குணகர்ம யோக்கியதையைப் பொறுத்தல்லாமல், தாம் வைதீகச்சடங்கு செய்து பிராமணர்களுக்குப் பணம் கொடுப்பதன் மூலமாய் அவர்களை மோட்சத்திற்கு அனுப்பிவிடலாம் என்கிற மூடநம்பிக்கையும் இவர்களை இப்படிச் செய்விக்கச் செய்கின்றது. இதனால் மக்கள் ஒழுக்கம் பெறுவதற்கு இடமுண்டாகின்றதா? ஒருவர் ஏமாறவும் மற்றொருவர் ஏமாற்றவும் தானே பழக்கப்படுகிறது. கடவுளின் உண்மைத் தத்துவத்தையும், தங்கள் தங்கள் செய்கைகளின் பலன்களையும் மக்களுக்குப் போதித்து வந்திருந்தால் இவ்வளவு பேராசையும், செலவும் தெய்வத்தின் பெயராலும் ஏமாற்றுதலாலும் ஏற்பட்டிருக்கவே முடியாது. தெய்வத்திற்காகச் செலுத்தப்படும் காணிக்கைகள் என்னவாகின்றன ? வைதிகச் சடங்குகளின் பலன்கள் என்னவாகின்றன ? இவ்விரு கர்மங்களையும் நடத்தி வைப்பவர்களின் யோக்கியதை என்ன என்பதை மக்கள் கவனிப்பதில்லை. "காளை மாடு கன்று போட்டதென்றால் கன்றுக்குட்டியைப் பிடித்துக் கொட்டத்தில் கட்டு " என்றே சொல்லி விடுகிறோம். காளை மாடு எப்படி கன்று போடும் என்பதை நாம் கவனிப்பதே இல்லை. பூசாரிக்குப் பணம் கொடுப்பதாலும், காணிக்கைப் போடுவதாலும், நமது குற்றச் செயல்கள் எவ்வாறு மன்னிக்கப்படும் ? நமது ஆசைகள் எவ்வாறு நிறைவேறும்? தெருவில் போகும் பிராமணர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கு அரிசி, பருப்பு, பணம், காசு கொடுப்பதாலும் அவர்கள் ஏதோ சில வார்த்தைகளை உச்சரிப்பதாலும் நமது முன்னோர்கள் எப்படிச் சுகப்படுவார்கள் என்று யோசிப்பதே இல்லை. இவைகளால் நமது பொருள், நேரம், தத்துவம் வீணாகப் போவதல்லாமல், ஒரு மனிதன் கொலை, கொள்ளை முதலிய துஷ்டச் செயல்கள் செய்யும் பொழுது தன்னுடைய பணச் செருக்கையும், வக்கீல்களையும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதையும் நினைத்துக் கொண்டு, இவர்களால் தப்பித்துக் கொள்ளலாமென்று எப்படித் தைரியமாய்ச் செய்கிறானோ அப்படியே இந்த ஷேத்திரங்களையும், காணிக்கைகளையும், புரோகிதர்களையும் நம்பிக்கொண்டு தைரியமாய்க் குற்றங்கள் செய்கிறான். அதோடு அல்லாமல் தேசத்தில் சோம்பேறிகளும், கெட்டகாரியங்களும் வளருகின்றன. நல்ல யாத்திரை ஸ்தலம் என்று சொன்னால் நல்ல வியாபார ஸ்தலம் என்பதுதான் பொருளாக விளங்குகிறது. தேர்த்திருவிழா ஸ்தலங்களுக்குப் போனவர்களுக்கும், யாத்திரை போனவர்களுக்கும் அநேகமாக இதன் உண்மை விளங்காதிருக்காது. நல்ல புரோகிதர்கள் என்போர்கள் தங்கள் வரும்படியை விபச்சாரத்திற்கும், சூதுக்கும், போதை வஸ்துகளுக்குமே பெரும் பான்மையாக உபயோகித்து வருகின்றனர். வைதீகச் சடங்கைப் பற்றி ஒரு பெரியாரால் சொல்லப்பட்ட ஒரு கதையைச் சொல்லி இக்கட்டுரையை முடிக்கிறேன்.

ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு புரோகிதர் ஒருவருக்கு வைதீக கர்மம் செய்து வைத்துக்கொண்டிருக்கும்பொழுது, தான் கிழக்கு முகமாக நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்டு ஒரு பெரியார், தான் மேற்கு முகமாய் நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்தார்.

புரோகிதர் : ஐயா, என்ன மேற்கு முகமாய்ப் பார்த்து தண்ணீரை இறைத்துக் கொண்டிருக்கிறீர் ?

பெரியார் : நீங்கள் கிழக்கு முகமாய்ப் பார்த்து எதற்காகத் தண்ணீர் இறைக்கிறீர்கள் ?

புரோகிதர் : இது, மேல் உலகத்திலுள்ள பிதுர்க்களைப் பரிசுத்தமாக்கும்.

பெரியார் : நான் இறைப்பது என்னுடைய காய்கறித் தோட்டத்தின் செடிகளை நன்றாக வளர்க்கும்.

புரோகிதர் : இங்கு நின்று கையால் வாரி இறைப்பது வெகு தூரத்திலுள்ள தோட்டத்திற்கு எவ்வாறு போய்ச்சேரும் ? பயித்தியமாய் இருக்கிறீர்களே !

பெரியார் : நீர்! இறைக்கும் தண்ணீர் மாத்திரம் என்னுடைய தோட்டத்தை விட எத்தனையோ அதிக தூரத்திலிருக்கும் மேல் உலகத்திற்கு எப்படிப் போய்ச் சேரும் ?

புரோகிதர் : (வெட்கத்துடன்) இந்த வார்த்தையை இவ்வளவுடன் விட்டுவிடுங்கள். வெளியில் சொல்லி என் வரும்படியைக் கெடுத்துவிடாதீர்கள்.

இஃதல்லாமல் குருமார்களென்று எத்தனையோ பேர் நமது நாட்டிடைத் தோன்றி மக்களைத் தம் சிஷ்யர்களாக்கி அவர்களிடை எவ்வளவு பணம் பறித்துப் பாழாக்குகிறார்கள் என்பதைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.

-------------------------- தந்தைபெரியார்- "குடிஅரசு" 26 - 7 -1925

நன்றி; குடிஅரசு -1925

Saturday, March 29, 2008

காந்தீயம்

காந்தீயம் என்பது மகாத்மா காந்தியை மூல புருஷராய் வைத்து அவரது சரித்திரத்தையும், கொள்கையையும், அதன் பலனையும் பற்றியது. எப்படி சைவம் என்பது சிவனை முதன்மை யாகக் கொண்டதோ, வைணவம் என்பது விஷ்ணுவை முதன்மை யாகக் கொண்டதோ, ராமாயணம் என்பது எப்படி ராமரை முதன்மை யாகக் கொண்டதோ அதுபோல் காந்தீயம் என்பது காந்தியை முதன்மை யாகக் கொண்டது. இவற்றில் மக்களுக்காக மகாத்மா காந்தி ஏற்படுத்திய கொள்கைகளும் அதற்காக அவரது சேவையும் அவரது தியாகமும் முதன்மையானது. அதனால் எற்பட்ட பலன்களும் நிகழ்ச்சி களும் இரண்டாவதாகச் சொல்லலாம். நமது தேசத்தில் இவ்விருபதாம் நூற்றாண்டில் ராஜாக்களும், பிரபுக்களும், பெரும்பதவி அதிகார முடையவர்களும் எத்தனையோ பேர் பிறந்திருந்தாலும் மறைந்திருந் தாலும் 33 கோடி பேர்களும் மதிக்கத் தகுந்த மாதிரி மகாத்மா காந்தியைப் போல் மற்றொருவரை சொல்ல முடியாமற் போனதற்குக் காரணம் என்ன? காந்தியை மாத்திரம் மகாத்மா என்று சொல்லக் காரணமென்ன? தங்கள் தங்கள் சுயநலத்துக்காக வாழ்கிறவர்கள் எவ்வளவு பெரியவர்களென்று சொல்லிக் கொண்டபோதிலும் அவர் கள் சாதாரண மனிதர்களாகத்தான் உலகத்தினரால் கருதப்படுவார்கள். உலகத்துக்காக வாழ்கிறவர்கள் எவ்வளவு சிறியவர்களாக இருந்த போதிலும் மகாத்மாவாகத்தான் கருதப்படுவார்கள். அப்படியானால் உலகத்துக்காக வாழ்கிறதாகச் சொல்லிக் கொண்டு எத்தனையோ தலைவர்களிருக்கின்றார்களே நாமும் அவர்களை எல்லாம் தலைவர்கள் தலைவர்களென்கிறோமே, ஏன் காந்தியை மாத்திரம் மகாத்மா என்று சொல்லவேண்டும் என்கிறதாக ஒரு கேள்வி பிறக்கலாம். மகாத்மா வைத் தவிர மற்ற தலைவர்களெல்லாம் பிறத்தியாருக்கு சொல்ல மாத்திரம் தெரிந்தவர்களேயல்லாமல் அதுபோல நடக்க முடியாத வர்களும், நடக்க இஷ்டமில்லாதவர்களுமாகவே இருப்பார்கள். ஆனால், மகாத்மாவோ சொல்லுகிறபடி நடப்பவர், நடக்கக் கூடியதையே சொல்லுபவர். இந்தக் குணந்தான் அவரை மகாத்மா வாக்கியது. அவர் கண்ணுக்கு உண்மைதான் வெளிப்படும். அவரு டைய மனமும் வாக்கும் உண்மையைத்தான் நினைக்கும், உண்மையைத்தான் பேசும். அவருடைய நோக்கமெல்லாம் ஏழைகளைப் பற்றியதாய்த்தானிருக்கும். அவருடைய கொள்கைகளெல்லாம் ஏழைகளின் கஷ்டத்தை ஒழிப்பதற்குத்தான் ஏற்படும். அவர் இந்தியாவின் விடுதலை என்பது ஏழைகள் விடுதலையைத்தான் குறிக் கும். மகாத்மாவின் சுயராஜ்யமே ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் சுயமரியாதையையும் சமத்துவத்தையுமே அடிப் படையாகக் கொண்டது. அவருடைய சேவை என்பது தியாகத்தையும் கஷ்டமநுபவிப்பதையும் அடிப்படையாகக் கொண்டது. இந்தக் காரணங்களால் அவர் தானாகவே மகாத்மா ஆகிவிட்டார். உபசாரப் பத்திரங்களில்லையே, வண்டியில்லையே, ஊர்வலமில்லையே என்று விசாரப்படுகிறவர்களும், ஊர்வலத்தையும் உபசாரப் பத்திரத்தையும் நாடிக்கொண்டு திரிகிறவர்களும், தங்களைத் தலைவர்களென்று சொல்ல வேண்டுமென்று பணம் கொடுத்து சொல்லச் செய்வோர்களும், பாமர ஜனங்களை ஏமாற்றி தாங்களும் தங்கள் குலத்தார்களும் மாத்திரம் மேன்மையடைய வேண்டுமென்று நினைத்துக் கொண்டு அலைவதையும் தேச சேவை, பொது ஜன சேவை என்று சொல்லிக் கொண்டு திரிவார்களேயானால் அவர்கள் எப்படி மகாத்மாவாகக் கூடும்? பதவிகளையும் பட்டங்களையும் மனதில் குறிப்புக் கொண்டு சுயராஜ்யம் சம்பாதிப்பதற்காக சட்டசபைக்குப் போகிறேன் என்று சொல்லுகிறவர்களும் அதற்கு வோட்டு சம்பாதிப்பதற்காக பணத்தைக் கொடுத்து பலரைக் கூட்டிக் கொண்டு தங்களைத் தலைவர்கள் தலைவர்கள் என்று சொல்லும்படி செய்கிறவர்களும் எப்படி மகாத்மா ஆகக்கூடும்? முதல் முதல் பாமர ஜனங்களுக்கு காந்தியென்று ஒருவர் இருக்கிறார் என்று அறியவே தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் சுயமரியாதைக்காக தானும் தன் குடும்பமும் கூட்டோடு சிறை சென்றதும் அங்கு நினைக்க வொண்ணாத கொடுமைகளையெல்லாம் அநுபவித்ததுந்தான் முக்கியக் காரணங்கள். அதற்குப் பிறகு இந்திய மக்களுக்கு இந்தியாவிலேயே சுயமரியாதை, சமத்துவம் வேண்டு மென்ற சேவையில் இறங்கியதே 2 - வது காரணம். அதற்குப் பிறகு ஏழை மக்களுக்கு வேண்டிய உண்மையான சுயராஜ்யத்தைக் கண்டு பிடித்து அதற்காக அஞ்சாது உண்மைபேசி பதினாயிரக்கணக்கான ஜனங்களைப் பின்பற்றும்படி செய்து தானும் அவர்களுமாய் சிறை சென்றதே மூன்றாவது காரணம். இன்னமும் அவருடைய கருத்தும் உழைப்பும் ஏழைகளையே பிரதானமாகக் கொண்டிருக்கிறது. ஆனால், ஏழைகள் விடுதலை பெற்றால், தாழ்த்தப்பட்டவர்கள் சுயமரியாதை யடைந்தால், ஒதுக்கப்பட்டவர்கள் சமத்துவமடைந்தால் பிரபுக ளென்போருக்கும் படித்தவர்களென்போருக்கும் உயர்ந்த ஜாதியா ரென்போருக்கும் தனி யோக்கியதை இருக்காது என்கிற காரணத்தினால் இம்மூவர்களும் மகாத்மாவுக்கு எதிரிகளாயிருக்க வேண்டிய அவசிய மேற்பட்டுப் போய்விட்டது. அதன் பலனாய் மகாத்மாவின் கொள்கை கள் கொஞ்சங் கொஞ்சமாய் ஓய்வு பெற வேண்டியதாயிருக்கிறது. காந்தீயமென்னும் ஏழைகளை விடுதலை செய்ய ஏற்பட்ட இயக்கத்தை பரப்ப ஆயுதமாய்க் கொண்ட காங்கிரஸ் என்னும் சபையானது படித்தவர்கள் வசமும் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லுகிறவர்கள் வசமும் செல்வவான்கள் வசமும் சிக்குண்டு போய்விட்டபடியால் படித்தவர்களுக்கு உத்தியோகம் சம்பாதிப்பதற்கும் மேல் ஜாதியா ரென்போருக்கு தங்களுடைய உயர்ந்த ஜாதித் தத்துவத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளத் தக்கதாய்ப் போய்விட்டதோடு ஏழைகளின் நிலைமை நாளுக்கு நாள் அதோ கதியாய் ஒரு வேளைக் கஞ்சிக்கு 2 - தரம் மூன்று தரம் தங்களுடைய கற்பை விற்க வேண்டிய ஸ்திரீகளையும் ஒரு வேளை சாப்பாட்டிற்காக ஏழை மக்களின் துரோகிகளின் பின்னால் திரிந்து கொண்டு அவர்களை இந்திரன் சந்திரன் என்று பாமர ஜனங்களிடம் புகழ்ந்து அவர்களுக்கு வோட்டு வாங்கிக் கொடுக்க தங்கள் மனசாட்சியை விற்கத்தகுந்த ஆண்களையும் லட்சக்கணக்காய் பெருக்கி வருகிறது. இவ்வுண்மை யறிந்த மகாத்மா இவர்களோடிருக்க மனம் பொறாதவராகி தனியே பிரிந்து ஏழைகளுக்கு உழைப்பதற்கென்று ராட்டினமும் கையுமாய் உட்கார்ந்து கொண்டு இரவும் பகலும் ராட்டினத்தைச் சுற்றிக்கொண்டு ஏழைகளிடத்தில் அன்பிருக்கிறவர்களெல்லாம் ராட்டினத்தைச் சுற்றுங்கள், கதரை உடுத்துங்கள், ஏழைகளைக் காப்பாற்றுங்கள், சட்டசபையில் ஏழைகளுக்கான காரியம் ஒன்றுமில்லை; தேச விடுதலைக்கு சட்டசபையினால் ஒரு பலனும் உண்டாகாது; எனக்கு அதில் கொஞ்சமும் நம்பிக்கையில்லை யென்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதுதான் காந்தீயம் என்பது. காந்தீயம் என்பதைச் சுருக்கமாய்ச் சொல்வதானால் ராட்டினம் சுற்றுவதும் கதர் உடுத்துவதும்தான் என்று சொல்லலாம். மகாத்மாவின் சுயராஜ்யம் என்பதையும் சுருங்கச் சொல்லுவதானால் தீண்டாமையை ஒழிப்பதும் கதர் உடுத்துவதும்தான் என்று சொல்லலாம்.

ஏறக்குறைய 30,40 வருஷங்களாக நமது ஜனங்கள் சட்டசபைக்கு போய்க்கொண்டும் வந்து கொண்டுந்தானிருக்கிறார்கள். சர்க்காரிடமிருந்தும் பல சீர்திருத்தங்களையும் பெற்று அதன் மூலமாய் அநேக பதவிகளையும் உத்தியோகங்களையும் அடைந்துமிருக்கிறார்கள். உதாரணமாய், ராஜப் பிரதிநிதி என்கிற ஒரு உத்தியோகம் தவிர மற்றபடி கவர்னர், நிர்வாகசபை அங்கத்தினர், மந்திரி, ரெவின்யூ போர்டு அங்கத்தினர் முதலிய பொறுப்பு வாய்ந்த உத்தியோகங்களும் கலெக்டர், ஜட்ஜூ, கமிஷனர் முதலிய அதிகாரம் வாய்ந்த உத்தியோகங்களும் இந்தியர்கள் வகித்து வருகிறார்கள். இதுகளினால் ஏழை மக்களுக்கு இதுவரையில் என்ன பலன் கிடைத்திருக்கிறது? சட்டசபை இல்லாத காலத்தில் இருந்ததைவிட சட்டசபை ஏற்பட்டபிறகு மக்களுக்கு நிர்ப்பந்தங்கள் அதிகமாகவும், சீர்திருத்தங்கள் இல்லாத காலத்திலிருந்ததைவிட ஏழைகளுக்கு வரி அதிகமாகவும், தரித்திரங்கள் அதிகமாகவும் ஏற்பட்டு இருக்கிறதே யல்லாமல் என்ன தேசத்துக்கு பலன் ஏற்பட்டிருக்கிறது. ஏழைகளின் பிரதிநிதிகள் என்று சொல்லி ஏழைகளை ஏமாற்றி சட்ட சபைக்குப் போனவர்கள் தங்களுக்கும், தங்கள் பிள்ளை குட்டிகளுக்கும், தங்கள் ஜாதியார்களுக்கும் பல உத்தியோகத்தையும் நிரந்தரமான பதவியையும் சம்பாதித்துக் கொண்டார்கள். இனியும் அதற்காகத்தான் படித்தவர் களும் உயர்ந்த ஜாதியாரென்பவர்களும் ஏழைகளை ஏமாற்றி வருகிறார் கள். ஆகையால் சட்டசபைப் பயித்தியத்தை மறந்து விடுங்கள்; ஏழைகளைக் கவனியுங்கள்; காந்தியை நினையுங்கள்; ஏழைகள் வாயில் மண்ணைப் போட்டுவிட்டு துணியின் மூலமாகவும் மற்றும் அந்நிய நாட்டு சாமான்கள் மூலமாகவும் அந்நிய நாட்டுக்கு அனுப்பும் பணத்தை நிறுத்துங்கள்; நீங்கள் கட்டியிருக்கும் அந்நிய நாட்டுத் துணியின் ஒவ்வொரு இழைநூலும் கிராம சிறீகளான உங்கள் சகோதரி களைக் கஞ்சிக்கு அலைய விட்டுவிட்டு அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கூலியை அந்நிய நாட்டுக்குக் கொண்டு போய் விட்டது. நீங்கள் 15 ரூபாய் போட்டு வாங்கும் 1 பீஸ் மல் துணியில் ஒன்னரை ரூபாய் பொரும்படியான பஞ்சுதானிருக்கிறது. பாக்கி ஏழை மக்களுக் குக் கிடைக்க வேண்டிய கூலியாகிய 13-8-0 ரூபாய் அந்நிய நாட்டுக்குப் போய்விட்டது. இந்த 13-8-0 ரூபாயில்லாமல் நம் நாட்டில் எத்தனை குடும்பம் பட்டினி இருக்கிறதென்பதை நினைத்துப் பாருங்கள். இந்த மல் துணிக்குப் பதிலாய் கதர் துணியை வாங்கிக் கட்டியிருப்பீர்களானால் அவ்வளவு பணமும் ஏழைத் தொழிலாளர் களுக்கும் விவசாயிகளுக்குந்தானே போய்ச் சேர்ந்திருக்கும். உங்களுக்கு ஜீவகாருண்யம் இருக்குமேயானால் கதரை வாங்கிக் கட்டாமலிருந் திருப்பீர்களா? அன்னதான மென்றாலென்ன? பாயாசத்திற்கு பாதாமிப் பருப்பு போதவில்லை என்று சொல்லித் திரியும் சோம்பேறி களுக்கு சமையல் செய்து போடுவதில்தான் அன்னதானம் என்று நினைக்கிறீர்களே. தவிர பசியால் வாடி தங்களது கற்பையும் தர்மங் களையும் இழந்து திரியும் சகோதரி, சகோதரர்களுக்கு கஞ்சி கிடைக்கும் வழியை கொஞ்சமும் கவனிக்காமலிருக்கிறீர்கள். இனியாவது சட்டசபைப் பயித்தியத்தையும், படித்தவர்களும் உயர்ந்த ஜாதியாரென்பவர்களும் தங்கள் உத்தியோகத்திற்கும், உயர்ந்த தன்மையை நிலை நிறுத்திக் கொள்ளுவதற்கும் கூலி கொடுத்து ஆள் களைக் கூட்டிக்கொண்டு வந்து உங்களை ஏமாற்றுவதையும் மறந்து, மகாத்மா காந்தியையும் ஏழைகளையும் பார்த்து நீங்கள் எல்லோரும் கதர் உடுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். இதுதான் உண்மையான காந்தீயமாகும். காந்தி படத்தை வைத்துக் கொண்டு பூஜை செய்வதும் காந்தி பெயரைச் சொல்லிக்கொண்டு சட்ட சபைக்குப் போவதும் ஒருக்காலும் காந்தீயமாகாது என்று உங்களுக்கு நான் வணக்கத்துடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

(திருவாரூர் தேசாபிமானச் சங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவு விழா 24-3-26 லிருந்து 28-3-26 வரை தொடர்ந்து ஐந்து தினங்கள் நடைபெற்றது.இதில் 28-3-26 - ந் தேதி தலைமை வகித்து காந்தீயம் என்பது பற்றி தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)

Friday, March 28, 2008

அதிகம் பேர் படிக்கவேண்டும்

இந்த புத்தக வியாபார நிலையத்தின் துவக்கவிழா ஆற்றுவதில் நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். தோழர் சண்முக வேலாயுதம் அவர்கள் என்னை வேண்டிக் கொள்ளும்போது இப்புத்தக வியாபார நிலையம் சுயநல இலாபத்தை பண வருவாயை உத்தேசித்து துவக்கப் பட்டதல்லவென்றும் நம் இயக்க நூல்களையும், பத்திரிகைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்ற பொது நல நோக்கத்தையே முக்கியமாகக் கருதி துவக்குவதாகவும் சொன்னார். இதைக் கேட்டு நான் மிகுதியும் மகிழ்ச்சியடைந்தேன். இந்தப் பணியாற்றுகிறவர்கள் நமது நாட்டில் இதுவரை எங்கும் துணிந்து இம்மாதிரி முன் வந்தததில்லை; முன் வந்தாலும் இலாபத்துக்காக அதாவது, ஏதாவது ஒரு இயக்கத்துக்காகவாவது ஏதாவது ஒரு கொம்கைக்காவது, ஏதாவது ஒரு மனிதனுக்காவது செல்வாக்கேற் பட்டால் அந்தப் பெயரைச் சொல்லிக் கொண்டு, அந்தக் கொம்கையைச் சொல்லிக் கொண்டு, அந்த மனிதனைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு அவன் பெயரைச் சொல்லிக் கொண்டு வயிறு வளர்க்க முன் வருபவர்களும், தன் வாழ்வை அமைத்துக் கொம்பவர்களும் அந்த இயக்கத்தை, கொம்கையை, மனிதனை வைவதில் செல்வாக்கேற்ப்பட்டால் உடனே வயிற்றுப் பிழைப்புக்கும் வாழ்க்கை நலத்துக்குமாக அவைகளை வைத்துக் கொண்டு வயிறு பிழைப்பவர்களும் அல்லது இந்தக் காரியங்களுக்குக் கூலி பெற்றுக் கொண்டு தொண்டர்களாக இருப்பவர்களும் எங்குமுண்டு என்றாலும் நம்நாட்டில் அதிகம். ஏனெனில், இங்கு மனிதத் தன்மையை உணர்ந்த மனிதத் தன்மையில் கவலைகொண்ட மக்கள் அரிது. அதாவது தங்களுடைய சுய இலா நஷ்டம், பெருமை, சிறுமையே இலட்சியமென்பதில்லாமல் பொதுநலக் கொம்கைகளுக்காக என்று வெளிவந்து தொண்டாற்றும் மக்கள் மிக மிக அருமையாகும்.


பெரிய ஜனக்கூட்டங்களில், அல்லது சந்தைகளில், நாடக இடங்களில் காப்பிக்கடை ஓட்டல்கள், சோடா, லெமன், லட்டுக்கடைகள் வைத்து விற்பனை செய்பவர்கள் பெரிய பொதுநலத் தொண்டர்கள், தியாகிகள் என்றால் முந்திய ஆட்களும், பெரிய பொதுநலத் தொண்டர்களும் தியாகிகளுமாவார்கள் என்கின்ற நிலையில் உள்ளவர்கள் அநேகர். சந்தை, நாடகம் கலைந்தவுடன் காப்பிக்கடை, ஓட்டலை மூடிவிட்டு வேறு வேலைக்குப் போவதுபோல் இந்தக் கூட்டங்களும் இயக்கத்துக்கோ, அதன் கொம்கைகளுக்கோ, தலைவனுக்கோ கொஞ்சம் செல்வாக்குக் குறைந்தவுடன் அவற்றின் மீது ஆளுக்கொரு கல்லை எறிந்துவிட்டு ஓடுபவர்களாவார்கள். அதுபோல் தான் சிலர் இன்று நம் கூட்டங்களிலும் வந்த பகுத்தறிவு நூல்கள் வெளியிடுவதும், சீர்திருத்த நூல்கள் வெளியிடுவதும் விற்பதுமாக இருக்கிறார்கள்.


இந்த நபர்கள் உற்சவம், வேறு பெருங்கூட்ட இடம் முதலியவைகளில் சென்று, அங்கு புராணங்கள், விபூதி, ருத்திராட்சம், துளசிமாலை, சாமி படம் விற்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றும் நாடகக்காரர்களும் இப்படித்தான்; ஒரு ஊரில் சீர்திருத்த நாடகம், புரட்சி நாடகம் என்று ஆடுவார்கள்; மற்றொரு ஊரில் பக்தி நாடகம், கடவும் திருவிளையாடல்கள் நாடகம் என்று ஆடுவார்கள்; சிலர் இரண்டிலும் கலந்துகொண்டு இருகூட்டத்தாரிடையும் செல்வாக்குப் பெற்று, இருகூட்டப்பிரச்சாரகர்களையும் விலைக்கு வாங்கிப் பொதுமக்கள் காசைக் கறந்து கொம்வார்கள். ஆகவே, இப்படி யாவும் வியாபார முறையில் இயக்கம், கொம்கை, நபர்கள் கொண்டாடப்படுவதும், வெறுக்கப்படுவதும், தொண்டாற்றப்படுவதும் அநேகம் காண்கிறோம்.


நூல் வியாபார நிலையங்கள் எந்த மாதிரி நூல் நிலையமானாலும் இனி நஷ்டப்பட வேண்டிய அவசியமேற்படாது. நாட்டில், படிக்கும் மக்கள் அதிகமாகி வருகிறார்கள். படித்த மக்கள் அதிகமாகப் பெருகிவிடவில்லையென்றாலும் படித்த மக்கள் கொஞ்சம் பேரும் எதையாவது படிக்கவேண்டும் என்கின்ற ஆர்வமுள்ளவர்களாக ஆகி வருகிறார்கள்; ஒன்றுமற்ற அத்தான், அம்மாஞ்சி, மன்னி, மதனி ஆரிய பழக்க வழக்க உரையாடல்களும், வெறும் காதல் கதைகளும்; நேரப்போக்கு, போதைக்கேற்ற பித்தலாட்டக் கட்டுரைகளும்; ரிஷிகள், மகான்கள், பாபாக்கள், விளம்பரங்கள் செய்து மக்களை வஞ்சிக்க ஏமாற்றுச் செய்திகளும் இவ்வளவு ஏராளமாய் விற்பனையாகுமா? இவைகளுக்காகவும், கொம்கை இல்லாமல் ஈசல்களைப் போல் பொல பொலவென்று தோன்றுமா? மக்களைப் படிக்கச் செய்யாமல் செய்து வைத்திருந்தார்கள் ஒரு கூட்டத்தார்; அதை மீறிக் கொண்டு எப்படியோ மக்களுக்கும், எதையாவது படிக்கவேண்டும் என்கின்ற ஆர்வம் வந்துவிட்டது. இது யாரால் ஏற்பட்டிருந்தாலும் இந்த ஆர்வத்தை முன் தடை செய்து வைத்திருந்த கூட்டத்தார் மூடநம்பிக்கைக்கும் மானமற்ற தன்மையை விரும்புவதற்கும் பித்தலாட்ட வஞ்சகர்களுக்கு மக்களை அடிமையாக்குவதற்கும் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். அதற்கு நாம் இடம் விடுவதென்றால் இது மகாமோசமான காரியமேயாகும். இந்த நாடு, இன்று சிறப்பாக நம் மக்கள் படியாமையைவிட படித்தாலேயே பெரிதும் மானமற்றவர்களாகவும் இன்னும் சொல்ல வேண்டுமானால் அயோக்கியர்களாகவும், பாமர மக்களைச் சுரண்டிப் பிழைப்பதிலேயே இன்பம் அனுபவிப்பவர்களாகவும், அனேகராகி விட்டார்கள் என்றால் அதைச் சுலபத்தில் மறுக்க எவராலும் முடியாது என்பேன்.


படிப்பு எதற்கு? அறிவுக்கு அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் தொல்லை கொடுக்காதவனாய் நாணயமாய் வாழ்வதற்கு என்பதல்லாமல் வேறு எதற்கு என்று சொல்லுவோம்? ஆனால், தோழர்களே! இன்று நீங்கள் படித்தவர்கள் என்பவர்களைப் பாருங்கள். 'படித்த கூட்டத்தில்' நான் மேலே சொல்லியபடி பயன்படுகிறது. ஒரு படித்தவனைக் காட்டுங்கள், பார்க்கலாம். இமயம் முதல் குமரி வரை உங்களுக்கு நன்றாய் அனுபவத்தில் தெரிந்த எவனாவது ஒரு படித்தவனை இந்தத் தன்மையில் அதாவது, 'படித்ததால் இந்த தன்மை ஏற்பட்டது' என்று காட்டுங்கள்; சொல்லுங்கள்! சாதாரண மனிதரில் கூட இல்லாவிட்டாலும் பெரிய மகான்கள், பேரறிவாளர்கள் பிரபுக்கள், இராசாக்கள், ஆச்சாரியார்கள், குருமார்கள், ரிஷிகள், மகாத்மாக்கள், தெய்வீக சக்தி பொருந்தியவர்கள், சாமியார்கள், அரும்வாக்காளர்கள், தியாகிகள், வீரர்கள் முதலிய எந்தக் கூட்டத்திலாவது ; ஜட்ஜுகள், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், குமாஸ்தாக்கள், வாத்தியார்கள், வித்துவான்கள், வக்கீல்கள் முதலிய எந்தக் கூட்டத்திலாவது காட்டுங்கள் பார்க்கலாம்! ஆனால், இதன் காரணத்தாலேயே மக்களைப் பிறவி அயோக்கியர்கள் என்று யாராவது சொல்லக்கூடுமா? ஒரு நாளும் சொல்லமாட்டார்கள், அப்படியானால் படித்த மக்கள் என்பவர்கள் பெரிதும் 100க்கு 99பேர், ஏன் உபகாரிகளாக இல்லை என்றால் இதற்கு என்னுடைய பதில், 'அவர்கள் படிப்பு அப்படிப்பட்டதாகும்' என்பதைத் தவிர வேறொன்றும் என்னால் சொல்ல முடியவில்லை.


இன்றைக்கு நாம் அனுபவிக்கும் தொல்லைகளுக்கு அதாவது மக்களால் மக்கள் அனுபவிக்கும் தொல்லைகளுக்குப் படித்தவர்கள், படிப்பு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆடு, நரிக்குப் பயன்படுவதுபோல், படிக்காதவன் படித்தவர்கட்கு உணவாய்ப் பயன்படுகிறான். நன்றாகச் சொல்ல வேண்டுமானால், படித்தவன் படிக்காதவனை ஏமாற்றிச் சுரண்டுகிறான் என்பதைத் தவிர, படிப்பு என்பது எதற்குப் பயன்படுகிறது? அப்படியானால், படிப்பு கூடாது என்று நான் சொல்லுகிறேனா? அல்லது, நான் சொல்லுவதிலிருந்து படிப்பது தப்பு என்று அர்த்தமா? இரண்டும் அல்ல. மற்றென்னவென்றால், நம் நாட்டில் ஆரியர் ஆதிக்கம், வருணமுறை ஏற்பட்ட காலம் முதல் நமக்களிக்கப்படும் படிப்பு - நாம் படிக்க முடிகிற படிப்பு அப்படிப்பட்டது. எப்படிப்பட்டது என்றால், பெரிதும் அயோக்கியத்தனத்துக்கு பித்தலாட்டத்துக்கு, மற்றவனை ஏமாற்றிப் பிழைப்பதற்குத் தூண்டுவது, நடத்துவது தவிர வேறொன்றுக்கும் பயன்படாதது என்றுதான் பொரும் கொள்ள வேண்டும்.


அரசியலில் மூத்த அரசாங்க அதிகாரிகளைப் பாருங்கள். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், அயோக்கியத்தனமாய், ஆணவமாய் நடக்காத ஒரு அதிகாரியைக் காட்டுங்கள். அதிகாரி என்றால் அவர்கள் இலஞ்சம் வாங்கினாலும் மக்களுக்கு எஜமானத்தனம் செய்வதையே பிழைப்பாய்க் கொண்டவர்கள் என்பதல்லாமல் மக்களுக்கு நாணயமாக ஒரு நிலையாகத் தொண்டாற்றுவது, தயவு தாட்சண்யம், அனுதாபம் ஆகியவைகளுடன் மக்களுடன் நடந்து கொள்ளுவது என்கின்ற தத்துவத்தில் நடப்பவர் யார்? அடுத்து படித்தவர் என்பவர்கள், அரசியலில் தலைமை வகிக்கும் வக்கீல்கள் என்பவர்கள். இந்தக் கூட்டத்தார்தான் இப்போது மகாத்மா முதல், அரசியல், தலைமை மந்திரி, அய்கோர்ட் ஜட்ஜ் முதலிய பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டவர்கள், இவர்களால் மனித சமுதாயத்திற்கு தாசி, வேசி, சூது, கள், சாராயக்கடை, வழிப்பறி, தீவட்டிக் கொள்ளை, பிக்பாக்கெட் முதலியவைகளால் மக்களுக்கேற்படும் கேடுகள், மோசங்கள் ஆகியவைகளைவிட அதிகமாக ஏற்படுகின்றன என்பதல்லாமல் அதில் அவர்கள் பணிகளில் உள்ள பொதுநலம் என்னவென்று சொல்லுங்கள். பார்க்கலாம் வக்கீல்களும், ஜட்ஜுகளும் இல்லாமலிருந்தால் மக்களுக்கும் இவ்வளவு சாந்தியற்ற தன்மை, நாயணக் குறைவாய் நடப்பதால் இன்பம் (என்பவை) ஏற்பட்டிருக்குமா? அடுத்தபடியாகப் படித்தவர்கள், கல்வித்துறையில் வாத்தியார்கள். இவர்கள் வாழ்க்கை எதற்குப் பயன்படுகிறது என்று பார்த்தால், இவர்களிடம் படித்தவர்கள் தாம் அல்லது, இதற்குத் தகுந்த படிப்பை மக்களுக்கும் புகுத்தச் சாதனமாய், ஆயுதமாய் இருந்தவர்கள் தாம் வாத்தியார்கள் என்றால் யார் மறுக்க முடியும்? படித்தவர்களில் பெரும்பாலோர் யோக்கியர்களாய் இல்லையென்றால், வாத்தியார்கள் வாழ்வு, வாத்தியார்கள் தொண்டு எப்படி யோக்கியமானதென்று கூறமுடியும்? இனி, பொதுஜன ஊழிய குமாஸ்தாக்கள் நிலையைச் சொல்லவே வேண்டாம். அவர்கள் கழுகுகள் அல்லது கத்தரிக்கோலால் வாழ்கின்றவர்கள் என்பதல்லாமல் அதில் பொதுநலம் பொதுநல உணர்ச்சி என்பது என்ன இருக்கிறது!


இனி, பண்டிதர்கள். இவர்கள் ஒழுக்க இயலைச் சேர்ந்தவர்கள். இவர்களை எதற்குச் சமமாய்ச் சொல்லலாம்? மலக்குழியைக் கலக்கிவிடுகிறவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மக்களுக்குத் தெரியாத அயோக்கியத்தனத்தை-சுலபத்தில் தெரிந்துகொள்ள முடியாத அயோக்கியத்தனத்தை மூடத்தனத்தை ஒருவரை ஒருவர் சுரண்டுவதற்குக் காட்டிக் கொடுப்பவர்கள் என்பதல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? பத்திரிகைக்காரர்கள், புத்தகம் எழுதுகிற எழுத்தாளர்கள், மகான்கள், புராணப் பிரசங்கிகள், மதவாத அறிஞர்கள் முதலிய இவர்கள் தொண்டில் இருக்கும் பொது நலம், நாணயம், முன்னேற்றத்தன்மை, அறிவு விரியும்நிலை, நல்ல சங்கதிகள் தெரியும் நன்மை என்ன இருக்கின்றன?


பத்திரிகைக்காரர்கள் - மக்களை முட்டாம்களாக்கவும்; அவர்கள் மானம் பெறாமல் இருக்கவும்; முன்னைய கூட்டத்தாருக்கு அடிமையாக இருக்கவும்; தாங்கள் கொள்ளை கொள்ளவும்; மனிதனின் மான உணர்ச்சியை, முற்போக்கு உணர்ச்சியை மழுங்க வைத்துப் பொய்யையும், ஏமாற்றத்தையும் அறிவிக்க அறிவுக் களஞ்சியமாக மக்களுக்கும் நிரப்பவுமல்லாமல் - அவர்களது தொண்டால் மக்களுக்கு ஏற்பட்ட பயன் என்ன? சயன்ஸ் விஞ்ஞானம் படித்த தனி நிபுணர்கள் என்பவர்களும் மக்களை ஏமாற்றித் தன்னைப் பெரிய மேதாவி என்று கருதிக் கொண்டு, அகம்பாவமாய் மற்றவர்களை முட்டாம்கள் என்று அவமதிப்பதல்லாமல் அவர்களால் ஏற்பட்ட விஞ்ஞான நலம் என்ன? உதாரணமாக, இந்த மேசை மேலிருக்கும் ரேடியோ என்பது 4,5 வருடங்களுக்கு முன்பே 250 ரூபாய்க்கு வாங்கி இருப்பார்கள். இதுவரை இலட்சக்கணக்கான மக்கள் கேட்டிருப்பார்கள். கண்டிருப்பார்கள். நமது நாட்டில் இலட்சக்கணக்கான ரேடியோ இருக்கின்றது. அப்படியிருந்தும் இது எப்படி ஒலிகளைக் கொண்டு வந்து எப்படிப் பரப்புகிறது என்பது இதுவரை எத்தனைப் பேருக்குத் தெரியும்? கம்பியில்லாத் தந்தி எப்படிச் சேதி சொல்லுகிறது? கிராம போன் எப்படிப் பாடுகிறது. பேசுகிறது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?


புராணம் எழுதி அச்சுப்போட்டு விற்றது எத்தனையோ லட்சப் பதிப்புகளும், கோடி, கோடி ரூபாய்களுமிருக்கும். அதில் ஏற்பட்ட நல்லறிவை நல்ல படிப்பை (அதில் இல்லை; இருந்தால்) தெரிந்து கொண்டவர்கள் எத்தனைப்பேர் இருக்கிறார்கள்? தோழர் திரு.வி.கல்யாணசுந்தர (முதலியார்) டி.கே.சிதம்பரநாத (முதலியார்), நாமக்கல் இராமலிங்கம் (பிள்ளை), மகா மகோபாத்தியாய கதிரேசன் (செட்டியார்) மீனாட்சி சுந்தரம் ( பிள்ளை) போன்ற திராவிடர்கள் பலர் - பார்ப்பனர்களால் புலவர்கள் என்று மாபெரும் விளம்பரம் பெற்றவர்களாவர். இவர்களால் இதுவரை ஏற்பட்ட மூட நம்பிக்கையில்லாத மானமற்ற தன்மை அல்லாத அறிவு நூல் ஒன்றைக் காட்டுங்கள். உயர்ந்த கலைகள் என்பவை மக்களை எச்சில் கலையாக ஆக்குகின்றன. மற்ற எழுத்தாளர்கள் பகுத்தறிவை மனித முன்னேற் றத்தை மானத்தைக் குறியாகக் கொண்ட வீரத்தைக் கிளப்பும் புத்தகம் ஒன்றைக் காட்டுங்கள்! படித்தவர்கள் கூட்டத்திலுள்ள திராவிடன் கதியே இப்படியிருந்தால், இனி ஆரியன் எழுதும் பத்திரிகை, பிரசுரிக்கும் புத்தகம், பாடும் பாட்டு, ஆடும் நாடகம், எழுதும் நாவல், கதை எப்படியிருக்கும்? கடவுளையும், காதலையும் இன்னது என்று புரிந்து கொள்ளாதவர்களே கலை உலகில் புகுந்து கொலை செய்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் காரணம், 'இவர்கள் படித்த படிப்பு அப்படிப்பட்டது' என்று தான் நான் சொல்லுவேனேயொழிய, இவர்கள் மேல் குற்றம் சொல்லவில்லை.


இன்றைய படிப்பின் தொல்லைகளின் மாபெரும் தொல்லை 'சம்பளம் போதாது' என்பது. இது மகா அக்கிரமம். ஏனெனில், உழைப்புக் கணக்குப் பார்த்துச் சம்பளம் கேட்பதில்லை. படித்தால், படிப்பைப் பார்த்து சம்பளம் கேட்கப்படுகிறது; மாதம் 15 ரூபாய்காரரும் சம்பளம் பற்றாது என்கிறார்; 30 ரூபாய்க்காரரும் பற்றாது என்கிறார். 100 ரூபாய்க்காரரும் அதற்கு மேற்பட்டவரும் பற்றாது என்கிறார். இதற்கு அர்த்தம் என்ன? படித்தால் மேல் வாழ்வு வாழவேண்டும்; படித்திருக்கும் குடும்பத்துக்கு அதிகச் செலவு செய்யவேண்டும். ஆதலால் அதிகச் சம்பளம் வேண்டும் என்பதல்லாமல் வேறு என்ன? மற்றவன் படிக்காதவன் - அவனுக்கு மேல் வாழ்வு தேவையில்லை; அவன் குடும்பத்துக்கு அதிகச் செலவு தேவையில்லை - 20 அல்லது 30 ரூபாய் போதும்; அதுவே கொடுக்கக்கூடாது என்பது போலத்தானே - குறைந்த சம்பளத்துக்குக் காரணம் சொல்லப்படுகிறது. சம்பளப் போராட்டம், படித்தவர்களிடையே இப்படியிருக்க லஞ்சம், கொள்ளை, லாப வியாபாரம், புரட்டு இத்தனையும் படித்தவர்கள் என்பவர்களிடையில்தான் இருக்கின்றன.


சம்பளம் உயர வேண்டுமானால், சர்க்கார் பொக்கிஷத்துக்கு வரியின் மூலம்தான் பணம் வரவேண்டும்; வரியென்றால் அது பெரிதும் படிக்காத உழைப்பாளி மக்களின் உழைப்பில் இருந்துதான் கசக்கிப் பிழியப்பட வேண்டும். அந்த உழைப்பாளியின் வாழ்க்கைத்தரம், துணிமணி செலவு, பிள்ளைகுட்டி படிப்பு, சினிமா, டிராமா, பெண்டு பிள்ளை அலங்காரம், காபி, உப்புமா, சீர் ஆகிய ஒன்றைப் பற்றியும் கவலைப்பட்டு சம்பளத் திட்டம் போடுவதில்லை. ஏன்? உழைப்பாளி படியாதவன். உழைக்காமல் பேனாவில், பாட்டில், கூத்தில், பிரசங்கத்தில், கவியில் வாழ்வு நடத்துகிறவன் படித்தவன். இது தவிர, இரு கூட்டத்துக்கும் வேறு வித்தியாசம் என்ன சொல்லமுடியும்?


எனவே, இன்றையப் படிப்பு வர்ணாசிரம தர்மத்தை அனுசரித்து ஏற்பட்டது என்பதோடு, ஒருவன் உழைக்க வேண்டும்; ஒருவன் உழைக்காமல் ஏமாற்றி வாழ வேண்டும்; இதற்காக ஒரு கூட்டம் இதற்கேற்ற படிப்பு படித்திருக்க வேண்டும்; ஒரு கூட்டம் படியாமல் முட்டாம்களாக- அப்பாவிகளாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவும் படிப்படியாய் வருணாசிரம தர்மம்போல் இருக்க வேண்டும் என்பதையே அடிப்படையாய்க் கொண்டு இருக்கிறது.


ஆகையால், இப்போது உண்மையாகப் பொது நலத்துக்கு ஏதாவது உழைக்க வேண்டும் என்பவர்கள் - இந்தப் படிப்பு மாறும்படியான காரியத்துக்கு - இந்தப் படிப்பால் ஏற்பட்ட கேடுகள் மாறும்படியான காரியத்துக்கு ஏற்ற படிப்பினை உண்டாக்க வேண்டும். அதற்கேற்ற பிரசுரங்கம் ஏற்பட வேண்டும்; அவை எப்படியாவது மக்களுக்கும் பரப்பப்பட வேண்டும். இவையெல்லாம் பிரசங்கத்தாலேயே முடிந்துவிடாது. இவற்றிற்கு உதவும் படியான பிரசுரம் தெளிவாகக் குறைந்த விலையில் சவுகரியமாக யாருக்கும் கிடைக்கும்படிச் செய்யப்பட வேண்டும். இப்போதுள்ள பிரசுரம் / 100க்கு 99பேர் மோசடிக்கும் கொள்ளையடிப்பதற்குமே பயன்படுகிறது.


இது சமயத்தில் பொதுமக்களுக்கு ஒரு வார்த்தை அறிவியக்க நூல்கள் - சீர்சிருத்த நூல்கள் என்றால் ஒவ்வொன்றையும் வாங்கி வீட்டில் நிரப்பிக் கொள்ளவேண்டுமென்பது அர்த்தமல்ல. வாங்கிப் படித்துவிட்டு, படித்து முடிந்தவுடன் முக்கால் விலைக்கு அரை விலைக்கு விற்றுவிட வேண்டும். மறுபடி வேறு வாங்க வேண்டும். புத்தக வியாபாரியும் தான் விற்ற புத்தகத்தை அரை விலைக்குக் கொண்டு வந்து கொடுத்தால், நலுங்காமலிருந்தால் வாங்கிக் கொள்ள வேண்டும். இதுதான், மேலைநாடுகளில் புத்தகம், பிரசுரம் முதலியவை விஷயங்களில் இருந்துவரும் பழக்கம். வாங்கினால் படிக்க வேண்டும்; படித்தவுடன் விற்றுவிட வேண்டும்; 'முக்கிய புத்தகம்' 'கிடைக்காது' என்றிருந்தால் வைத்துக் கொள்ளலாம். அதிகம் பேர் படிக்கவேண்டும் என்பது தான் யோக்கியமான பொதுநல ஆசிரியர்களின், பொதுநல வியாபாரிகளின் இலட்சியமாய் இருக்கும்.


------ ஈரோட்டில் 22.1.1947 ல் நடந்த புத்தக வியாபார நிலையத்தின் துவக்க விழாவில் தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவு

நான் நாத்திகன் - ஏன்?

நான் நாத்திகன் - ஏன்? என்னும் இந்நூல் தோழர் சர்தார் கே. பகத்சிங் அவர்களால் லாகூர் சிறைக் கோட்டத்திலிருந்து அவரது தந்தையார்க்கு காவற்கூட அதிகாரிகளின் அனுமதியின்மீது எழுதப்பட்ட ஒரு கடிதமாகும். அக்கடிதத்தை தோழர் பகத்சிங் அவர்களின் தகப்பனார் லாகூரிலிருந்து வெளிவரும் `ஜனங்கள் என்னும் ஆங்கில கிழமை வெளியீட்டில் பிரசுரித்திருந்தார். அக்கடிதத்தை மொழிபெயர்த்து புத்தக ரூபமாய் வெளியிட வேண்டுமென்று பல தோழர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சென்னை மாகாண நாத்திக சங்க அமைச்சர் தோழர் ப. ஜீவானந்தம் அவர்களால் இனிய தமிழில் மொழிபெயர்த்து நமக்குக் கொடுக்கப்பட்டதாகும்.

அந்த நூலிலிருந்து சில பகுதிகள்: எனது நாஸ்திக உணர்ச்சி இவ்வளவு சமீபகாலத்தில் தோன்றியதன்று பிறர் என்னைத் தெரிந்து கொள்ளாத சாதாரண வாலிபனாக இருந்த காலத்திலேயும் மற்ற எனது தோழர் பலருக்கு கடவுள் என்பதாக ஒன்று இருக்கிறது என்று தெரிவதற்கு முன்பேயும் தெய்வ நம்பிக்கையை விட்டு விட்டேன். இதை எனது தோழர்கள் அறியார். கல்லூரி மாணாக்கனாக மட்டும் இருக்கும் ஒருவன் நாத்திக உணர்ச்சியைத் தூண்டத் தகுந்த அவ்வளவு மிதமிஞ்சிய அகங்காரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியாது. கல்லூரியில் வாசிக்கும்பொழுது நான் சில ஆசிரியர்களால் நேசிக்கப்பட்டேன். சிலரால் வெறுக்கப் பட்டேன். என்றாலும், நான் ஒருபோதும் மிகுந்த சுறுசுறுப் புடைய மாணாக்கனாகவோ, சதா படித்துக் கொண்டிருக்கும் பையனாகவோ இருந்ததில்லை. அந்நாளில் அகங்காரத்தால் தலைகொழுக்கும் உணர்ச்சிகள் ஊட்டும் சந்தர்ப்பங்கள் எனக்கு ஒன்றேனும் வாய்க்கவில்லை. நான் சுபாவத்தில் நாணமும், கூச்சமும் உள்ள பையனாக இருந்ததோடு, பிற்கால வாழ்க்கையில் நம்பிக்கையற்றவனாகவும், குழப்பமுடையவனாகவும் இருந்தேன். அக்காலத்தில் நான் ஒரு பூரண நாஸ்திகவாதியல்ல. என்னைச் சீராட்டி, பாராட்டி வளர்த்த என்னுடைய பாட்டனார் மிகப் பிடிவாதமுள்ள வைதீக ஆரிய சமாஜி. ஆரிய சமாஜி வேறு எதற்கு வேண்டுமானாலும் இடங்கொடுப்பார். ஆனால் நாஸ்திகத் திற்கோ கடுகளவும் இடங்கொடாத பரம விரோதி. எனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு நான் லாகூர் டி.ஏ.வி. கலாசாலையில் சேர்ந்து அங்குள்ள விடுதியில் ஒரு வருஷம் கழித்தேன். அங்கே நான், காலை மாலை பிராத்தனையோடு, காயத்திரி மந்திரத்தை மணிக்கணக்காக ஜெபிப்பது வழக்கம். அக்காலத்தில் நான் ஓர் பரம பக்தனாகவே இருந்தேன். பின்னர் எனது தகப்பனாரோடு வாழ ஆரம்பித்தேன். மத வைராக் கியத்தைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு தாராள நோக் குடையவராகவே இருந்தார். அவருடைய உபதேசங்களால்தான் நான் சுதந்திரத்திற்காக எனது வாழ்க்கையைத் தத்தஞ் செய்ய வேண்டுமென்று உணர்ச்சியும், உறுதியும் கொண்டேன். ஆனால், அவர் ஒரு நாஸ்திகரல்ல. அவர் கடவுளிடத்தில் திடமான நம்பிக்கையுடையவர். தினசரி பிரார்த்தனை செய்யும்படியாக அவர் எனக்கு உற்சாகமூட்டுவது வழக்கம்.
இவ்விதமாகவே நான் ஆரம்பித்தில் வளர்க்கப்பட்டேன். ஒத்துழையாமை காலத்தில் நான் தேசியக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்குதான் எல்லா மதங்களைப் பற்றியும் - கடவுளைப் பற்றியும்கூட தாராளமாக எண்ணுவதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும், தர்க்கிப்பதற்கும் ஆரம்பித்தேன். அப்பொழுதும் கூட நான் பரம தெய்வபக்தனாகவே இருந்தேன். அதுகால பரியந்தம், நான் எனது தலைமயிரைக் கத்தரித்துவிடாமல் (மதாச்சாரப்படி) வளர்த்துக் கட்டிக்காப்பாற்றி வந்தேனானா லும், சீக்கிய மதத்திலும் பிற மதங்களிலுமுள்ள சித்தாந்தங் களிலும் கொள்கைகளிலும் எனக்குக் கிஞ்சிற்றும் நம்பிக்கை கிடையாது. ஆனால், கடவுள் ஒருவர் உண்டு என்பதில் மந்திரம் எனக்குப் பரிபூரண நம்பிக்கையிருந்தது.


பச்சை நாத்திகனானேன்


நமது போராட்டத்திற்குரிய லட்சியம் எது என்று தெளிவாக அறிந்திருக்க வேண்டிதே மிக முக்கியம். நாங்கள் காரியத்தில் காட்டித் தீர வேண்டிய குறிப்பாக திட்டமெதுவும் அப்பொழுது எங்களுக்கு இல்லாதிருந்த காரணத்தால் உலகப் புரட்சி சம்பந்தமான பலதிறப்பட்ட லட்சியங்களை ஆர அமர சீர் தூக்கிப் பார்ப்பதற்குப் போதுமான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நான் அராஜகத் தலைவரான பக்குனின் என்பவரின் தத்துவங்களைக் கற்றேன். பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாகிய மார்க்சின் நூல்களில் சிலவற்றைக் கற்றுணர்ந்தேன். ஏகாச்சக்ராதிபத்திய ஆதிக்க இருள் படர்ந்திருந்த தங்களுடைய நாட்டில் புரட்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்த கர்ம வீரர்களான லெனின், ட்ராஸ்கி இன்ன பிறரால் இயற்றப்பட்ட நூற்களில் பெரும்பாலானவற்றை அலசி அலசி ஆராய்ச்சி செய்தேன். அவர்கள் எல்லோரும் பச்சை நாத்திகர்களே.
பக்குனின் எழுதிய `கடவுளும் ராஜ்யமும் என்ற நூல் பூர்த்தி செய்யப்படாத துண்டு துணுக்குகளாக இருந்த போதிலும், விசயத்தை வெகு ருசிகரமாக விளக்குகிறது. சில காலத்திற்குப் பின் நிர்லம்ப சாமியால் எழுதப்பட்ட பகுத்தறிவு என்னும் புத்தகத் தையும் படிக்க நேர்ந்தது. அதில் நாத்திக வாதம் தெளிவு படும்படியில்லாமல் ஒரு தினுசாகக் கூறப்படுகிறது. இந்த விசயமானது அந்தக் காலத்தில் எனக்கு மிக ருசிகரமானதாகி, எனது உள்ளத்தை கொள்ளைக் கொண்டு விட்டது. 1926-ஆம் ஆண்டு முடிவில் இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, நடத்தி வரும் சர்வசக்தி வாய்ந்த கடவுள் ஒருவர் உண்டு என்ற கொள்கை அடியோடு ஆதாரமற்றதென உணர்ந்து கொண்டு விட்டேன். என்னுடைய இந்த தெய்வ நம்பிக்கையற்ற தன்மையை நாத்திக வாதத்தை பகிரங்கப்படுத்தினேன்.


சில நிபந்தனைகள்


ஒரு நாள் காலையில் சி.அய்.டி. இலாக்காவின் பிரதம சூப்பிரன்டெண்டான மிஸ்டர் நியூமென் என்னிடம் வந்தார். அவர் மிகுந்த அனுதாபத்தோடு நீண்ட நேரம் என்னோடு பேசிக் கொண்டிருந்தார். பின் முடிவாக, அவர்களால் கோரப்படுகிறபடி நான் எவ்விதமான அறிக்கையும் கொடுக்காவிட்டால், காக்கோரி வழக்கு சம்பந்தமாய், யுத்தம் தொடங்கச் சதியாலோசனை செய்ததாகவும், தசரா வெடிகுண்டு விபத்து சம்பந்தமாய் கொடிய கொலைகள் செய்ததாகவும், என்னை விசாரணைக்கு அனுப்புமாறு தாங்கள் நிர்ப்பந்திக்கப்படுவோமென்று கூறினார். மேலும் அவர் என்னை குற்றவாளியாக்கவும் தண்டித்துத் தூக்குத் தண்டனை விதிக்கவும் போதுமான சாட்சியங்கள் இருப்ப தாகவும் என்னிடம் கூறினார். நான் முற்றும் குற்றமற்ற நிரப ராதியாயிருந்தேன். ஆயினும், அந்தக் காலத்தில் போலீசார் எதையும் இஷ்டப்பட்டால் இஷ்டப்படி முடித்து விடுவார் களென்று நம்பினேன். அன்றைய தினமே சில போலீஸ் உத்தியோகஸ்தர்கள் என்னிடம் வந்து ஒழுங்காக இரண்டு வேளைகளிலும் கடவுளை பிரார்த்தனை செய்யும்படி என்னைத் தூண்ட ஆரம்பித்தார்கள். நானோ அப்பொழுது ஒரு நாஸ்தி கனாக இருந்தேன். சமாதானமும் சந்தோசமும் குடிகொண்டி ருக்கும்பொழுது மாத்திரம்தான் நான் நாஸ்திகவாதியென்று தற்புகழ்ச்சியடைந்து கொள்வதா அன்றி மிக்க கஷ்ட திசையிலும் யான்கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டிருப்பதா என்பதைக் குறித்து எனக்குள்ளாகவே ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்று விரும்பினேன். நீண்ட நெடும் ஆலோசனைக்குப் பின்னர் எனது மனோரதம் கடவுளை நம்பி பிரார்த்தனை செய்யும்படி தூண்டக்கூடாதென்று முடிவு கட்டினேன். அம்முடிவின்படி நான் எவ்விதப் பிரார்த்தனையும் செய்யவில்லை. எனது உண்மையான சோதனைகள் அதுதான். நான் அதில் வெற்றி சூடினேன்.


பழிகள் வரும்


நம்முடைய முன்னோர்கள் ஏதோ உயர்ந்த வஸ்துவான சர்வசக்தியுள்ள கடவுள்மீது நம்பிக்கை வைத்துக் கொண்டிருந் தவர்களென்ற காரணத்திற்காக, யாரேனும் ஒருவன் அந்த நம்பிக்கையின் உண்மையை மறுக்கத் துணிந்தால், அல்லது அந்த சர்வ சக்தி பொருந்திய வஸ்துவை மறுப்பதற்குத் திடம் கொண்டால், அவன் மதத்துரோகியென்றும், விசுவாச காதக னென்றும் பழித்துரைக்கப்படுகின்றான். அவனுடைய வாதங்கள் எதிர்வாதங்களால் அசைக்க முடியாதபடி ஆணித்தரமானவை களாயிருந்தால், அவனுடைய உணர்ச்சி பயங்கரமான கஷ்ட நிஷ்டூரங்களாலும் சர்வசக்தியுள்ள கடவுளின் கோபாக்கினி யாலும் சிதறடிக்கப்படாத வன்மையுடையதாயிருந்தால், அவனை அகங்காரம் பிடித்தவனென்றும் அவனுடைய உணர்ச்சியைத் தற்பெருமை கொண்டதென்றும் எள்ளி இழித்துத் தூற்றுகிறார்கள். பின்னர் ஏன் இவ்வாஸ்திக சிகாமணிகள் இந்த வீண் வாதத்தில் காலங்கடத்த வேண்டும்? சகல விஷயங்களையும் பூராச்சங்கதிகளையும் பூரணமாகத் தர்க்கித்துவிட ஏன் முயற்சி செய்ய வேண்டும்? முதன் முதலாக இப்பொழுதுதான் பொது மக்களுக்கு இத்தகைய கேள்விகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. முதன் முதலாக இப்பொழுது தான் பொது மக்களால் இது காரியானுஷ்டானத்திலும் கையாளப்படுகிறது. எனவே, இவ்விஷயத்தை விரிவாக ஆராய்ச்சி செய்ய நேரிட்டிருக்கிறது.
முதல் கேள்வியைப் பொறுத்தவரையில் என்னை நாஸ்தி கனாகும்படித் தூண்டியது எனது அகங்காரமல்லவென்பதைத் தெளிவுப்படுத்திவிட்டேனென்றே கருதுகிறேன். என்னுடைய விவாதத்தின் போக்கைப் பரிசீலனை செய்து பொருத்த முடையதா அல்லவா என்று தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு வாசகர்களைச் சேர்ந்ததேயன்றி என் பொறுப்பன்று. அப்பொழு துள்ள நிலைமையில் கடவுள் நம்பிக்கையானது எனது வாழ்வில் ஆறுதலளித்து பாரத்தையும் குறைக்கும். கடவுள் நமபிக்கையற்ற தன்மையோ, சந்தர்ப்பங்களையெல்லாம் சங்கடத்திற்குள் ளாக்குவதோடு நிலைமையை மோசமாக்கி கடுமையும், கொடுமையும் நிறைந்ததாகச் செய்துவிடும். மதோன்மத்தர் போதம் துளியளவு இருப்பினும் வாழ்க்கை காவிய வர்ணனைக் காண்பதுபோல் நயமுள்ளதாகத் திகழும். ஆனால், எனது முடிவுக்குத் துணை புரிய எந்தவிதமான போதையையும் - மயக்க நெறியையும் - நான் விரும்பவில்லை. நான் ஒரு யதார்த்தவாதி. என்னுள் எழும் உணர்ச்சியைப் பகுத்தறிவின் துணையால் அடக்கியாள முயற்சித்துக் கொண்டு வருகிறேன். இந்த முடிவை அடைவதில் நான் எப்பொழுதுமே வெற்றி பெற்று வரவில்லை. ஆனால் மனிதனுடையே கடமை இடையறாது முயற்சிப்பதே. ஜெயாப ஜெயம் சந்தர்ப்பத்தையும் சுற்றுச் சார்புகளையும் பொறுத்தது.


குருட்டு நம்பிக்கை ஆபத்தை விளைவிக்கும்


முன்னேற்றத்தை நாடும் எந்த மனிதனும் பழைய மதத்தின் ஒவ்வொரு பாகத்தையும் அலசி அலசி ஆராய்ச்சி செய்து தீர வேண்டும். பழைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் போட்டிக்கழைத்துத் தீர வேண்டும். பிரஸ்தாபத்திலிருக்கும் மத சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றுக்கும் - எவ்வளவு அற்ப சொற்ப மானதாயிருந்தாலும் - காரண காரியங்கள் கண்டுபிடித்துத் தீர வேண்டும். இவ்விதமாக ஆழமாய் ஆராய்ச்சி செய்தபின், ஒருவன் ஏதேனுமொரு கொள்கையை அன்றி, கோட்பாட்டை நம்பும்படி நேர்ந்தால், அவனுடைய நம்பிக்கை தப்பும் தவறுமுடையதாக தவறான வழியில் செலுத்தப்பட்டதாக மயக்கம் நிறைந்ததாக இருக்கலாம். இருந்தபோதிலும் அவன் சீர்திருத்தமடைவதற்கு இடமுண்டு. ஏனென்றால், பகுத்தறிவே அவனுக்கு வழிகாட்டும் நட்சத்திரமாக ஒளிர்கின்றது. ஆனால், விருதா நம்பிக்கையும் குருட்டு நம்பிக்கையும் ஆபத்தை விளைவிக்கும். அது மூளையை மந்தப்படுத்தி, மனிதனை பிற்போக்காளனாக மாற்றி விடுகிறது. தான் உண்மை நாடுவோன் என்று உரிமைப் பாராட்டிக் கொள் ளும் எந்த மனிதனும் பழைய நம்பிக்கை முழுவதையும் போட்டிக்கழைத்தாக வேண்டும். பழைய நம்பிக்கையால் ஆராய்ச்சிக்கு ஈடு செய்ய முடியாவிட்டால், அது நொறுங்கி தவிடுபொடியாகி விடும். எனவேஅவனுடைய முதற்கடமை, அதனைச் சின்னாபின்னமாகச் சிதறியடிப்பதன் மூலம், புதிய தத்துவத்தை நிறுத்துவதற்கான நிலத்தை செப்பனிடுவதாகும். இது அழித்தல் வேலை. இதன் பிறகுதான் ஆக்கல் வேலையின் ஆரம்பம். இந்தத் புனருத்தாரணத்திற்குப் பழையவற்றில் சிலவற்றை சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்ளவும் செய்யலாம்.


கேள்விகள் எழுப்புகிறேன்


பிரபஞ்சத்தை இயக்கி, தனது ஆக்ஞா சக்கரத்தைச் செலுத்திக் கொண்டு இருக்கும் நன்னறிவோடு கூடிய முழு முதற்பொருள் (கடவுள்) ஒன்று இல்லை என்று நான் உணர்ந்துகொண்டு வந்திருக்கிறேன். நாம் இயற்கையில் நம்பிக்கை வைக்கிறோம். முன்னேற்ற இயக்கம் முழுவதும் மனிதன் தனக்கு ஊழியஞ் செய்வதற்காக இயற்கையை அடக்கி ஆதிக்கம் செலுத்துவதில் குறிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு `சின்மய சக்தி பின்னாலிருந்து இயற்கையை நடத்திக் கொண்டிருக்கிற தென்பதுதான் நமது தத்துவ சாஸ்திரத்தின் சாரம். நாஸ்திகவாதத்தின் சார்பாக நான் சில கேள்விகளை ஆஸ்திகர்களிடம் கேட்கிறேன் (1) நீங்கள் நம்புவதுபோல் சர்வ வியாபியும், சர்வக்ஞனும், சர்வசக்தனுமாகிய ஒரு கடவுள் இந்த உலகத்தைப் படைத்திருந்தால், அவன் ஏன் இதைப் படைத்தானென்று தயவு செய்து கூறுங்கள். அந்தோ! துன்பமும், துயரமும், கஷ்ட நிஷ்டூரங்களும் நிறைந்த உலகம்! பல திறப்பட்ட சதா இருந்து கொண்டிருக்கிற கணக்கு வழக்கற்ற முடிவுகள். பூரணமாக திருப்தியடைந்த ஜீவன் ஒன்றுகூட இல்லை.
தயவு செய்து, அது தெய்வ சங்கற்பம் - கடவுள் சித்தம் - ஈசன் இட்ட சட்டம் என்று கூறிவிடாதீர்கள். அவன் எந்தச் சட்டத் திலாவது கட்டுப்படுத்தப்பட்டு விட்டால், அவன் சர்வசக்தி யுடையவனல்ல; அவனும் நம்மைபோன்ற மற்றொரு அடிமை யாகத்தான் இருக்க முடியும். அது அவனுடைய பொழுதுபோக்கு - தமாஷ் - லீலா வினோதம் என்பீர்களோ? தயவு கூர்ந்து அவ்வாறு சொல்லாதீர்கள். நீரோ என்பவன் ரோமாபுரியை எரித்தான். `நீரோ, கொடுங்கோலன், ஈரமற்ற நெஞ்சினன், கேடு கெட்டவன் என்று பலமாகக் கண்டித்து, கர்ண கடூரமான தூஷணைச் சொற்களால் வசைமாரி செய்திருப்பதால் சரித் திரத்தின் பக்கங்கள் கறைப்பட்டுப் போயின. செங்கிஷ்கான் என்பவன் தனது சந்தோஷத்தையும் இன்பத்தையும் நாடி சில ஆயிரம் பேர்களை பலியிட்டான். நாம் அவனை மிகக் கடுமையாக வெறுக்கிறோம். அவனுடைய பெயரைக்கூட வெகுவாக நிந்திக்கிறோம்.


என்ன தீர்ப்பு சொல்லுகிறீர்கள்?


அப்படியானால் கணக்கு வழக்கற்ற கொலைகளை - துக்கமும் துயரமும் நிறைந்த சம்பவங்களை ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நாழிகையிலும், ஒவ்வொரு நிமிஷத்திலும் செய்து கொண்டிருக்கிற `என்றுமுள நீரோவாகிய முழு முதற் கடவுளுக்கு நீங்கள் என்ன தீர்ப்புக் கூறப் போகிறீர்கள்? செங்கிஷ்கான் தோற்றோடும்படியாக ஒவ்வொரு கணத்திலும் நடைபெறும் அவனுடைய (கடவுள்) தீய காரியங்களை நீங்கள் எவ்வாறு ஆதரிக்க நினைக்கிறீர்கள்? அவன் இந்த உலகத்தை மெய்யான (கண்கண்ட) நரகத்தை - சதாகவலையும், குழப்பமும், சஞ்சலமும் நிறைந்த கசப்புக்குரிய அமைதியற்ற ஸ்தலத்தை - எதற்காகப் படைத்தான்? படைக்காதிருக்கக்கூடிய சக்தியும் தன்னிடமிருக்கும்பொழுது சர்வ சக்தனாகிய அக்கடவுள் மனிதனை, ஏன் இத்தகைய உலகில் சிருஷ்டித்தான்? உத்தமர் களான நிரபராதியான தியாக மூர்த்திகளை, உண்மையின் பொருட்டுக் கஷ்ட நிஷ்டூரங்களுக்கு இரையாகின்றவர்களை மறுமையில் சம்மானிப்பதற்காகவும், துஷ்டர்களை, கொடியவர் களை, மோச நாசக்காரர்களை மறுமையில் தண்டிப்பதற் காகவுமே கடவுள் சிருஷ்டித்தார் என்று கூறுகிறீர்களா? நன்று நன்று! உங்களிடம் ஒன்று கேட்கின்றேன். பின்னால் மிக மிருதுவான பஞ்சால் ஒத்தடம் கொடுத்து, அரிய இனிய சிகிச்சையால் நோவைக் குறைத்து நோவை சுகப்படுத்துவதற்காக, தற்பொழுது உடம்பில் படுகாயம் பண்ணுகிறேன் என்று கூறும் ஒரு மனிதனுடைய வாதத்தை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? கிளாடியேட்டர் ஸ்தாபனத்தை ஆதரிக்கிறவர்களும், நிர்வகிக்கிற வர்களும், அகோரப் பசியால் பயங்கரமான கோபாவேசத்துடன் கர்ஜிக்கும் சிங்கங்களின் முன்னால் மனிதர்களைத் தூக்கியெறி கிறார்கள். அவ்வாறு தூக்கியெறிவது எறியப்படுகிறவர்கள் சிங்கங்களோடு போராடி, அந்தக் கொடிய மிருங்கங்களால் ஏற்படும் மரணத்திலிருந்து தப்பித்துக் கொண்டாரானால், அவர்களைப் பின்னால் பாதுகாத்து நல்ல மாதிரியிற் பராமரிப்பதற்காகவேயென்று காரணம் கூறுகிறார்கள்? இந்த நியாயம் பொருத்தமாயிருக்க முடியுமா? முடியாது. இதனாலே தான் அந்த முழுமுதற் கடவுள் எதற்காக உலகத்தைப் படைத்து, அதில் மனிதனைச் சிருஷ்டித்தான் என்றும், தமாஷ் பண்ணி பொழுதுபோக்கவென்றால் அவனுக்கும் நீரோவுக்கும் என்ன வித்தியாசமென்றும் நான் கேட்கிறேன். தரித்திரமும், மூடத்தனமும் தலைவிரித்தாடும் ஒரு தோட்டியின் குடும்பத்திலோ அன்றி, ஒரு சாமர் சாதிக்காரன் (தீண்டக் கூடாதவன்) குடும்பத்திலோ ஒரு மனிதன் பிறந்தால் அவன் கதி என்னாகும்? அவன் பரம ஏழை ஆகையால் படிப்பது அசாத்தியம். சாதித் திமிர் கொண்ட மேல்ஜாதிக்காரர்களால் அவன் வெறுத்து ஒதுக்கப்படுகிறான். அவனுடைய மூடத்தனம், அவனுடைய தரித்திரம், அவன் நடத்தப்படுகின்ற தன்மை இவைகளெல்லாம் ஒன்றாகி, சமுதாயத்தை வெறுக்கும்படியான நிலைமைக்கு கொண்டு வந்துவிடுகிறது. அதன் காரணமாக அவன் குற்றஞ் செய்கிறானென்று வைத்துக் கொள்ளுவோம்! அதற்கு ஜவாப்தாரி யார்? கடவுளா? அவனா? அல்லது சமுதாயத் தின் படித்த கூட்டத்தாரா? மமதையும், பேராசையும், உச்சி முதல் உள்ளங்கால்வரையில் கொண்ட, குதிக்கும் `பிராமணர்களால் வேண்டுமென்றே நிர்மூடத்தனத்தில் ஆழ்த்தி அமுக்கப்பட்டிருக் கும் தாழ்த்தப்பட்ட மக்களின் தண்டனைக்குப் பொறுப்பாளி யார்? உங்களுடைய `பரிசுத்த ஞான நூற்ககளாகிய வேதங் களிலிருந்து சில வாக்கியங்களை அவர்கள் கேட்டாலும், அவர்களுடைய காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டுமென்று தண்டனை விதித்ததற்கு அபராதம் செலுத்த வேண்டியவர்கள் யார்? அவர்கள் ஏதாவது குற்றஞ் செய்தால் அவர்களுக்காக யார் பொறுப்பேற்று தண்டனைக்குத் தலை கொடுப்பார்? அன்புக் குரிய நண்பர்களே! மேற்கூறிய கோட்பாடுகளெல்லாம் விசேஷ சலுகையடைவோரின் கற்பனைகள். இக்கோட்பாடுகளின் உதவியால் அவர்கள் தாங்கள் பிறரிடமிருந்து பறித்துக் கொண்ட அதிகாரம், அய்ஸ்வர்யம், அந்தஸ்து முதலானவையென்று தீர்மானிக்கிறார்கள்.


நூல்: திராவிடர் கழக வெளியீடு - நன்கொடை ரூ.10

Sunday, March 23, 2008

ஏன் வேண்டும் தமிழிசை?

தமிழன் தான் நுகரும் இசையை, தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்களைப் பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதைத் தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு என்கின்றான். இதை யார்தான் ஆகட்டும், ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் குறை கூறவேண்டும் என்று கேட்கிறேன். அதிலும் தமிழன் இப்படிக் கேட்பதை - தமிழனால் தமிழனல்லாதவன் என்று கருதப்பட்டவன், ஏன் மறுக்க வேண்டும்? இது மிக மிக அதிசயமானதும், தமிழனால் மிக மிக வருந்தத்தக்கதுமாகும். தமிழன் - தமிழ் மக்கள், தமிழில் பாட்டுக் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். பணம் கொடுப்பவன், தனக்குத் தமிழ்ப் பாட்டுப் பாடப்படவேண்டு மென்று ஆசைப்படுகிறான்; பாட்டுக் கேட்-பவன் தமிழில் பாட்டுப் பாடவேண்டும் என்று ஆசைப்படுகிறான். இந்த ஆசையில் பழந்தமிழர் அல்லாதார் அதை மறுக்கவோ, குறை கூறவோ, குற்றம் சொல்லவோ எப்படி உரிமையுடையவர்கள் என்று கேட்கிறேன்.
தமிழரென்றும், தமிழரல்லாதவர் என்றும் பேதம் பாராட்டக் கூடாது என்பதாகத் தமிழர்களுக்கு அறிவுரை கூறும் இந்தப் பெருமான்களே, தமிழில் பாடவேண்டும் என்பது பொதுநலத்துக்குக் கேடு, கலைக்குக் கேடு, கலை நலத்துக்குக் கேடு என்று சொல்ல வந்தால் - இவர்கள் உண்மையில் தமிழர் - தமிழரல்லாதவர் என்கின்ற உணர்ச்சியைக் குறையச் செய்பவர்களா?, அல்லது நெருப்பில் நெய்யை ஊற்றி எரியச் செய்யும்படியான மாதிரியில் வளரச் செய்பவர்களா? என்று கேட்கிறேன். அன்றியும், இப்படிப்பட்ட இவர்கள் தங்களைத் தமிழர்களென்று சொல்லிக் கொள்ளக்கூடுமா? காது, கண், மனம் ஆகியவை எல்லா விஷயங்களுக்கும் எல்லாருக்கும் ஒன்றுபோல் இருக்க முடியாது என்பது அறிஞர் ஒப்ப முடிந்த விஷயமாகும்.

தமிழில் பாடு! என்றால், சிலர் - அதுவும் ஒரு வகுப்பாரே பெரிதும் ஆட்சேபணை சொல்ல வந்ததாலேயே, தமிழ் இசை இயக்கம் வகுப்புத் துவேஷத்தையும் உண்டு பண்ணக் கூடிய இயக்கமாகவும், பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ் இசையை வளர்க்க வேண்டிய இயக்கமாகவும் ஆகவேண்டியதாய் விட்டது.

இத்தனை பெரியவர்கள் எதிர்ப்பும், தமிழரல்லாதவர்களின் பத்திரிகைகளின் எதிர்ப்பும் ஏற்பட்ட பிறகேதான் இது ஒரு இயக்கமாக விளங்க வேண்டியதாயும், சில இடங்களில் பாட்டுப் பிழைப்புக்காரர்களை நிர்ப்பந்தப்டுத்தி, பயமுறுத்தித் தமிழில் பாடச் செய்ய வேண்டியதாயும், பாட்டுப் பிழைப்புக்காரர்கள் சில இடங்களுக்குப் போகும்போது பந்தோபஸ்துக்கு ஆட்களைக் கூட்டிக்கொண்டு போகவேண்டியதாயும் ஏற்பட்டுவிட்டது. பாட்டுப் பிழைப்புக்காரனான சிலர்மீது தமிழர்களுக்கு வெறுப்புக்கூட ஏற்படும்படியாக நேர்ந்துவிட்டது. கூடிய சீக்கிரத்தில் இசைக் கலை வியாபாரம் தமிழர்கள் அல்லாதவர்களை விட்டு விலகினாலும் விலகிவிடலாம்; அல்லது, அவர்களே அதை விட்டு விலகினாலும் விலகிவிட நேரிடலாம் என்றுகூடக் கருத-வேண்டியதுமாகிவிட்டது.

பொதுவாகச் சொன்னால், இந்த நிலையானது நாட்டின் நலத்துக்கும் ஒற்றுமைக்கும் ஏற்றதல்ல என்றே சொல்லுவேன். இன்று தமிழனின் நிலைமை தமிழன் அன்னிய மொழியைக் கற்கவேண்டும் என்று சொல்லுவது தேசாபிமானமும் நாட்டு முற்போக்கு இயல்கலை அபிவிருத்தியாக ஆகிவிடுகிறது. தமிழனுக்குத் தெரியாத - புரியாத மொழியில் தமிழன் பாட்டுக்கேட்க வேண்டும்; இதற்குப் பேர்தான் கலை வளர்ச்சியாம்! மற்றும், தமிழனுக்குத் தமிழ் வேண்டும்; தமிழ் இசை வேண்டும் என்பது தேசத் துரோகமாகவும், கலைத் துரோகம் வகுப்புத் துவேஷம் என்பதாகவும் ஆகிவிடுகிறது. காரணம், பெண்களுக்கு ஆண்கள் ஒழுக்க நூலும், கற்பு நூலும் எழுதுவதுபோல் - தமிழனுக்குத் தமிழனல்லாதவன் - தமிழரை அடிமை கொண்டு அடக்கி ஆண்டு சுரண்டிக் கொண்டிருப்பவன் - தேசாபிமானம், மொழியபிமானம், கலையபிமானம் முதலியவை கற்பிப்பவனாய்ப் போய்விட்டதேயாகும்.

அறிஞர்களே! நமக்குப் பாட்டுக் கேட்கக்கூடத் தெரியாது என்றும், நம் மொழியானது பாட்டு இசைக்கக்கூடப் பயன்படாது என்றும் சொன்னால், இந்த இழிமொழி - நம் உயிரைப் போயல்லவா கவ்வுகிறதாயிருக்கிறது என்று மிக்க வேதனையோடு கூறுகிறேன். தமிழ்த் துரோகத்தால் வாழவேண்டியவனும், வள்ளுவர் சொன்னதுபோல் - குலத்திலே அய்யப் படவேண்டியவனுமான தமிழ் மகன்-களுக்கு, இது எப்படி இருந்தாலும் அவர்களது வாழ்வும் நம் எதிரிகளின் புகழுமே அவர்-களுக்கு அணியாகவும் அலங்காரமாகவும் முக்கிய இலட்சியமாகவும் இருக்கும். ஏன் - நம் எதிரிகளுக்கு இருக்கும் செல்வாக்கால் நம்மில் துரோகிகள் பெருகிவிட்டார்கள்; இன்னும் பெருகுவார்கள் என்பதும் உண்மைதான். ஏனெனில், மானங்கெட்ட தமிழ்மக்கள் பலர் இப்படிப்பட்ட இனத் துரோகிகளை அறியா-மையாலும், சுயநலத்துக்காகவும் ஆதரிக்கிறார்-கள் என்பதை நாம் பிரத்தியட்சத்தில் காண்கிறோம். ஆனால், நாம் இப்படிப்-பட்டவர்களையும்தான் முதலில் நன்றய் வெறுக்க வேண்டும்; அவர்களைத் தமிழர் சமுதாயத்தில் இருந்து ஒதுக்கித் தள்ள வேண்டும்.

தமிழ் இசையை நாம் ஏன் வேண்டுகிறோம்? எதற்காக நமக்குத் தமிழில் இசை வேண்டு-மென்கிறோம்? தமிழ்மொழியை ஏன் வேண்டுகிறோம்? ஸ்காந்தத்தை - கந்த புராணம் என்றும், கிருஷ்ணனை - கிருட்டிணன் என்றும், ஹோம் நமஹா என்பதை - ஓம் நமோ என்றும், நரசிம்ஹமூர்த்தி என்பதை - சிங்கமுகக் கடவுள் என்றும், தசகண்ட இராவணன் என்பதை - பத்துத் தலை இருட்டுத் தன்மையன் என்றும் மொழிபெயர்த்துக் கொண்டு வணங்கி, நம்பி, திருப்தி அடையவா? என்று கேட்கிறேன்.

தமிழிசைக்கு நாம் கிளர்ச்சி செய்ததானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள்; பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை நுகர்வோரும் தமிழில் இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். இனி இந்த உணர்ச்சி குன்றிவிடாது. இசை விருந்தளிக்கும் செல்வவான்களும், நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும் வரை இந்த உணர்ச்சி வலுத்துக்கொண்டே போகும்.
தமிழிசை நமது நல்வாழ்வுக்குப் பயன்படும்படி செய்யவேண்டியது நமது கடமை. இன்று இதுவரை தமிழல்லாத வேறு மொழியில் இருந்த இசை (பாட்டுகள்), தமிழில் பாட வேண்டியதாக ஏற்பட்டதற்குக் காரணம், நமக்குத் தமிழினிடம் ஏற்பட்ட உணர்ச்சியாகும். இது ஒரு பெரிய மாறுதல்தான்
.

இசை, நடிப்பு ஆகியவை எதற்குப் பயன்-படுகின்றன? ஏதாவது ஒரு கருத்தை ஒரு சேதியைக் காட்டுவதற்கும், அதை மனத்தில் பதிய வைப்பதற்கும் அது வெறும் வாக்கியத்தில் இருப்பதை இசை இன்பத்தோடும், நடிப்பு இன்பத்தோடும் மனத்திற்குள் புகுத்துவதற்கும் ஆகவே முக்கியமாய் இருந்து வருகின்றன.

அடுத்தபடியாக இரண்டாவதாகத்தான் அவற்றில் இன்ப நுகர்ச்சி வருகின்றது. ஆகவே, இசைக்கும் நடிப்புக்கும் கருத்தும் செய்திகளும் பிரதானமாகும்; அடுத்ததாகவே சுவை பிரதானமாகும். அதன் உண்மையான அனு-பவமும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆனால், நுகர்வோரும் இசைத்து நடிப்போரும் செய்தியையும், சுவையையும் பற்றிக் கவலை-யில்லாமல் நுகர்வோர்கள் நேரப் போக்குக்கும், வேறு பல காட்சி இன்பத்திற்கும் அதைச் சாக்காக வைத்து நுகர்வதாலும், இசைத்து நடிப்போர்கள் பொருளுக்கும், வேறு சுயநலத்துக்கும் பயன்படுத்துவதாலும் அதற்கு உண்டான பயன் ஏற்படாமல் போய் விடுகிறது.

-------------------------------------------------- தந்தைபெரியார்

தமிழ் வழிக் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்

சிறுபான்மையினரின் பண்பாட்டு உரிமை பற்றியும், அந்த உரிமையின்படி சிறுபான்மை மக்கள் தங்களின் தாய்மொழி வாயிலாகவே தத்தம் ஆரம்பகால கல்வியைப் பெற முடியுமா? இவ்வுரிமையை அடிப்படை உரிமையாக நமது அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறதா? என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் என்ற சொல், மத சிறுபான்மையினர் என்ற சொல்லோடு தொடர்புடையது அல்ல. மத சிறுபான்மையினரின் நலன்களை நமது அரசியல் சட்டம் பாதுகாக்கும் நோக்கத்தோடு, நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் அவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கபோது, எண்ணிக்கையில் ஒப்பிடும்போது குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களை மொழி சிறுபான்மையினர் என்று நான் குறிப்பிடுகிறேன்.

எடுத்துக்காட்டாக, சென்னையை பூர்வ இடமாகக் கொண்டு வாழ்ந்த தமிழர்கள், வேலை தேடி பம்பாயில் குடியேறுகின்றனர். இவர்கள் பொதுவாக, வந்தேறியாக அல்லது மொழி ரீதியாக இந்தியா முழுமையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சிறுபான்மையினராகக் கொள்ளப்படாவிட்டாலும், தாங்கள் வாழும் பகுதிகளில் மொழி சிறுபான்மையினராகவே வாழ நேரிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இவர்களை நான் "கலாச்சார சிறுபான்மையினர்' (Cultural Minorities) என்று குறிப்பிட விரும்புகிறேன்.

இந்தியா ஒரே நாடு என்று பொருள்படுத்தி, தமிழர்களின் மக்கள் தொகையைக் கணக்கிட்டு, பம்பாயில் வாழும் தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளைப் புறக்கணிக்க நான் தயாராக இல்லை
.
இவர்கள் தாங்கள் வாழுமிடத்தில் அல்லது தங்குமிடத்தில் மொழி ரீதியாக வாழ நேரிடுவதால், அவர்களின் உரிமைகளை எவ்வித இடையூறுமின்றிப் பாதுகாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அவர்களது மொழி, எழுத்து மற்றும் இலக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன்.

பணிக்காக புலம் பெயர்ந்து செல்பவர்கள், அங்கு நிரந்தரமாகத் தங்க விரும்புவதில்லை. தங்களின் பூர்வீக இடத்தின் மொழி, வாழ்வியல் முறை மற்றும் பண்பாட்டைத் துளியும் இழக்க அவர்கள் தயாராக இருப்பதும் இல்லை. மாறாக, தங்களது பூர்வீக இடத்துடன் நிரந்தரத் தொடர்பினை ஏற்படுத்தி தங்களின் வாழ்க்கையை நடத்துகின்றனர். திருமணம், திருவிழா மற்றும் அனைத்துச் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் சொந்த ஊருக்குச் சென்று மகிழ்கின்றனர்.

நடைமுறை இவ்வாறாக உள்ளபோது, தங்களின் பணிநிமித்தம், பம்பாயில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி தருவது, பம்பாய் அரசினுடைய கடமை. இந்தக் கடமையை நான் சட்டப்பூர்வமான உரிமையாக அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடுகின்றேன். இதைப்போலவே, அந்தந்த மொழிவாரி மாநிலங்களைச் சார்ந்த மக்கள், தங்களது தேவைகளுக்காக, வேற்று மொழி மாநிலங்களுக்குச் சென்று வாழ்ந்தாலும், அவர்களது தாய் மொழிக் கல்வியினை தடையின்றிப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசு தங்களது சட்ட மன்ற விதிகளின் படி வழிவகை செய்ய வேண்டும். இது, அரசமைப்புச் சட்டத்தின் கடமை என்பதை இங்கு நான் வலியுறுத்துகிறேன்.

ஆந்திரம் அல்லது தமிழ் நாட்டைச் சார்ந்தவர் பம்பாயில் வாழும் போது, பம்பாயில் இந்தி பிரதான மொழியாக இருப்பதால், தமிழ் அல்லது தெலுங்கு படிப்பது மிகுந்த பொருட்செலவினை ஏற்படுத்தும். இந்தத் தடையை நீக்கி புலம் பெயர் சிறுபான்மையினர்களின் தாய் மொழிக் கல்விக்கு ஆகும் செலவை, சம்பந்தப்பட்ட மாநில அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ள நமது அரசியல் சட்டம் வழிவகை செய்துள்ளது.

ஒரு மொழியின் எழுத்தும், கலாச்சாரமும் அனைத்து வகையிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் மற்ற எல்லா நடைமுறை சிக்கலைவிடவும் முக்கியம்.

எந்த ஒரு மாநில அரசு இயற்றும் சட்டமும், நமது நாட்டின் எந்தவொரு மொழியின் எழுத்து மற்றும் கலாச்சாரம் பாதிக்கும் வகையில் இருத்தல் கூடாது. ஏனெனில், ஒரு மொழியின் எழுத்து அல்லது கலாச்சாரம் பாதிக்கப்படுமானால், அது சம்பந்தப்பட்ட தனிமனிதனின் அடிப்படை உரிமையை அர்த்தமற்றதாக மாற்றி விடுகிறது. இதை அனைத்து மாநில அரசுகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதை மீறி எந்த ஒரு மாநில அரசாவது சட்டத்தின் மூலம் தங்கள் மொழியைத் திணிக்க, புலம் பெயர் வாழ் மக்களின் மொழியை அலட்சியப்படுத்தினால், அந்த மாநில அரசு இயற்றும் சட்டம், இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 8க்கு முரண்பாடு உடையதாகிறது. இதன்படி, அந்த மாநில அரசின் சட்ட மன்றம் இயற்றும் சட்டம் செயலற்றதாகி விடும் என்று நமது அரசியல் சட்டம் தெளிவாகக் கூறுகிறது.


‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 13 பக்கம் : 429

Saturday, March 22, 2008

இன்றைய கடவுள் பட பிரச்சினை

நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கடவுள் சம்பந்தமான சர்ச்சை (விவகாரம்) அரசியலில் கிளம்பி விட்டது. இதுபொது நன்மைக்கு நலம் தரும் காரியம் என்றே நான் கருதுகிறேன். இதன்மீது சத்தியாக்கிரகம் - பட்டினி - மறியல் - போராட்டம் - கிளர்ச்சி - வாக்குவாதம் முதலியவை தீவிரத்தன்மையில் நடைபெற வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். அப்போது தான் மக்கள் தெருக்களில் கடவுள் பொம்மை (உருவத்தையும், படங்களையும், கடவுள் பிரச்சார (சம்பந்தமான) புராண இதிகாசக் கதை முதலியவற்றையும் தெருவில் போட்டு உடைக்கவும் கிழித்தெறியவும் தீயிட்டுக் கொளுத்துவுமான காரியங்களை குஷாலாக உற்சாகமாகச் செய்ய முன்வரக் கூடும்

ஏன் என்றால் நம் நாட்டில் யாருக்குமே கடவுள் என்றால் என்ன என்பது தெரியவே தெரியாது. பார்ப்பானுக்கு மாத்திரம் தான் நன்றாகத் தெரியும். அதாவது தங்கள் ஜாதியார் அல்லாத மக்களை மடையர்களாக்கவும் (அவர்களது) ``இழிவின்'' பயனாகவும் உழைப்பின் பயனாகவும் தாங்கள் (பார்ப்பனர்கள்) மேல்ஜாதிக்காரராகவும் பாடுபடாமல் உயர்பதவிகள் பெற்று ``மேன்மக்களாக'' வாழ்வு நடத்தவுமான ஒரு சாதனம் கடவுளை உண்டாக்கி பரப்பி மக்களை வணங்கச் செய்யத் தக்கதுதான் என்பது பார்ப்பனக் குஞ்சு குருத்து முதல் எல்லோருக்கும் தெரியும். அதனால், ஏமாந்துபோய் முட்டாள்களாக - ``இழிபிறவி'' மக்களாக ஆக்கப்பட்டிருப்பவர்கள் வெட்கப் பட்டு விஷயம் உணர்ந்து சிறிதாவது திருத்தமடைய மேற்கண்ட கிளர்ச்சிகள் பயன்படும் என்றே கருதி வரவேற்கிறோம். தமிழன் - திராவிடன் என்றாலே மானம் ஈனம் அற்ற பிண்டம் என்பது இன்று உலகம் எங்கும் கருதப்பட்டு வருகிறது. இந்த நிலை இப்படிப்பட்ட கிளர்ச்சிகளாலாவது ``தமிழர்களுக்கு இப்போதுதான் மான உணர்ச்சி ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது'' என்று தோன்றக்கூடும். அதிலும் இம்மாதிரிக் கிளர்ச்சிகளால் மக்கள் ஜெயிலுக்குப் போகும்படியான நிலை ஏற்படுமானால் பொதுமக்களுக்கு எளிதில் அவர்களுடைய மான உணர்ச்சியைத் தூண்டக் கூடிய வாய்ப்பு ஏற்படலாம் என்றும் கருதுகிறேன். மக்களுக்குப் போதிய அறிவும் பிரச்சாரமும் இல்லாத காரணம் கூட இன்று இவ்வளவு சர்ச்சைக்கு இடமான காரியமாக ஆக்கப்படுகிறது. தக்க பிரச்சாரம் நடந்தால் அரசாங்க பொதுக் காரியாலயங்களில் உள்ள படங்கள் மாத்திரமல்லாமல் தனிப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் மாட்டியிருக்கும் படங்களையும் தங்கள் முட்டாள்தனத்தையும் உணர்ந்து அவற்றையும் தூக்கி வீசி குப்பைத் தொட்டியில் போடுவார்கள். அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இப்படிப்பட்ட கிளர்ச்சிகளால்தான் முடியும். இதை நாமே தொடங்கி இருக்க வேண்டியது அறிவுடைமையாகும். அதில்லாததனால் பார்ப்பனர்கள் தொடங்கி இருக்கிறார்கள். இது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பே ஆகும். இனி இந்தப் பிரச்சினை தமிழர் சமுதாய இயல் பிரச்சார பிரச்சினையில் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவம், உருவப்படம், பிரச்சார நூல்கள் ஆகியவற்றை அழிப்பதும் எரிப்பதும் அப்புறப்படுத்துவதுமான காரியத்தை வலியுறுத்தும் பிரச்சாரத்தையும் சேர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டியது அவசியமாகும். கடவுள் படத்தை சுவரில் தொங்கவிடுவது பக்திக்கு ஆகவா, பிரச்சாரத்திற்கு ஆகவா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.



தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்
(`விடுதலை, 31.7.1968).

இலஞ்சம் பற்றி பெரியார்

நமது நாட்டிடை இதுகாலை அரசாங்க ஊழியர்களுக்குள்ளும் பொது மக்களுக்குள்ளும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் மிகவும் எளிய வழக்கமாகப் போய்விட்டது. மக்களிடையே இவ்வித வழக்கங்களை இழிவாய்க் கருதும் மனப்பான்மையும் மாறிவிட்டது. அரசாங்க ஊழியர்கள் என்போர் ஓர் ஊரினின்றும் மற்றொரு ஊரிற்கு மாற்றப்பட்டு வந்தால் முதன் முதலாக அந்த ஊரில் லஞ்சம் வாங்கிக் கொடுக்கும் தரகர்களைத் தேடுவதுதான் அநேகமாய் அவர்களது வேலையாய் இருக்கின்றது. பொதுமக்களும், அரசாங்க நீதி மன்றங்களிலோ, நிர்வாக மன்றங்களிலோ தங்களுக்கு ஏதேனும் அலுவல்கள் ஏற்பட்டால் லஞ்சம் வாங்கிக் கொடுக்கத் தரகர்களைத் தான் முதலில் நாடுகிறார்கள். இவ்விரு கூட்டத்தாரிடையினும் லஞ்சம் வாங்கவும் கொடுக்கவும் தற்காலம் பெரும்பாலும் வக்கீல் கூட்டங் களிலிருந்தே தரகர்கள் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். இதனால் நியாய மன்றங்களில் விவகாரங்களைத் தாக்கல் செய்யவேண்டிய கட்சிக்காரர்கள் நியாயாதிபதிகளுக்குத் தரகர்களாய் இருக்கும் வக்கீல்கள் யாரோ, அவர்களிடமே அதிகம் செல்லுகின்றனர். சில வக்கீல்களும் தங்களுக்கு இவ்வளவு, நியாயாதிபதிக்கு இவ்வளவு என்று பேசியே தொகை வாங்குகின்றனர். சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை என்று சொல்லிக் கொண்டு சிற்சில வக்கீல்களிடம் சிநேகமாகவும், தாட்சண்யமாகவும், பாரபட்சமாகவும் நடந்து கொண்டு, அதன் மூலமாக வக்கீல்களுக்கு வரும்படி செய்து வைத்து அவர்களிடம் பணமாக அல்லாமல் வேறு வழிகளில் தாங்கள் லாபம் அடைகின்றனர். இதை வழக்கத்தில் லஞ்சம் என்று சொல்லாவிடினும், இதுபோன்ற செயல்கள் உண்மையான லஞ்சத்தின் பலனையே உண்டாக்குகிறது. தாட்சண்யம் காட்டப்படும் வக்கீல்கள் இதன் பலனாய் லஞ்சம் என்கிற பெயரால் இல்லாவிடினும், வேறு வழியில் கட்சிக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுகின்றனர். இதனால் அநேகமாய் இவ்வழக்கமுள்ள வக்கீல்களிடம்தான் கட்சிக்காரர்கள் செல்லுகின்றனரே அன்றி, கெட்டிக்காரர்களாகவும், யோக்கியமாகவுமுள்ள வக்கீல்களிடம் செல்லுவதில்லை. அரசாங்க ஊழியர் என்று சொல்லும் அதிகாரிகளும் லஞ்சம் வாங்குவதில் பலவித தத்துவங்களை உபயோகிக்கின்றனர். சிலர் இரண்டு கட்சிக்காரரிடம் வியாபாரம் பேசுவது போல் பேசி, அதிக தொகை கொடுத்தவனுக்கு அனுகூலமாகவே தங்கள் தீர்ப்பைக் கொடுக்கின்றனர். சில சமயங்களில் இரண்டு பேரிடமும் வாங்கிக் கொண்டு இருவரையும் திருப்தி செய்யும்படி ராஜி செய்து அந்த ராஜிக்கு ஏற்றவிதமாய் தங்கள் தீர்ப்பை அளித்து விடுகின்றனர். சில தருணங்களில் ஒரு கட்சிக்காரருக்குத் தெரியாமல் மற்றொரு கட்சிக்காரரிடம் இவ்வளவிற்குக் குறைவில்லாத தொகைக்கோ, தண்டனைக்கோ தீர்ப்புச் செய்கிறேன் என்றும், இன்னொரு கட்சியாரிடம் இவ்வளவுக்கதிகமல்லாத தொகைக்கோ, தண்டனைக்கோ தீர்ப்புச் செய்கிறேன் என்றும் இருவரிடமும் வாங்கிக் கொள்ளுவதும், சில தருணங்களில் பெரிய தண்டனை செய்யவேண்டியதையோ, பெரிய தொகைக்குத் தீர்ப்புச் செய்ய வேண்டியதையோ குறைந்த அளவிற்குச் செய்வதாய்ச் சொல்லி வாங்குவதும், இன்னும் சில சந்தர்ப்பங்களில் தங்களிடமுள்ள விவகாரங்களில் நியாயம் இன்னாருக்குத்தான் என்று தெரிந்து அந்தக் கட்சியாரிடம் வாங்கிக் கொள்ளுவதும் இப்படி இன்னும் அநேக விதமாய் வாங்கப்படுகின்றன. இப்படி வாங்கப்படும் லஞ்சங்கள் பெரும்பான்மையாய் முழுவதும் தாங்களே அடைவதில்லை. மேல் அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்க நேரிட்டு விடுகின்றது. அந்தப் பங்கு என்பது தொகையாகவோ, சப்ளைகள் மூலமாகவோ, சாமான்களாகவோ, வேறுவிதமாய் அவரைத் திருப்தி செய்வதன் மூலமாகவோ பங்கு செலுத்தி யாகிவிடுகின்றது. அப்படிச் செலுத்தி மேலதிகாரிகளுக்கு நல்லவனாய் நடந்து கொண்ட இவ்வதிகாரிகள் வெகு தைரியமாய் தங்களுடைய தீர்ப்புகளைக் கடைவைத்து வியாபாரம் செய்வது போல் விற்று வருகின்றனர். பொது ஜனங்களும் கடைகளில் கத்தரிக்காய், வாழைக்காய் விலைபேசி வாங்குவதுபோல தீர்ப்பை விலைக்கு வாங்குகின்றனர். இவை பெரும்பாலும் வெளிப்படையான ரகசியங்களாய் விளங்குகின்றன. வியாஜ்யங்களும்,* விவகாரங்களும் அதிகமாகிக் கொண்டு வருவதற்கு நமது நாட்டு வக்கீல்கள் முக்கியக் காரணமென்று சொல்லுவது ஒரு பக்கமிருந்தபோதிலும், இந்த லஞ்சம் வாங்கலும் கொடுக்கலும் அதற்கு எவ்விதத்திலும் குறைந்தது அல்லவென்றே சொல்லலாம். மேல் அதிகாரிகள் என்று சொல்லப்படுவோர் லஞ்சம் வாங்கும் கீழ் அதிகாரிகளிடம் பங்கு வாங்காவிட்டாலும் குருட்டுத் தனமான அபிமானத்தாலோ, வேறு சிபாரிசின் காரணங்களாலோ, தங்கள் இஷ்டம் போல் நடக்கிறார்கள் என்பதினாலோ, அல்லது நாம் தாம் வாங்குவது போலவே அவரும் வாங்கிவிட்டுப் போகட்டும் என்று கருணை காட்டுவதினாலோ, தம்முடைய மேல் அதிகாரிக்கு வேண்டியவராகவும் இருக்கிறார்கள் என்ற காரணத்தினாலோ, அன்றியும் ராஜீய விஷயங்களில் சர்க்காருக்கு அனுகூலமாய் அவரது மனசாட்சிக்கு விரோதமாய் அநேகம் பேரைத் தண்டனை செய்துள்ளார் என்றோ, வெள்ளையருக்கும் இந்தியருக்கும் நடந்த விவகாரங்களில், வெள்ளைக்காரருக்கு அனுகூலமாகத் தீர்ப்புச் செய்துள்ளார் என்றோ இத்தியாதி காரணங்களால், எவ்வளவு வெளிப்படையாயும், எவ்வளவு மக்கள் வருந்தும்படியாயும், லஞ்சம் வாங்கினாலும் கவனிக்காமல் விட்டு விடுகின்றனர். லஞ்சம் என்று சொல்லுவது சாதாரணமாய் போலீஸ், ரிவனியூ, இஞ்சினியர், வைத்தியம், பாரஸ்ட், சால்ட் முதலிய இந்த இலாகாக்களுக்குப் பிறவிக்குணமாய் இருந்து அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் சகஜந்தான் எனக்கருதி கவனிக்காமலே அனுமதிக்கப்பட்டு வந்திருந்த போதிலும், ஜனங்களின் வாழ்வு - தாழ்விற்குப் பெரிதும் காரணமாயிருக்கிற சிவில், கிரிமினல் இலாகாக்களில் கூட தலைவிரித்தாடி வருகின்றன. இவர்களில் சிலர் பணமும், நோட்டும் வாங்கினால்தான் லஞ்சமென்றும், வேறுவித காரியங்கள் என்ன செய்தாலும் லஞ்சம் இல்லை என்கிற எண்ணத்துடனேயே தங்கள் காரியங்களைச் செய்கின்றனர். சாதாரணமாய் உத்தியோகஸ்தரில் லஞ்சம் வாங்காதவரை மற்ற அதிகாரிகள் முட்டாள் என்றே கருதுகின்றனர். அநேகமாய் அவர்களுக்கு மேல் உத்தியோகமும் கிடைப்பதில்லை. தாங்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்கிற அகம்பாவத்தால் மேல் அதிகாரிகளை இவர்களும் இலட்சியம் செய்யாதிருந்துவிடுவது. அதனால் மேல் அதிகாரிகள் இவர்களைக் கெடுத்து விடுகின்றனர். இவை இப்படியிருக்க, அதிகாரிகளிலேயே சிலரும், படித்தவர்களில் சிலரும் தாங்கள் ஒரு குற்றமும் செய்யாமல் உத்தியோகமும் மேல் உத்தியோகமும் சம்பாதிப்பதற்காகவே ஆயிரம் பதினாயிரக்கணக்காகவும் கொடுக்க வேண்டி ஏற்பட்டுப் போய்விடுகின்றது. சில உத்தியோகஸ்தர்கள் வாங்க இஷ்டப்படாதவர் களாயிருந்தாலும் மேல் உத்தியோகஸ்தர்களுக்குக் கொடுக்கவும், செலவு செய்வதற்கும் என்றே லஞ்சம் வாங்க வேண்டியவர்களாய் விடுகிறார்கள். சில இலாகாக்களில் லஞ்சம் மாமூலாகவே கருதப்பட்டு வருகின்றது. சில அதிகாரிகள் தாம் வாங்காதிருந்தால் போதும் என்று, மற்றவர்கள் வாங்குவது நன்றாகத் தெரிந்திருந்த போதிலும் கவனியாமலே இருந்து விடுகிறார்கள். இவ்விதமாக அதிகாரிகளின் யோக்கியதை கவனிக்கத் தகுந்த அளவிற்குப் பெருகி வருகிறது. எவ்வளவு ரூபாய் சம்பளம் கொடுத்தால் லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்று சொல்லுவதற்கு ஒரு தொகையே இல்லாமல் போய்விட்டது.

சில்லறை உத்தியோகஸ்தர்கள் வாங்கும் லஞ்சம் அவ்வளவு கெடுதியை உண்டாக்காவிட்டாலும், அதன் விபரங்களைப் பற்றிப் பின்னர் எழுதுவோம். கவுரவ உத்தியோகஸ்தர்களும் லஞ்சம் வாங்குவது சகஜமாகி விட்டதல்லாமல், அரசாங்கமும் அனுமதித்து விடும் போலிருக்கிறது. லஞ்சம் விஷயமாய் ஒரு பெரிய அதிகாரிக்கும், ஒரு பெரிய மனிதருக்கும் நடந்த சம்பாஷணையை மாத்திரம் எழுதிவிட்டு இதை முடிக்கிறோம்.

பெரிய மனிதர் : என்ன ஐயா, உங்கள் இலாகாவைச் சேர்ந்த ஒரு பெரியஉத்தியோகஸ்தர் இவ்விதமாக லஞ்சம் வாங்குகிறாரே, எங்களுக்கு எல்லாம் வெளியில் தலை நீட்டுவதற்கு வெட்கமாய் இருக்கிறதே, இதைப்பற்றிக் கேள்வி முறை இல்லையா ?

பெரிய உத்தியோகஸ்தர் : ஆம்! எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் நான் என்ன செய்யமுடியும் ? வேண்டுமானால் அந்த உத்தியோகஸ்தரை வேறு ஊருக்கு மாற்ற முடியும். கேஸ் எடுத்து நடவடிக்கை நடத்தவே முடியாது. அப்படி ஏதாவது ஆரம்பித்து விட்டால் ஜாதி அபிமானங்களும், சிபார்சுகளும் வந்து கழுத்தை முறித்து விடுகிறது. அதற்கும் துணிந்தால் நமது பேரில் ஏதேனும் கெட்ட எண்ணத்தைக் கற்பித்துப் பழியையும், ஏதாவது ஒரு கெட்ட பெயரையும் ஏற்படுத்தி விடுவதோடு நம்முடைய விருத்தியையும் கெடுத்துவிடுகின்றனர்.

பெரிய மனிதர் : அப்படி ஆனால் அவரை வேறு ஊருக்காவது மாற்றித் தொலைப்பதுதானே !

பெரிய உத்தியோகஸ்தர் : இதனால் என்ன பொது நன்மை விளையும் ? இந்த ஊரில் வாங்குபவர் அங்குபோய் வாங்குகிறார். இப்பொழுது அவர் இருக்கும் ஊராவது பணக்காரர்களும், லஞ்சம் கொடுக்கப் பழகினவர்களாகவும், லஞ்சம் கொடுக்கிறோமே என்று வருத்தப்படாதவர்களும் இருக்கிற ஊராகும். இனி அவரை இதைவிட்டு வேறு ஊரிற்கு மாற்றினால் அங்கு போய் கடைவைத்து வியாபாரம் ஆரம்பிப்பதற்குள் வீண் கெட்ட வாசனை ஏற்பட்டுவிடும்.

பெரிய மனிதர் : சரி, சரி அப்படி ஆனால் ஒத்துழையாதார் பேரில் தப்பிதமே இல்லையே ?

பெரிய உத்தியோகஸ்தர் : யார் தப்பிதம் சொல்லுகிறார்கள் ?


---------------தந்தைபெரியார்-"குடிஅரசு" 1925

நான் சொல்வது கட்டளையா?

நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தாம் என்று சொல்வதோடு, நான் ஒரு சாதாரண மனிதன்தான். நான் எவ்விதத் தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன். ஆகையால், தனி மனிதன் என்கின்ற முறையில்தான் என்னுடைய அபிப்பிராயங்களையும் - நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்தது-மானவைகளைத்தான் - அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன். ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடு-வீர்களானால், அப்பொழுது - நீங்கள் யாவரும் அடிமைகளே! நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால், பாவம் என்றாவது, தோஷம் என்றாவது அல்லது நரகத்துக்குத்-தான் போவீர்கள் என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை. யார் உரைப்பதையும் நாம் கேட்டு, வேத வாக்கு என அப்படியே நம்பிவிட்டதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம்.
ஆகவே, நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மை-யென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில், அவைகளை உண்மையென ஒப்புக் கொள்வதில் மட்டும் பிரயோசனம் இல்லை; அவைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள். எனது சொநத் அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிவது, அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை.
----------- தந்தைபெரியார்- "விடுதலை" 8.10.1951

Friday, March 21, 2008

குஷ்பு -அறிவுமதி -அதி அசுரன்

1.நடிகை குஷ்புவின் மமதை - இதுதான் நடந்தது! - அறிவுமதி


ஆழி பதிப்பகத்தின் நூல்கள் வெளியீட்டுவிழா.ஆதி என்கிற என் நண்பனின் நூலும் அதில் ஒன்று. அவரது அழைப்புதான் என்னை அங்கே அழைத்துச் சென்றது.

பார்வையாளனாக இருந்த என்னை.. அண்ணன் வண்ணநிலவன் அவர்கள் வராத வெற்றிடத்தை நிரப்பும் வண்ணம். அண்ணன் கல்யாண்ஜி அவர்களின் ஒலிக்கவிதைகள் வெளியீட்டாளனாக மேடைக்கு என்னை அழைத்துச் சென்றது.

மேடையில், தங்கைகள் கனிமொழி, தமிழச்சி, குஷ்பு, அண்ணன் கல்யாண்ஜி, தம்பி ஸ்டாலின் இராசாங்கம் என் முன்வரிசையில் அமர்ந்திருந்தோம். தம்பிகள் அய்யனார், இராம். ஆனந்த்தராசன் மேடையில் இருந்தனர்.

நூல்கள் வெளியீட்டு நிகழ்வு முடிந்து, கல்யாண்ஜி அண்ணன் பற்றி நான்பேசி. அண்ணன் பேசி. தமிழச்சி பேசச் சென்றார். தலைவர் திருமாவளவன் அவர்கள் அரங்கிற்குள் நுழைய, அவரது இயக்கத்தினர் வாழ்த்துக் குரல் எழுப்ப, தங்கை கனிமொழி, அண்ணன் கல்யாண்ஜி, தம்பி ஸ்டாலின் இராசாங்கம் என அனைவரும் எழுந்து வணக்கம் சொல்லி... இருக்கையில் அவரையும் அமரச் சொல்லி அமர்ந்தோம். அவர் வருவது தெரிந்ததும்.. முகத்தைச் சட்டென திருப்பிக் கொண்டு.. தமிழச்சியின் பேச்சைக் கேட்பது போல் பாவனை செய்தார் குஷ்பு.

இருவரும் இந்தச் சந்திப்பை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்த்த பார்வையாளர்களுக்கு குஷ்புவின் அந்தப் பாவனை அருவருப்பை ஊட்டியது. திரும்பி வணக்கம் சொல்லிவிட்டால்.. தானும் வணக்கம் சொல்லவேண்டும் என்கிற மனோநிலையில், தலைவர் திருமாவளவன் இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்தார். குஷ்பு திரும்பவே இல்லை. அந்த நேரத்து திருமா அவர்களின் உளவியல் மனவலி என்னை அறுத்தது.தங்கை தமிழச்சிக்குப் பிறகு. குஷ்பு அவர்கள் பேசச் சென்றார். தான் வெளியிட்ட நூல் பற்றியும், நூலாசிரியர் பற்றியும் பேசியதைவிட.. கடந்த ஆண்டில் அவர் ஏற்படுத்திய சர்ச்சை பற்றியே அதிகமாகப் பேசினார். பேச்சுக்கு இடையே, தோழர் திருமாவளவன் அவர்கள் இருக்கிற மேடையிலேயே நானும் நிற்கிறேன். இதில் நான் வெற்றிபெற்றுவிட்டதாகவே நினைக்கிறேன் என்று கர்வமாகக் கூறினார்.

அதற்குப் பிறகு அவர் பேசியதுதான் தங்கை கனிமொழி நக்கீரனில் சொல்லியிருப்பதைப் போல அநாகரிகத்தின் உச்சகட்டமாக இருந்தது. ''தோழர் திருமாவளவன் வந்தபோது நான் வணக்கம் வைக்கவில்லை.வணக்கம் வைக்கவில்லை என்பதற்காக அவரது தோழர்கள் அதற்கொரு வழக்குப் போட்டாலும் போட்டுவிடுவார்கள்.அதற்காக அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிடுகிறேன்.''என்று சொல்லி, அவர்பக்கம் திரும்பி வணக்கம் வைப்பதாக இரு கைகளையும் கூப்பி...''தோழர் திருமா.. வணக்கம்'' என்று கூறிய முறை இருக்கிறதே... அது தலைவர் திருமாவை மட்டுமன்று... ஒட்டுமொத்தத் தமிழர்களையே. தன் காலுக்குக் கீழ்போட்டு மேல் நிற்பதான மமதையில் கூறியதாகவே இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக, உலகத் தமிழர்களின் நல்லெண்ணமாக வளரும் தலைவர் திருமாவளவன் அவர்கள் வந்தபோது, குஷ்பு கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தது குறித்தோ, அவரைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டது குறித்தோ, இங்கு கவலையில்லை.


அதுதான் அவருக்கு அவரது மனம் கற்றுக் கொடுத்த நாகரிகம் என்று விட்டுவிட்டோம். திரும்பிப் பார்க்காத அதே உறுதியில், வணக்கம் வைக்காத அதே திமிரில், மேடையில் வெளியிட்ட நூல்பற்றியும், நூலாசிரியர் பற்றியும் பேசாமல் எல்லாவற்றையும் மறந்து பெருந்தன்மையோடு மேடைக்கு வந்திருக்கும் ஒரு தலைவரை, வம்புக்கு இழுத்து வணக்கத்தைப் பிச்சை போடுவது போல் போட்டு, போட்டதோடு நில்லாமல், போடாவிட்டால் வழக்கு போடுவீர்கள் என்று, நக்கலான ஒரு சொல்லால் தலைவர் திருமாவை, தலைவர் திருமாவின் தலைமையின் கீழ் இயங்கும் இயக்கத்தை, அவரின் மீது உயிரையே வைத்திருக்கும் இலட்சோப இலட்சம் மக்களை ஏன் ஒட்டுமொத்தத் தமிழினத்தையே இழிவு செய்த அந்த அநாகரிகச் செயல்தான் என்னைச் சடக்கென எழவைத்து கண்ணுக்கெதிரே நடக்கும் மனித நேயமற்ற இந்தக் கொடுஞ்செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கத் தூண்டியது.

தன்னைத் தமிழ்நாட்டின் கருத்துருவாக்கத் தலைவியாய் ஆக்கிக் காட்டுவதாக உறுதி கொடுத்தவர்களின் முன் ஒரு முறைக்குப் பலமுறையாக ஒத்திகை பார்த்த பிறகு இங்கு வந்து அரங்கேற்றப்பட்ட நாடகமாகவே அவரது உரையாடல்களும், உடல் மொழிகளும் அமைந்திருந்தன. அவை, நம் தமிழனத்திற்கான மிகப்பெரிய ஆபத்துகளாக அமைவன என்பதையும் உளவியல் ரீதியாக உணர்ந்தே மேடைக்கு உந்தப்பட்டேன். தலைவர் திருமாவளவனை அவமானப்படுத்திவிட்ட திருப்தியில், எழுந்துபோக முயன்றவரை, அமருங்கள். உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டு, பேசத் தொடங்கினேன்.

இலக்கிய விழாவை இலக்கிய விழாவாகவே நடத்த வேண்டும் என்கிற நாகரிகத்தோடு நாங்கள் அனைவரும் பேசினோம். நீங்கள் அந்த மரபைவிட்டு வெளியே போய் அரசியல் பேசியதால்தான் நாங்களும் அரசியல் பேசவேண்டியிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்க்கை மறுக்கப்பட்ட மக்களின் தலைவர் திருமாவளவன். மலமும் சிறுநீரும் கொடுத்து அவமானப்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் கொடுக்க வந்த தலைவர் திருமாவளவன். ஒவ்வொரு நிமிடமும், பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அவலநிலையை அதட்டிக் கேட்க வந்த தலைவர் திருமாவளவன். அவரை வென்றுவிட்டேன் என்று அகங்காரமாகப் பேசுகிறீர்கள். அவருக்கும் உங்களுக்கும் என்ன போரா நடந்தது?அதோடு இல்லாமல், தேவையில்லாமல் அவர் வருகிறபோது, சராசரி மனிதப் பண்பாடு கூட இல்லாமல் அவமரியாதை செய்துவிட்டு,. அதற்குப் பிறகு அவரைக் கூப்பிட்டு, இந்தா வணக்கம். என்று கேவலப்படுத்துகிற உரிமையை உங்களுக்கு யார் தந்தது?


அப்படித்தான். பெரியார் திரைப்பட நூறாவது நாள் விழாவில், தங்கர்பச்சானின் ஒளிப்பதிவில் நடிக்காமல் போனதற்காக வருத்தப்படுகிறேன் என்று அழுது வழிந்தீர்கள்.அதற்கு முன்னதாக. செயா தொலைக்காட்சியில் கூண்டில் நிறுத்தி கேள்விகள் கேட்ட நிகழ்ச்சியில், நாற்பத்தைந்து நிமிடங்கள் தங்கர் பச்சானைப் பற்றியே பேசிவிட்டு, இறுதியாக நீங்கள் இயக்கும் படத்திற்குத் தங்கர்பச்சான் தான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று உங்கள் தயாரிப்பாளர் கேட்டால், அதற்கு என்ன சொல்வீர்கள் என்று கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொன்னீர்கள்?Who are you? அவன் யார்? என்று கேட்டீர்கள்.ஏன் இப்படி, முரண்பாட்டின் முட்டையாக இருக்கிறீர்கள்?அவன் யார் என்கிறீர்கள்.அப்புறம்அவர் ஒளிப்பதிவில் நடிக்க முடியாததற்காக வருத்தப்படுகிறேன் என்கிறீர்கள்.

எங்கள் தலைவர் வருகிறபோது வணக்கம் வைக்க மாட்டேன் என்கிறீர்கள். அப்புறம் மேடைக்கு வந்து, வழக்கு போடுவீர்கள் என்பதற்காக வணக்கம் வைக்கிறேன் என்கிறீர்கள்.எங்கெங்கிருந்தோ பிழைக்க வந்தவர்களெல்லாம், இப்படி எங்கள் கலைஞர்களை, தலைவர்களை எப்படி வேண்டுமானாலும் கேலி பேசலாம். நக்கல் செய்யலாம். அவமானப் படுத்தலாம் என்கிற நிலையை எப்படி பொறுத்துக் கொள்வது? இந்த தமிழினம் ஏன் இப்படி அவலங்களுக்கு ஆளாகிறது?என்று என் ஆதங்கங்களைப் பதிவு செய்து, என் தம்பியின் மனைவி என்கிற முறையில் கூறுகிறேன். கருத்துகள் கூற அனைவருக்கும் உரிமையுண்டு. அதே நேரத்தில், எம் தலைவரை எம் இனத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமையில்லை என்று கூறிவிட்டு வந்து அமர்ந்தேன்.

அதற்குப் பிறகுதான் குஷ்பு எழுந்து சாமியாடத் தொடங்கினார். இதெல்லாம் கேக்கறீங்க, எங்கருத்துக்கு என்ன சொல்றீங்க? அன்னைக்கு நான் வச்ச அந்தக் கருத்துக்கு என்ன சொல்றீங்க?என்று ஆவேசப்பட்டு பேச...பார்வையாளர்கள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க..தலைவர் திருமா சென்று, குஷ்பு அவர்களைக் கொஞ்சம் ஒதுங்குங்கள், நான் பேசுகிறேன் என்று கூறி, தோழர்களை ஒற்றைச் சொல்லிலேயே அமைதிப்படுத்தி பேசத் தொடங்கினார்.

அவரது பேச்சிலும், உங்களின் கருத்துரிமையைப் பறிக்கும் உரிமை எங்களுக்கில்லை, அதே நேரத்தில் எங்களை புண்படுத்தும் உரிமையும் உங்களுக்கில்லை. ஒரு கருத்தை வைக்கும்போது அந்த இன மக்களின் மனநிலை உணர்ந்து பேசவேண்டும். அப்படிப் பேசாமல்...யார் இங்கே யோக்கியர்கள் என்று நீங்கள் பேசிய அந்தச் சொல்தான் மக்களைத் தன்னெழுச்சியாய் ஆத்திரப்பட வைத்தது. மற்றப்படி நாங்கள் பெண்களுக்கோ பெண்ணுரிமைக்கோ எதிரானவர்களல்ல.நாங்கள் பெரியாரின், அம்பேத்கரின் பிள்ளைகள் என்று பேசி முடித்தார்.


பேசி முடித்ததும், சமாதான முறையில் மறுபடியும் படம் எடுத்துக் கொண்டு, கூட்டம் கலைந்தது.ஆம். இதுதான் நடந்தது. இந்த இடத்தில், அறிவுமதியாகிய நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தி.மு.க. பிறந்த 1949-இல்தான் நானும் பிறந்தேன். கொள்கையில் கற்பு கெடாத ஒரு தி.மு.க. செயலாளருக்கு மகனாகப் பிறந்தேன். எம் இனத்திற்குஎம் மொழிக்குஓர் இடர் வந்தால்... எதிர்த்து நில்என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தது...திராவிட இயக்கம்.தந்தை பெரியார்தலைவர் கலைஞர்.

அய்ந்து வயதுக்கு முன்னதாகவே, ஒரு சீர்திருத்தத் திருமண நாளன்று, தி.மு.க. கொடியேற்றும்போது நிறுத்துங்கள் சிவப்பு மேலே இருக்கிறது கறுப்பை மேலே வைத்துக் கட்டுங்கள் என்று சொன்னவன் நான். கலைஞர் கவிஞரே இல்லை என்று ஓர் எழுத்தாளர் எகத்தாளமாய் எழுதியபோது கொதித்து மறுப்புச் சொன்ன ஒரே பிள்ளை நான். இருவர் படத்தில் எம் தங்கையின் அம்மா அப்பாவை மணிரத்னம் கொச்சை செய்தபோது வலிவாங்கி எதிர்த்த ஒரே அண்ணன் நான். வயது சொல்லி எம் தலைவரை பார்ப்பணியம் ஓவ்வெடுக்கச் சொன்னபோது ஓங்கிக் குரல் கொடுத்தத் தொண்டன் நான்.

அப்படித்தான் என் கண்முன்பாகவே எம் உயிருக்குயிராக நேசிக்கும் தலைவர் திருமாவை ஒருவர் அவமானப்படுத்துகிறபோது பொறுத்துக்கொள்ள இயலாமல் போய் பதில் சொன்னேன். எம் அன்பான ஊடகங்களே! என் அன்பான உறவுகளே!இப்படிப்போய் எம் தலைவர் திருமாவின் வலிவாங்கி நான் பதில் சொன்னது நாகரிகமற்ற செயல் என்றால் மன்னியுங்கள். அந்த நாகரிகமற்ற செயலை நான் செய்து கொண்டேதான் இருப்பேன். இறுதிவரை பெரியாரின், அம்பேத்காரின் பிள்ளையாகவே இருப்பேன். இறுதிவரை கைநாட்டு மரபிலிருந்து எம்மைக் கையெழுத்து மரபிற்கு அழைத்து வந்த திராவிட இயக்கத்திற்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன். என்றும் எந்தக் குறுகிற வட்டத்திற்குள்ளும் சிக்கமாட்டேன். நான்.. உலகத் தமிழர்களின் செல்லப்பிள்ளை!

-----------------நக்கீரனில் "பாவலர் அறிவுமதி"
அவர்கள்


2.தோழர் அதிஅசுரன் அவர்கள் பாவலர் அறிவுமதி அவர்களுக்கு எழுதிய திறந்த மடல்:

சென்னையில் ஆழி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு (06.01.2008) விழாவில் நடந்த சம்பவங்களை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதில் குஷ்பு அவர்கள் தோழர் திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம் சொல்லவில்லை என்பதை சாக்காக வைத்து தன் மனதிலுள்ள நஞ்சைக் கக்கியுள்ள அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு ஒரு திறந்த மடல்.

திரைத்துறையில் பார்ப்பன ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் பல இளைஞர்களை நல்ல இயக்குநர்களாக தமிழ் திரையுலகிற்குத் தந்துள்ளீர்கள். எண்ணற்ற திரைத்துறைக் கவிஞர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உங்களை அவர்களின் ஆண்தாயாக எண்ணிப் பெருமைப்படுவதையும் அறிந்திருக்கிறோம்.

நான் நிறைய தமிழ் திரைப்படங்கள் பார்ப்பவன். நீங்கள் பணியாற்றிய, பாடல்கள் எழுதிய படங்களையும் நிறைய பார்த்தவன். ஆனால் நீங்கள் ஒரு நல்ல கவிஞர், திரைப்பட இயக்குனர் என்ற அடையாளங்களிலல்லாமல் ஒரு பெரியார் தொண்டர் என்ற முறையில் தான் எம் போன்ற தோழர்களுக்கு முக்கியமான நபராக மாறினீர்கள்.

நீங்கள் எழுதிய நட்புக்காலத்தை நூற்றுக்கணக்கில் வாங்கி எமது நண்பர்களுக்கு வழங்கியிருக்கிறோம். சாதி மறுப்புத்திருமணங்களை வலியுறுத்தும் உங்களது பல கவிதைகளை – பெண்விடுதலை நோக்கிய உங்கள் கவிதைகளை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு காதலர்தினங்களிலும், மகளிர் தினங்களிலும் தென்மாவட்டங்களின் பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும் பிரச்சாரம் செய்திருக்கிறோம். ஒட்டன்சத்திரத்தில் நாங்கள் நடத்திய காதலர் தின விழாவிலும் உங்களைப் பேசவைத்தோம்.
அந்த உரிமையில் எழுதுகிறேன்.


என்னதான் பெரியாரைப் பேசினாலும், பெரியார் தொண்டர்களோடு பழகினாலும் உங்களின் அடிமனத்திலுள்ள நச்சுக்கருத்துக்களை அவ்வப்போது வெளிப்படுத்தி விடுகிறீர்கள். திராவிடர் கழக, பெரியார் திராவிடர் கழகத் தலைவர்களையும், அவ்வமைப்பின் தோழர்களையும் நெருங்கிய நண்பர்களாக, உறவுகள் எனவும் அழைத்துக்கொண்டாலும் முருகனடிப்பொடி போல எங்கு போனாலும் முருகக்கடவுள் பிரச்சாரத்தை விட மறுக்கிறீர்கள். அய்யப்பசாமிக்கு மாலை போட்டுவிட்டு டாஸ்மாக்கில் தனிக்கிளாசில் தண்ணியடிக்கும் அய்யப்ப பக்தனுக்கும், கறுப்புச் சட்டைபோட்டுக்கொண்டு முருக வழிபாட்டை பிரச்சாரம் செய்யும் உங்களுக்கும் வேறு பாடு என்ன? உங்கள் தனிப்பட்ட , சொந்த விசயமாக வைத்துக் கொண்டால்கூடப் பரவாயில்லை. தலைவர் பிரபாகரனைப் பாடும் போதுகூட அந்த முருகனுக்கே நிகரானவன் எனப் பாடல் எழுதுவது தேவையா? பக்தி விசயத்தில் என்னத்தையோ சொல்லிவிட்டுப்போங்கள். ஆனால் சாதி ஒழிப்பு, பெண்விடுதலை போன்றவை தொடர்பாகக் கருத்துச்சொல்லும் பொழுது கொஞ்சம் யோசித்துப் பேசுங்கள். ஏனென்றால் அந்த இரண்டிலும் சரியாக இருப்பீர்கள் என நம்பித்தான் எம் போன்ற பல இளைஞர்கள் உங்களை எங்கள் இயக்க நிகழ்வுகளுக்கு அழைத்துக்கொண்டிருக்கிறோம். தி.க, பெரியார் தி.க என நாங்கள் பிளவுபட்டிருந்தாலும் இரு அமைப்புத் தோழர்களுமே உங்களை மதிப்பதற்குக் காரணம் சாதி ஒழிப்பு, பெண்விடுதலை பேசுபவர் என்பதால்தான்.


ஆனால் அண்மையில் ஆழி பதிப்பக விழாவில் போராளி குஷ்பு அவர்களை நோக்கி நீங்கள் பேசிய பேச்சு எங்கள் உள்ளங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உங்களைக் கோபப்படுத்தும் அளவுக்கு அவர் பேசியது …..

''தோழர் திருமாவளவன் வந்தபோது நான் வணக்கம் வைக்கவில்லை.
வணக்கம் வைக்கவில்லை என்பதற்காக அவரது தோழர்கள் அதற்கொரு வழக்குப் போட்டாலும் போட்டுவிடுவார்கள்.
அதற்காக அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிடுகிறேன்.''
என்று சொல்லி, அவர்பக்கம் திரும்பி வணக்கம் வைப்பதாக இரு கைகளையும் கூப்பி...
''தோழர் திருமா.. வணக்கம்''

இதிலென்ன தவறு இருக்கிறது. இப்படி அவர் சொல்லாமல் இருந்திருந்தால் அவர் மீது வழக்கு போட்டிருக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இப்படி மலிவான விசயங்களுக்கெல்லாம் வழக்குப் போட்டவன்தானே தமிழன். வல்லமைதாராயோ படவிழாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் என்பதற்காக - அது மிகப்பெரும் தவறு என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக வழக்குப் போட்டவர்கள்தானே உங்கள் உறவுகள், இரத்தங்கள்? உங்கள் தம்பியின் மனைவி என்ற உரிமையில் …..என்று பித்தலாட்ட வசனம் வேறு சொல்கிறீர்கள். அந்த உரிமையில் தம்பி வீட்டிற்கே சென்று சண்டைபோட்டிருக்கலாம். அந்த தவறை முறையாக புரியவைத்து குஷ்பு மூலம் அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்க வைத்திருக்கலாம். ஒரு பெரியார் தொண்டன் அவ்வாறுதான் செய்திருப்பான். ஆனால் திட்டமிட்டு ஒரு கலகத்தை உருவாக்கவேண்டும், எப்படியாவது குஷ்பு அவர்களைப் பணியவைக்கவேண்டும், தம்பி தங்கர்பச்சான் மனம் குளிரவைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வந்துள்ளீர்கள். அதனால்தான் குஷ்புவின் பேச்சை திருமாவளவன் அவர்களே கண்டுகொள்ளாதபோது நீங்கள் அவசர அவசரமாக மேடையேறி, கிடைத்தவாய்ப்பை நழுவவிடக்கூடாது என்ற வேகத்தில் மைக்கைப் பிடுங்கி,

இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்க்கை மறுக்கப்பட்ட மக்களின் தலைவர் திருமாவளவன். மலமும் சிறுநீரும் கொடுத்து அவமானப்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் கொடுக்க வந்த தலைவர் திருமாவளவன். ஒவ்வொரு நிமிடமும், பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அவலநிலையை அதட்டிக் கேட்க வந்த தலைவர் திருமாவளவன்என முழங்கியுள்ளீர்கள்.


உங்கள் தம்பி சீமானின் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் ஒரு காட்சிவரும்.
மக்காச்சோளக்காட்டில் வடிவேலு அவர்களுடன் வரும் அவரது நண்பர் சோளக்கதிர்களைத் திருடுவார். தோட்டஉரிமையாளர் பார்த்துவிடுவார். திருடியவன் காதுசவ்வு கிழியும்வகையில் ஒரு அடி விழும். அடி வாங்கியன் தோட்ட உரிமையாளரைப் பார்த்து, யோவ் என்னய அடிச்சுட்டீல்ல… முடிஞ்சா எங்க அண்ணன் சிங்கத்தைத் தொட்டுப்பாருய்யா தெரியும் என வடிவேலுவை நோக்கி கையை நீட்டுவார்.

அப்படித்தான் அண்ணன் திருமா அவர்களை வைத்து நீங்கள் விளையாடி யிருக்கிறீர்கள். மலமும் சிறுநீரும் கொடுத்து அவமானப்படுத்தப்பட்ட மக்களின் தலைவர் என சொன்னீர்கள்.


திருச்சி திண்ணியத்தில் மலம் தின்ன வைக்கப்பட்ட மக்களுக்காக திருமாவளவன் அவர்கள் செய்ததென்ன? ஒரு பேரணி நடந்தது. அதன் பிறகு மலம் தின்ன வைத்தவன் வீட்டிலேயே விடுதலைச்சிறுத்தைகளுக்கு விருந்தும் நடந்தது. மறுக்கமுடியுமா? அந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் தோழர் இரத்தினம் பல செய்திகளைச் சொல்லியுள்ளார். உங்களுக்கும் தெரியும். வெளிப்படையாக அதை நீங்கள் கண்டிக்கத்தயாரா?


திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி அருகேயுள்ள கவுண்டன்பட்டியில் சிறுநீர்குடிக்க வைக்கப்பட்ட கொடுமைக்கு விடுதலைச்சிறுத்தைகளின் எதிர்வினை என்ன? சொல்ல முடியுமா?


சரி, அதெல்லாம் போகட்டும். கைநாட்டு மரபிலிருந்து கையெழுத்து மரபிற்கு எம்மை வளர்த்தது திராவிடஇயக்கம் என அடிக்கடி சொல்லிக்கொள்கிறீர்கள். அந்த இயக்கத்தின் தலைவர் பெரியார். அந்தப் பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களின் விரோதி என திருமா அவர்கள் ஆசிரியராக இருக்கும் தாய்மண் இதழில் தற்போது உங்களின் பாசமிகு தம்பியாக மாறியிருக்கும் இரவிக்குமார் அவர்கள் தொடர்ந்து எழுதினாரே! அப்போது உங்கள் வெளிப்படையான எதிர்வினை என்ன?

மதுரையில் பெரியார் தாழ்த்தப்பட்டமக்களின் விரோதியா? என்ற தலைப்பில் தோழர் இரஜினி அவர்கள் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருந்தார். அதில் எனக்கு முதலில் பெரியாரைத் தான் தெரியும். அவர் மூலம் தான் அம்பேத்கரைத் தெரியும் என்றும் பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் மட்டுமே என முழங்குபவர் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் தோழர் அதியமான். உண்மையாகவே இந்து மத வர்ணாசிரமக் கொடுமையால், சாதிக்கொடுமைகளால் மிக அதிகமாகத் துன்பங்களை அனுபவிக்கும் அருந்ததியர் நிரம்பிய அமைப்பு ஆதித்தமிழர் பேரவை. சுமூகத்தில் எவனும் செய்யத்தயங்கும், யோசிக்கவே தயங்கும் மலமள்ளும் பணியை, சாக்கடை சுத்தப்படுத்தும் பணிகளை இன்றளவும் விடமுடியாமல் செய்து வரும் தோழர்களின் அமைப்பு. இரட்டைக்குவளை, இரட்டை இருக்கை, தெருவில் நடக்க இயலாமை, செருப்புபோட்டு நடக்க இயலாமை, கல்வி வேலைவாய்ப்புகளில் பங்குபெற இயலாமை போன்ற பல கொடுமைகளைச் சகித்துக்கொண்டு மீள வழியில்லாமல் உழைப்பவர்களின் அமைப்பு ஆதித்தமிழர் பேரவை. அதன் தலைவர் அதியமான். அவரை அந்தக் கருத்தரங்க மேடையிலேயே கொலைவெறியில் தாக்கவந்தார்கள் சிறுத்தைகள். சோடா பாட்டில்களால் அவரைக் குத்தவும் முயன்றனர். அங்கிருந்த ஆதித்தமிழர் பேரவை மற்றும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மேடையைச் சுற்றி நின்று காவல்துறை துறை உதவியுடன் தோழர் அதியமான் காப்பாற்றப்பட்டார். இறுதிவரை அவரைப் பேச விடவில்லை. மிகுந்த கூச்சல்குழப்பங்களுடன் மிரட்டல்களுடன் பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மட்டும் உரையாற்றினார். பேசிவிட்டு தோழர்கள் புடைசூழ காவல்துறை அதைச்சுற்றி வளையம் அமைத்து அதன் பின்தான் தோழர் அதியமான் அவர்களும், உங்களை உயிராக மதிக்கும் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களும் மதுரையைவிட்டு வெளியேற முடிந்தது. அனைத்தும் வீடியோவில் பதிவாக உள்ளது. நீங்களும் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கும் வீடியோவை அனுப்பினோம். இச்சம்பவங்களுக்கு நீங்கள் செய்த வெளிப்படையான எதிர்வினை என்ன?


இச்சம்பவங்களுக்கு தோழர் திருமா காரணமில்லை என வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், முழுக்காரணமான சட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார் அவர்களையாவது கண்டித்தீர்களா? எங்காவது அவர் பேசும் போது போய் மைக்கை புடுங்கியிருக்கியிருக்கிறீர்களா?


இப்போதும் தமிழ்நாட்டில் கரடிச்சித்தூரில், கோவையில், திருச்சியில், விருதுநகர் மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் ஆதித் தமிழர் பேரவைத் தோழர்கள் விடுதலைச்சிறுத்தைகளால் வெட்டப்பட்டுள்ளனர். சிறுத்தைகளால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். ஆதித் தமிழர் பேரவையின் கூட்டத்திற்கான சுவரொட்டியை விடுதலைச்சிறுத்தைகள் வசிக்கும் இடங்களில் ஒட்டியது மாபெரும் குற்றமாம். அதற்காக அருந்ததியர் சமுதாயத்தினர் வெட்டப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் நீங்கள் தோழர் திருமா அவர்களை விமர்சனம் செய்ததுண்டா? எங்காவது ஒரு மேடையில் அவர் பேசும்போது மைக்கைப் பிடுங்கும் துணிச்சல் உண்டா?


( இப்போது திருமா அவர்களும் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களும் ஒரே மேடையில் தாழ்த்தப்பட்டோர் விடுதலைப் போராட்டங்களில் ஒன்றாக முழங்குகிறார்கள். வரவேற்க வேண்டிய மாற்றங்கள்தான். )

உங்கள் தலைவர் திருமா அவர்கள் எந்தக்கூட்டத்திற்குப் போனாலும் தாமதமாகவும் முக்கியமானவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதும் சுமார் நூறு தோழர்களுடன் நுழைந்து அந்த அரங்கங்களில் அதுவரை இருந்த இயல்பான சூழலை மாற்றி, யாரையும் பேசவிடாமல், யாரையும் கேட்கவும் விடாமல் திருமா அசைந்தாலும், மீசையை முறுக்கினாலும், தாடியைத் தடவினாலும் வாழ்க வாழ்க என முழக்கமிட்டு நிகழ்ச்சிகளைக் கெடுத்து வருகிறாரே உரிமையுடன் அதைத் திருத்தலாமே? எழவு வீட்டிற்குப் போனாலும் வாழ்க வாழ்க என முழங்கியதை வீடியோவில் பதிவுசெய்து வைத்துள்ளேன். பலநூற்றுக்கணக்கான கூட்டங்களுக்கு அவர் செல்லும் போது நடப்பது இதுதான். ஆதாரப்பூர்வமாக சொல்லஇயலும். உங்களை விமர்சனம் செய்யத் தொடங்கி அது தோழர் திருமா அவர்களை விமர்சிக்கும் மடலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அந்தப் பட்டியலை இங்கு கூற விருப்பமில்லை. எந்த நிகழ்ச்சிக்குப் போவதாக இருந்தாலும் கூட்டம் தொடங்க குறித்த நேரத்தில் போகவேண்டும் என்ற நல்லபழக்கத்தை அவர் கடைபிடித்திருந்தால் ஆழிபதிப்பக விழாவில் இந்த சண்டையே வந்திருக்காது. குஷ்பு அவர்களை வம்பிழுக்க உங்களுக்கு வாய்ப்பும் கிடைத்திருக்காது.

மேலும் நக்கீரன் இதழில்,

ஆடை அவிழ்ப்பவர்கள் எல்லாம் கற்பு பற்றி பேசும் கேடான நிலை வந்துவிட்டது எனவும் மலேசியாவில் தமிழன் கொடுமைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் அங்கு போய் குத்தாட்டம் போட்டு வந்துள்ளீர்கள் எனவும் குஷ்பு மீது குற்றஞ்சாட்டி யுள்ளீர்கள்.

பஞ்சாபிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தமிழர்களிடம் ஆடை அவிழ்த்துக் காட்டியே ஆக வேண்டும் என்னும் வெறியுடன் குஷ்பு வந்ததைப் போலல்லவா கூறுகிறீர்கள்? திரைத்துறையில் இருக்கும் நீங்கள் அதைச் சொல்லலாமா? இது நேர்மையற்ற குற்றச்சாட்டு என உங்களுக்கே தெரியாதா? உங்கள் தம்பி சீமானின் தம்பி பட விழாவில் சிங்கள நடிகை பூஜா ஒரு திருக்குறளைச் சொன்னாரே, பூஜா அவிழ்க்காத ஆடையா? நீயெல்லாம் திருக்குறளைச் சொல்லலாமா என அந்த மேடையில் மைக்கைப் படுங்க வேண்டியதுதானே?

மேலும் திரைப்படங்களில் நடிகைகளின் ஆடைகளை மக்கள் விரும்புகிறார்கள் என்ற சாக்கில் அவிழ்ப்பவர்கள் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தானே? குஷ்புவோ வேறு எந்த நடிகையுமோ இதற்கு எப்படிப் பொறுப்பாவர்கள்? சரி குஷ்பு ஆடை அவிழ்க்க சம்மதிக்கவில்லை என்றால் அப்படிப்பட்ட பாடல் காட்சிகள் ஆடையுடன்தான் வந்திருக்குமா? அவர் திரைத்துறையில் முன்னேற அவரது ஆடையைத் தான் அவிழ்த்தார். உங்களைப் போன்ற பாடலாசிரியர்கள், இயக்குநர்கள் அடுத்தவர் ஆடையையல்லவா அவிழ்க்கிறீர்கள். நீங்கள் பணியாற்றிய சிறைச்சாலையில் நடிகை தபு வின் உடலுக்கு முத்தத்தாலே சேலை நெய்யவில்லையா? நாணத்தாலோர் ஆடை சூடிக்கொள்ள வில்லையா? ஆற்றுநீரில் மோகன்லால் முழு ஆடையுடனும், தபு மட்டும் முக்கால் நிர்வாணத்துடனும் பாடும் காட்சி உங்கள் ஒத்துழைப்புடன்தானே படமாக்கப்பட்டது. அதற்கு திரைக்கதை வசனம் நீங்கள் தானே? ஊட்டி என்றால் குளிர்தான் உடனே மூளைக்கு எட்டும். உங்கள் பாடல் மூலம் தானே ஊட்டி சூடேற்றும் என்பதை உணர்ந்து கொண்டோம். இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுக்களைக் கூறலாம். இப்படிப்பட்ட நீங்களெல்லாம் கற்பு பற்றி பேசலாம், குஷ்பு பேசக்கூடாதா?

உங்களைப் போன்ற பாடலாசிரியர்களை விட, இயக்குநர்களை விட பலமடங்கு தகுதி போராளி குஷ்புவுக்கே உண்டு.

மலேசியாவில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படும் பொழுது குத்தாட்டம் ஆடினீர்கள் எனச் சொல்லியுள்ளீர்கள். குஷ்பு மட்டும் போய் தனியாக ஆடினாரா? உங்கள் இளைய திலகம் பிரபும் தான் ஆடினார் என செய்திகள் உள்ளனவே? வாழ்த்துக்கள் பாடல் வெளியீட்டு விழாவில் அவரையும் கண்டித்திருக்கலாமே. ஏன் கண்டிக்கவில்லை?

மலேசியாவில் தமிழர் கொடுமைப்படுத்தப்படுகிறார்களா? இல்லையா என்பது விவாதத்திற்குரியது. ஆனால் ஈழத்தில் … தமிழன் வாழவே முடியாத நிலை என்பதை நீங்களோ மனித உணர்வுள்ள எவனுமோ மறுக்க மாட்டான். அந்த ஈழப்பகுதிக்குச் சென்று வாழ்த்துக்கள் திரைப்படத்தின் பாடல் காட்சிகளை எடுத்துத்திரும்பினாரே சீமான், அவரைக் கேட்கவேண்டியது தானே. திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய உண்ணாநோன்பில் இருவரும் கலந்து கொண்டு பேசினீர்களே அப்போது சீமானிடம் இவ்வளவு கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று காதல் காட்சிகளை படம்பிடிக்கிறாயே? நீயெல்லாம் ஈழத்தமிழர்களைப் பற்றிப் பேசலாமா? எனக் கேட்டு மைக்கை பிடுங்கியிருக்கவேண்டியது தானே?

அதே விழாவில், குஷ்புவைப் பார்த்து, தங்கர்பச்சானை இழிவு படுத்தினாய். அவர் என் இனம். என் இரத்தம் என இரத்தபாசத்தைக் காட்டியுள்ளீர்கள். ஜெயா டி.வி நேர்காணலில் தங்கர் பச்சானைப் பற்றிக் கேட்டபோது, யார் அவன்? என குஷ்பு பதில் தந்தாராம். அதற்காக உங்கள் இரத்தம் கொதித்திருக்கிறது. நக்கீரன் இதழின் இணையப் பதிப்பில் மாறவர்மன் என்பவர் அது இரத்தபாசம் மட்டுமல்ல சாதிப்பாசமும்கூட. இருவரும் ஒரு சாதி என எழுதியுள்ளார்.

அப்படியெல்லாம் உங்களை நாங்கள் நினைக்கவில்லை. அதே சமயம்உங்கள் தங்கர்பச்சான் ஒருமுறை குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் பெரியாரை விட நான் அதிகம் சிந்திப்பவன் என திமிராகப் பேட்டி கொடுத்தானே மறந்துவிட்டீர்களா? பேட்டி கொடுத்து அடுத்த நாளே திருச்சியில் தமிழ்பாதுகாப்பு மாநாட்டில் நீங்களும் அவரும் இணைந்து பேசினீர்களே நினைவிருக்கிறதா? ஒரு பெரியார் தொண்டராக அந்த மேடையில் தம்பி என்ற உரிமையில் ஒரே அடியில் தங்கரின் காது சவ்வைக் கழித்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?

தங்கர் பச்சானை நோக்கி, யார் அவன்? எனக்கேட்ட ஒரே காரணத்திற்காகத் தான் குஷ்பு அவர்களை நாங்கள் போராளி குஷ்பு என்கிறோம்.

பெரியாரை எவன் வேண்டுமானாலும் கண்டபடி பேசலாம், பெரியார் கொள்கைகளை யார் வேண்டுமானாலும் வாய்க்குவந்தபடி விமர்சனம் செய்யலாம், யாருக்காகப் பெரியார் இறுதிவரை உழைத்தாரோ அந்த இனத்தையே பெரியாருக்கு எதிராகத் திசைதிருப்பி பார்ப்பான் காரியத்தை நிறைவேற்றலாம். பெரியார் கொள்கைகளுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்துக்கொண்டிருக்கும் தலைவர்களை மேடையிலேயே யார் வேண்டுமானாலும் தாக்கலாம், மோதிப்பார்ப்போம் என சவால் விடலாம், நேரடியாக மோத முடியாத பார்ப்பானெல்லாம் நம் தோழர்களைப் பயன்படுத்தி மோதிப்பார்க்கலாம்.

அப்போதெல்லாம் நீங்கள் வாயையும் கையையும் அடக்கிக்கொண்டு இருப்பீர்கள். பெரியார் கருத்தை ஆதரித்து குஷ்பு பேசினால் மட்டும் மேடையில் ஏறி மைக்கைப் பிடுங்கி வசனம் பேசுவீர்கள் என்றால் நீங்கள் பெரியாரைப் பேசுவதில், பெண்ணுரிமை பேசுவதில், சாதி ஒழிப்புப் பேசுவதில் ஏதோ உள்நோக்கம் - தவறான - இந்த இனத்திற்குக் கேடான உள்நோக்கம் இருப்பதாகத்தான் எமக்குத் தோன்றுகிறது.

பெண்ணுரிமை குறித்து உங்களைப் பேச அழைத்த தோழர்களெல்லாம், இயக்கம் கடந்த மகளிரெல்லாம் உங்களை நோக்கி இதைவிடக் கடுமையான விமர்சனங்களை வைக்கத் தயாராக உள்ளனர். இனிமேல் அவர் பங்கேற்கும் விழாக்களுக்கு அது யார் நடத்தும் விழாவாக இருந்தாலும் எங்களை அழைக்காதீர்கள் என எம் வீட்டுப் பெண்கள் உறுதியாக இருக்கின்றனர். பதில் சொல்வதோ, இவனெல்லாம் யார் என்னைக் கேட்க என எம் கேள்விகளைப் புறந்தள்ளுவதோ உங்கள் விருப்பம்.


இப்படிக்கு,

வெளிப்படையாக பதிலை எதிர்நோக்கும் தோழர்களில் ஒருவன்

அதி அசுரன்

இருவரின் கருத்துக்களையும் ஆழமாகப்படியுங்கள்.நாம் இன்னும் பயணிக்கும் பயணத்துக்கு சரியான இலக்கு எது என்பது புரியும்.

என் பழக்கங்கள்

கேள்வி : தங்களைப் போல் 95 வயது வரையிலும் வாழ்வதற்கு என்ன செய்யவேண்டும்?
பதில் : எப்போதும் ஆக்டிவாக (சுறுசுறுப்பாக) இருக்க வேண்டும்.


கேள்வி : இந்த வயதிலும், தாங்கள் பல மைல்கள் சுற்றுப் பயணம் செய்கிறீர்களே, உடல் நலம் பாதிக்காதா?
பதில் : வயதிற்கும், இதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. என்னைப் பொறுத்தவரை சும்மா இருக்கப் பிடிக்காது. சுற்றுப்பயணம் செய்தால் தான் நன்றாக இருக்கிறது.


கேள்வி : எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?
பதில் : சாதாரணமாக இரவு, 8, 9 மணிக்குத் தூங்கிவிடுவேன். பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சி-கள் இருந்தால், இரவு 11 மணிக்கு, 12 மணிக்கு மேல் தூங்குவேன். எப்படியும், 8 மணி நேரம் தூங்கிவிடுகிறேன்.


கேள்வி : தங்கள் உணவுப் பழக்கம் என்னென்ன?
பதில் : எப்பொழுதும், காலை 6 மணிக்கு எழுந்துவிடுவேன். 8 மணிக்கு 2 இட்டிலி, ஒரு வாழைப்பழம் சாப்பிடுவேன். முன்பெல்லாம், 4, 3 வாழைப்பழங்கள் சாப்பிட முடிந்தது. ஆனால், இப்போது ஒரு பழத்திற்கு மேல் சாப்பிட முடியவில்லை. அதன் பிறகு, பார்வை-யாளர்களைச் சந்திப்பேன். இடையிடையே சிறிது காப்பி, பால் அருந்துவேன். மதியம் 12--1 மணிக்குள் ஒரு கரண்டி சாதம், சிறிதளவு மாமிசம், தயிர், குருமா, ஒரு வாழைப்பழம் இதுதான் ஆகாரம். மாமிசம் சாப்பிடாவிட்டால் அவ்வளவு திருப்திகரமாக இருக்காது.


நிருபர் : மாமிசம் சாப்பிடுவதால் ஜீரண சக்தி பாதிக்கப்படவில்லையா?
பதில் : என்னைப் பொறுத்தவரை, மற்ற உணவுப் பதார்த்தங்களைவிட மாமிசம் சாப்பிட்டால் ஜீரணமாகிவிடுகிறது. அதனால் எந்தவிதத் தொந்தரவும் கிடையாது. மாமிசம் இல்லாவிட்டால் தான் தொந்தரவு. இரவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள் 2 இட்லி, ஒரு வாழைப்பழம், ஒரு டம்ளர் பால் அத்துடன் சரி. காப்பியும் பாலும் தான் முக்கிய உணவு.


கேள்வி : பொதுக்கூட்டங்கள், மற்ற நிகழ்ச்சிகள் உள்ள நாட்களில் என்ன செய்வீர்கள்?
பதில் : பொதுக்கூட்டங்கள், இரவு 10-11 மணிக்கு முடிந்ததும் அதன் பின்பு தான் சாப்பிடுவேன்.


கேள்வி : ஒரு நாள் பொழுதை எப்படிக் கழிக்கிறீர்கள்?
பதில் : முன்பெல்லாம் நிறையப் புத்தகங்கள் படிப்பேன்; எழுதுவேன். ஆனால் இப்போது படிக்கக் கஷ்டமாக இருக்கிறது. எழுதுவதற்குச் சலிப்பாக இருக்கிறது.
யாராவது கட்டுரைகள் கேட்டால் எழுதித் தருவேன். அத்துடன் முன்பு மாதிரி மூளை தெளிவாக இல்லை. கஷ்டப்பட்டுச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் ஒன்றைப் பற்றித் தொடர்ச்சியாக வரும். ஆனால் இப்பொழுது நினைவாற்றல் குறைந்து வருகிறது.


கேள்வி : மது அருந்தும் பழக்கம் பற்றித் தங்கள் கருத்து என்ன? தங்களுடைய அனுப-வத்தை அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
பதில் : இதுநாள்வரை நான் மதுவை அருந்தியதேயில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை பலருக்கு வாங்கிக் கொடுத்து இருக்கிறேன். மது அருந்துவதால் கெடுதி இல்லை. அளவுக்கு மேல் போனால் தான் எதுவுமே கெடுதலே தவிர, அளவோடு இருந்தால் எந்தவிதக் கெடுதலும் இல்லை. 100-க்கு 90 பேர் அளவோடுதான் குடிக்கிறார்கள்
.


கேள்வி : முன்பெல்லாம் மாலை நேரங்களில் கார் மூலம் உலாவப் போவீர்களே, இப்போது போவதுண்டா?
பதில் : என்றைக்காவது ஒரு நாள் போவேன். முன்புபோல் இப்போது போக முடிவதில்லை. பொழுது போகவே கஷ்ட-மாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட சமயங்களில் போவதுண்டு.


கேள்வி : கிளர்ச்சி, போராட்டம் நடத்த வேண்டும் என்கிறீர்களே, அது எப்படி இருக்கும்?
பதில் : என் உடல் வேண்டுமானால் தளர்ந்திருக்கலாம். ஆனால் நான் அவற்றில் நேரடியாகவே ஈடுபட நினைக்கிறேன். நான் என்ன சொல்லுகிறேனோ, அதை நானே முன்னின்று செய்தால் தானே நன்றாக இருக்கும்? ஒதுங்கிக் கொள்வது என்பது எனக்குப் பிடிக்காது.


கேள்வி : ஒரு குறிப்பிட்ட இனத்தார் மீது தங்களுக்கு வெறுப்பு ஏற்படக் காரணம், தாங்கள் அரசியலில் ஈடுபட்ட சமயத்தில் முதல் முதலாக ஒரு விருந்தில் தாங்கள் அலட்சியமாக நடத்தப்பட்டது தான் என்று சொல்லப்-படுகிறதே, அதுதான் உண்மையா?
பதில் : எனக்கு, யார் மீதும் வெறுப்புக் கிடையாது. நான் எதையும் லட்சியம் செய்யாமல், முரட்டுத்தனமாக யதேச்சையாகத் திரிந்தேன். அந்தச் சமயத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும் சமுதாயத்தில் இருந்த மூடப்பழக்க வழங்கங்களும் தான் காரணமே தவிர, வேறு காரணம் எதுவுமில்லை. ஆனால், அந்தக் காலத்தில் விருந்துகளில் கூட நம்மை மிக இழிவாகவும், தரக்குறைவாகவும் நடத்தி ஒதுக்கியே வந்தார்கள்
.


----------"மாலை முரசு"-16.9.1973 நாளிதழுக்கு தந்தைபெரியார் அளித்த நேர்காணல்

Thursday, March 20, 2008

இந்திய சமுதாயத்தில் ஜாதீ

இந்தியாவில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஜாதீயம் நான்கு பிரிவுகளாக ஆரம்பமாயி-ருக்கிறது. நாளடைவில் ஜாதிப் பிரிவுகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இன வேற்று-மையும், நிற வேறுபாடும், தொழில் வித்தியாசம் போன்றவை ஜாதீயம் ஏற்படுவதற்கு அடிப்-படைக் காரணங்களாக இருந்திருக்கின்றன. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் ஜாதிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கூடியிருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டு முதல் ஜாதிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. நீக்குப் போக்கற்ற தன்மையும், இறுக்கமும் நாளடைவில் கூடியிருக்கிறது.

தற்பொழுது, இந்திய சமுதாயத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாதிப்பிரிவுகள் உள்ளன. இந்திய சமுதாயம்தான் உலகில் மிக அதிகமான பிளவுகளுடைய சமுதாயமாகும்.
ஒவ்வொரு ஜாதிப்பிரிவினரும் தனித்தனியான சமுதாயமாகச் செயல்படுகிறார்கள். ஒவ்வொரு ஜாதிப்பிரிவினரும் தங்களுடைய ஜாதிப்பிரிவுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த அகமண முறையால், ஒவ்வொரு ஜாதியினரும் தங்களுக்கென்று தனி ஒழுக்க நெறிகளையும், பழக்க வழக்கங்-களையும், சடங்குகளையும், சம்பிரதாயங்-களையும் ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள். திருமண உறவை ஜாதிப்பிரிவுக்குள்ளேயே நடத்திக் கொள்வதால் ஜாதிப்பற்றும், வெறியும் மேலோங்கி நிற்கிறது. இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களிடம் கூட ஜாதீய உணர்வு தொடர்ந்து நீடிக்கிறது.

கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள் கூட பார்ப்பன கிறித்துகள் என்றும், நாயர் கிறித்துவர் என்றும் கூறிக்கொண்டு பெருமைப்-பட்டுக் கொள்கிறார்கள். இசுலாமிற்கு மாறியவர்கள் கூட ராஜ்புத், முசுலீம், தியாகி முசுலீம் என்று சொல்லிப் பெருமைப்-படு-கிறார்கள். தென் இந்தியாவில் உயர் ஜாதிகளி-லிருந்து கிறித்துவ மதத்திற்கு மாறியவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதிகளிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மாறியவர்களைச் சமமாக நடத்து-வதில்லை. அந்த அளவிற்கு, ஜாதிய உணர்வு இந்திய மக்களின் மனோநிலையை ஆட்டிப்-படைக்கிறது.
ஜாதீய உணர்வு மக்களது ஒழுக்கத்தையும் நடத்தையையும் வெகுவாகப் பாதிக்கிறது.

முதலாவதாக, தங்களுடைய ஜாதீய நலனைப் முக்கியமாகக் கருதும்படி செய்கிறது. ஜாதீய எல்லை-க்கு அப்பால் சிந்திக்காதவாறு எண்ணங்-களைக் கட்டுப்படுத்துகிறது. சமு-தாயத்-தின் பொது நலனிலும், முன்னேற்றத்-திலும் அக்கறை காட்டாமலிருக்கும்படி செய்து விடுகிறது.
சக மனிதர்களை மனிதர்களாக நோக்காமல், உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ நோக்கும்-படிச் செய்கிறது. பிற ஜாதீய மக்களைத் தேவையில்லாமல் சந்தேகத்துடன் நோக்கும்-படிச் செய்கிறது. ஜாதிப்படித்தட்டில் தன் ஜாதியை விடத் தாழ்ந்த படித்தட்டிலுள்ள மக்களை இழிவாக நடத்தும்படிச் செய்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், ஜாதீய உணர்வு மனித உறவைக் கொச்சைப்படுத்துகிறது. சக மனிதர்களிடம் நியாயமில்லாமல் நடக்கும்-படிச் செய்கிறது. இதனால், பல ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் கூட்டாக ஒரு காரியத்தில் ஈடுபடும்போது, ஒற்றுமையின்மை நிலவுகிறது. உள்சண்டை நிலவுகிறது.

ஜாதியினருக்கிடையே உள்ள பொறாமை உணர்வு ஒற்றுமைக்குக் கேடாக உள்ளது. ஜாதிப் போட்டியின் காரணமாக அரசியல், சமூக, பொருளாதாரச் செயல்பாடுகள் அனைத்தும் மந்தமாக நடைபெறுகின்றன. பல்வேறு ஜாதி மக்களிடையே நிலவும் போட்டியால், அதிக மனித சக்தி இப்போட்டி-யைச் சமாளிப்பதற்கே செலவாகிறது.

பார்ப்பனப் புரோகிதர்கள் ஜாதீயத்திற்கு மதச் சாயம் பூசி, அதைக் கடைபிடிப்பது மதக் கடமை என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஜாதீயத்தின் மூலமாக அவர்கள் பெரிதும் பயன-டைவதால், அவ்வாறு வியாக்யானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஜாதீயத்தைப் பற்றி பல குழப்பமான எண்ணங்கள் மக்கள் மனதை ஆட்கொண்டி-ருக்-கிறது. பெரும்பான்மை மக்கள் ஜாதீயத்தின் தீய விளைவுகளை உணராமல் இருக்கிறார்கள். உயர்கல்வி பெற்றவர்கள் கூட ஜாதீயம் என்பது கடைப்பிடிக்க வேண்டியதா அல்லது ஒழிக்-கப்பட வேண்டியதா என்பது பற்றி அறிவுத் தெளிவற்றவர்களாக இருக்கிறார்கள். இந்திய சரித்திரத்தைக் கவனமாகப் படித்துப் பார்த்தால், இந்திய சமுதாயம் அரசி-யல் ரீதியாகவும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் தாழ்ந்த நிலையை அடைந்த-தற்கு ஜாதீயமே காரணமாக இருக்கிறது. இந்திய சமுதாயம் பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்ததால், அயலார் படையெடுப்புகளில் தோல்வி கண்டது. அயலார்களிடம் அடிமைப்-பட்டது. மேலும், ஜாதீயம் வேலைகளில் உயர்வு தாழ்வு கற்பித்த காரணத்தாலும், உழைப்பவர்-களுக்கு தகுந்த உரிமையும், கவுரவமும் அளிக்-காத காரணத்தாலும் பொருளாதார சீரழிவும் ஏற்பட்டிருக்கிறது.
பெரும்பான்மை மக்களுக்குத் தங்களுடைய அறிவையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படாத காரணத்தால், அறிவியல் துறைகளிலும் பின்தங்கி, பெரும்-பான்மை மக்களின் மனித சக்தி, சமுதாயத்தின் வளத்தைப் பெருக்குவதற்கும், அறிவியல் வளர்ச்சிக் காரியங்களுக்கும் கிட்டவில்லை. ஒரு சமுதாயத்தின் மக்கள் ஒன்றுகூடி, ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால் முன்னேற்றம் அடைவதற்கான சாத்தியக்கூறு-கள் அதிகமாகிறது. சமுதாயத்தின் ஒழுக்க-நெறிகள் அனைவருக்கும் சம உரிமைகள் அளிக்கும் பட்சத்தில் மனிதசக்தி வீணாவது குறைகிறது. சம உரிமை அளிக்காத பட்சத்தில் மனித சக்தி வீணாவது அதிகமாகி விடுகிறது.

கடந்த சில நூற்றாண்டுகளில், இந்திய சமுதாயத்தில் பல நல்ல சமுதாய மாற்றங்கள் நடந்திருக்-கின்றன. பதினெட்டாம் நூற்றாண்-டில் இந்து சமுதாயத்தில் ஜாதியின் பெயரால் கொடுமைகள் கடுமையாகவும், கொடூர-மாகவும் இருந்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆங்கி-லேயர்-களின் ஆட்சி இந்திய சமுதாயத்தில் நல்ல பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது.

கல்வி பரவலாக்கப்பட்டது சமூக மாற்றத்-திற்கு உதவியது. அனைத்து மக்களும் தங்களு-டைய சாதிக்குரிய வேலைகளைச் செய்யாமல், வேறு தொழில்களை அல்லது வேலைகளை மேற்கொள்ள வாய்ப்பளித்தது. சுதந்திரம் அடைந்தவுடன் இந்திய அரசு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் உயர்விற்கான காரியங்களில் கவனம் செலுத்தியது. கல்வியி-லும், பொருளாதாரத்திலும் பின்தங்கியிருந்த சாதி மக்களை கல்வியிலும், பொருளாதாரத்-திலும் உயர்த்த பல நடவடிக்கைகள் எடுத்தன. இந் நடவடிக்கைகள் பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தின.

இதுதவிர, தொழில் வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, போக்குவரத்து சாதனங்களின் வளர்ச்சி போன்றவைகளின் பலனாக பல்வேறு ஜாதி மக்களும் நெருங்கிப் பழக வாய்ப்பு ஏற்பட்டன. ஒவ்வொரு ஜாதியினரும் பிற சாதியினரைப் பற்றிக் கொண்டிருந்த தப்-பெண்ணங்-கள் நீங்கின. இம்மாற்றங்களால், ஜாதியின் அடிப்படையில் நிகழ்ந்து கொண்டி-ருந்த கொடுமைகள் குறைந்தன.

மனிதன் இயற்கையில் சமூக வாழ்க்கை வாழ விரும்புகிறவன் என்பது மனோதத்துவர்களின் கருத்து. சக மனிதர்களுடன் இணக்கமாக வாழ மனிதன் பழக்கப்படுத்த வேண்டியதில்லை. மனிதனிடம் இத்திறன் இயற்கையாகவே இருக்-கிறது. உலக மக்கள் அனைவரும் சமத்துவ கருத்தை ஏற்று, சக மனிதர்களுடன் இணக்க-மாக வாழத் திறன் உடையவர்கள். இந்திய மக்களும் சமத்துவ கருத்துகளை ஏற்கும் திறன் படைத்தவர்கள்தான். நம்நாட்டில் இந்து மதமும், ஜாதீயமும் தான் சமத்துவ கருத்துகளை ஏற்பதற்குத் தடைகளாக இருக்கின்றன.
ஜாதீயத்தைப் பற்றி சரித்திர அறிஞர், அர்னால்ட் டாயின்பீ தன்னுடைய சரித்திர ஆய்வு என்ற புத்தகத்தில் ஜாதீயம் சமூகத்தின் பெரிய தீய சக்தியாக உருவாகும் வாய்ப்போடு இருக்கிறது; ஜாதீயம் மதத்தின் சம்மதத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றவுடன் அதனுடைய தீயவிளைவுகள் மிகவும் பேருரு நிலைக்கு வளர்ந்து விடுகிறது என்கிறார். அவர் விமர்-சனம் செய்ததுபோல், ஜாதீயம் இந்திய சமுதாயத்தை இழிவான நிலைக்கு இட்டுச் செல்லும் பயங்கரவாதியாகச் செயல்படுகிறது.

உண்மையான மதத்திறன் குறிக்கோள் சக மனிதர்களிடம் அன்பு செலுத்தவும், சமுதாய நலனுக்கும், உயர்வுக்கும் உழைக்கும் ஆர்வத்-திற்குத் தூண்டுகோலாகச் செயல்படுவதாகும் எனப்படுகிறது. மனித சமுதாய நலனுக்குத் தன்னுடைய சக்தியை சந்தோஷமாகவும், இலவசமாகவும் அர்ப்பணிக்கக்கூடிய மனோநி-லையைக் கொண்ட சுதந்திரமான, பொறுப்-பான நபர்களை உருவாக்குவது தான் உண்மை-யான மதத்தின் இலக்கு என்று புகழ்பெற்ற விஞ்ஞானி அல்பெர்ட் அய்ன்ஸ்டைன் சொல்கிறார். மதம் சம்பந்தமான விளக்கங்களை ஒப்புக் கொண்டால், இந்து மதம் உண்மை-யான மதம் அல்ல.

இந்து மதத்துறவி விவேகானந்தர் இந்து மதத்தின் இக்குறைபாட்டை உணர்ந்து ஜாதீயத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்-தார். உலகில் எந்த மதமும், தன்னுடைய மத நம்பிக்கையாளர்களை, இந்து மதம் கொடு-மைப்-படுத்துவது போல் செய்வதில்லை என்கிறார். இதற்கு நிவாரணமும் சொன்னார். இந்து மதம், இஸ்லாம் மதத்தின் சமத்துவ கொள்கையையும், கிறிஸ்துவமதத்தின் தொண்டு மனப்பான்மையையும் உள்வாங்கிக் கிரகித்துக் கொள்ள வேண்டும் என்றார். இந்து மதம் அவ்வாறு செய்யாவிட்டால், பிழைக்-காது என்று எச்சரித்தார்.

ஜாதீயத்தின் தன்மை வலிமை இழந்து கொண்டே போகிறது. ஆனால் ஜாதி என்ற குழு உணர்வு வலிமை பெற்றுவிட்டது. இப்போக்கு கட்டுப்படுத்தப் படாவிட்டால் சாதிச் சண்டைகள் பெருகி விடும். பொருளா-தார நிலை உயர்வால் மட்டும் ஜாதீய உணர்வை வலுவிழக்கவோ, சாகடிக்கவோ இயலாது என்பதுதான். மனமாற்றம் மூலமாகவே ஜாதீய உணர்வைப் போக்க முடியும்.

மனமாற்றம் நடைபெற மக்களிடையே விழிப்புணர்ச்சி உண்டாக்குவதுடன், ஜாதீயத்-தை பல்வேறு முனைகளில் தாக்க வேண்டும். ஜாதீயத்தை நிலைநாட்டும் அனைத்து அமைப்புகளையும் அழிக்க வேண்டும். ஜாதீயம் சம்பந்தமான அறிவுபூர்வமான விவாதங்களை ஊக்குவிக்க வேண்டும். ஜாதீயத்தை ஒழிக்க வேண்டியதின் காரணங்களை வெகுஜன ஊடகங்கள் மூலமாகத் தெளிவாக விளக்க வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஏனெனில், அது ஜாதீயத்தை ஒழிக்க நல்ல கருவியாகும்.
அரசியல் கட்சிகள் ஜாதிப் பிரச்சினையைத் தொடவும், தலையிடவும் விரும்பவில்லை. பல அரசியல் கட்சிகள் ஜாதீயம் முக்கியமற்ற பிரச்சினை என்று கருதுகின்றன. சில அரசியல் கட்சிகள், ஜாதீயம் ஒரு சிறு சமூகப் பிரச்சினை என்று சொல்லித் தப்பித்துக் கொள்கின்றன. அனைத்து அரசியல் கட்சி-களும் ஜாதியப் பிரச்சினையில் தலையிடத் தயாராய் இல்லை.

உண்மையில், பல அரசியல் தலைவர்கள் ஜாதியமைப்பை தங்களுடைய செயல்பாடு-களுக்கு வசதியாகக் கருதுகின்றனர். சாதி உணர்வைத் தூண்டி தேர்தல்களில் எளிதாக வெற்றிபெற முடிவதால், ஜாதியமைப்பை வசதியாகக் கருதுகின்றனர்.

ஜாதி அமைப்பிலிருந்து வெளிவருபவர்களுக்கு, அரசு சமூக பாதுகாப்பு அளிக்கவேண்டும். சாதீய கட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களை சமூக பிரதிஷ்டம் செய்தல், சமூகத்திலிருந்து விலக்கல் போன்ற நியாயமற்ற செயல்பாடுகள் சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகக் கருதவேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறிய கருத்துகள் ஆழ்ந்து சிந்திக்கப்-பட வேண்டியவை. ஜாதிக் கட்டுப்பாடு-களுக்குக் கட்டுப்பட மறுப்பவர்களை சமூக பிரதிஷ்டம் செய்து, துன்பப்படுத்தும் செயல்பாடுகள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகக் கருதப்-பட வேண்டும். அவற்றைச் செயல்படுத்தும் ஜாதீயத் தலைவர்கள்மீது சட்டப்படி நட-வடிக்கை எடுக்க வேண்டும்.

அய்ரோப்பாவின் சமூக முன்னேற்றத்தைப் பார்த்தால், மேற்கு அய்ரோப்பாவில் கி.பி.14-ஆம் நூற்றாண்டு தொடங்கி 17ஆம் நூற்-றாண்டு வரையிலான காலகட்டத்தில் அறிவி-யல் மறுமலர்ச்சி அல்லது புத்துணர்வு ஏற்பட்டிருக்-கிறது. பதினாறாம் நூற்றாண்டி-லிருந்து 17ஆம் நூற்றாண்டுக் கால கட்டத்தில் பிரபுத்துவ மதிப்பீடுகள் முன்னேற்றத்திற்குத் தடைகளாக இருப்பதை உணர்ந்தார்கள். உடன் அம்மதிப்பீடுகளை நீக்கிக் கொண்டார்-கள். சமத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்டார்கள். சமத்துவத்தின் அடிப்-படையில் சமூக அமைப்பையும், ஒழுங்கையும் மாற்றிக் கொண்டார்கள்.

அவர்கள் மாற்றம் செய்து கொண்டது போல், நாம் சமத்துவமின்மையை நிலை-நாட்டும் நம்பிக்கைகளையும், பழக்க வழக்-கங்களையும் ஒழிக்கவேண்டும். சம உரிமை-யையும், சம வாய்ப்பை அளிக்கும் அனைத்து மதிப்பீடுகளையும் செயல்படுத்த வேண்டும். ஜாதீயத்தை மேன்மைப்படுத்தும் பல நம்பிக்-கைகளையும், பழக்க வழக்கங்களையும் ஒட்டு மொத்தமாக மாற்றுவதன் மூலமே, நாம் ஜாதீயத்தின் பிடியிலிருந்து விடுபட முடியும்.

நம்முடைய சமுதாயத்தில் பல ஜாதிகளைச் சார்ந்த மக்களுக்கிடையேயான திருமணங்களை எளிதாகப் பிரபலப்படுத்தி விடலாம். இது அமெரிக்க அய்க்கிய நாட்டில் அல்லது தென் ஆப்ரிக்காவில் இரு இன மக்களிடையே (வெள்ளை, கருப்பு என்ற இரு நிறத்தவரிடையே) திருமணங்களைப் பிரபலப்படுத்துவது போல் கடினமான காரியமல்ல. நம்முடைய சமுதாயத்தில் பல்வேறு ஜாதியினருக்கிடையே திருமணங்களைப் பிரபலப்படுத்துதல் மிக எளிதானது. ஏனெனில், புறத்தோற்றத்தைப் பார்த்தோ, தோலின் நிறத்தைப் பார்த்தோ, தலை மயிரின் தன்மையைப் பார்த்தோ ஒருவரின் ஜாதியைச் சொல்ல இயலாது.
ஆகவே, சமத்துவ மனப்பான்மையை நன்கு பரவலாக்கினால், பல்வேறு ஜாதிகளை ஒன்றாக இணைத்து, நம்முடைய சமுதாயத்தை சாதியற்ற சமுதாயமாக மாற்றுவது மிக எளிதான காரியமாகும்.

-------------- நன்றி: உமன்ஸ் எரா, புதுடில்லி